ஹலோ With காம்கேர் -314: நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 314
November 9, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’  – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா?

நேற்று (நவம்பர் 9, 2020) அன்று அம்பத்தூர் சிரிப்பரங்கம் நிகழ்ச்சிக்கு சிரி(ற)ப்பு விருந்தனராகவும் அழைக்கப்பட்டிருந்தேன். ஆன்லைனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  ‘நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்துவது சாத்தியமா’ என்பது குறித்து பேசினேன். தலைப்பையும் நானேதான் தேர்ந்தெடுத்தேன்.

அதன் சாராம்சம்:

ஒருமுறை என் நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சியில் மூன்று பேச்சாளர்களை அழைத்திருந்தேன். முதலில் பேசிய இரண்டு பேச்சாளர்களும் தங்கள் துறை சார்ந்து பேசினார்கள். மூன்றாவதாக பேசியவர் தன் பேச்சின் ஊடே நகைச்சுவையாக இடையிடையே ஜோக்குகள் சொல்லி பார்வையாளர்களை மகிழ வைத்தார். பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்து சந்தோஷமாக இருந்தனர்.

வழக்கம்போல் நாம் மிகவும் சீரியஸாக இருந்தேன். என் கவனம் முழுவதும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்கின்ற அக்கறையுடன் சில வேலைகளுக்கு நடுநடுவே பேச்சாளர்களின் உரைகளை கவனித்தேன்.

என் நிறுவனத்தில் ஆடியோ, வீடியோ, புரொஜெக்ட்டர் போன்ற தொழில்நுட்பங்களை கவனிப்பதற்கும், பார்வையாளர்களின் தேவைகளை கவனிப்பதற்கும் உதவியாளர்கள் இருந்தாலும் என் உடலும் மனமும் அடுத்தடுத்து நடைபெற வேண்டிய நிகழ்வுகளிலும், நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்கின்ற அக்கறையுடனுமே இருக்கும். மேடையில் பங்கேற்கும் பேச்சாளர்கள் சிறப்பு விருந்தினர்கள் என்றால், என்னைப் பொருத்தவரை பார்வையாளர்கள் ‘மெகா சிறப்பு விருந்தினர்கள்’.

இருசாராரும் நிகழ்ச்சியின் முடிவில் மகிழ்ந்து வாழ்த்திச் செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.

எனவே, நானும் ஓரிடத்தில் அமர்ந்து மேடையில் நடைபெறும்  ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனிக்க இயலாது. ஆனால் ஒட்டு மொத்த நிகழ்ச்சியை நகர்த்திக்கொண்டு செல்வதே என் கண்காணிப்பில்தான் இருக்கும்.

இதனால் நகைச்சுவையோ, சீரியஸோ எல்லாமே எனக்கு அந்த நேரத்தில் ஒரே மாதிரிதான் உள்ளுக்குள் செல்லும்.

மற்றொரு நிகழ்ச்சியில் எங்கள் நிறுவன லிஃப்ட் வேலை செய்யாமல் பாதியிலேயே நின்று பார்வையாளர்கள் இருவர் அதில் மாட்டிக்கொண்டுவிட அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனால் நிகழ்ச்சி தொய்வின்றி நான் ஏற்பாடு செய்திருந்த அதே ஃபார்மேட்டில் நடந்துகொண்டுதான் இருந்தது.

ஒரு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டுமானால் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்கும்போது அந்த ஆசிர்வாதம் தானாகவே கிடைக்கப்பெறும்.

வயல்வெளியில் விதை நட்டபின்  அந்த வயலின் சொந்தக்காரரோ அல்லது அதை கவனிக்க நியமிக்கப்பட்ட நபரோ தினமும் அந்த வயலை ஓரிரு முறை சுற்றி சுற்றி வந்து நேரடியாக பார்வையிட்டுவிட்டுச் செல்வார். விதை தூவியவுடனேயே முளைத்துவிடவா போகிறது. அது முளைக்க நாள் எடுக்கும் தானே? பிறகு ஏன் தினமும் வந்து கவனிக்கிறார்கள்.

அப்படி பார்த்து பார்த்து கவனித்தால்தான் வயல்வெளியும், மண்ணும், விதைக்கப்பட்ட விதைகளும், அங்குள்ள காற்றும் சூழலும் உற்சாகத்துடன் இருக்கும், செழிப்பாக முளைவிட்டு வளரும் என சொல்வார்கள்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லாவா?

உண்மைதான் இது. நாம் பார்த்துப் பார்த்து செதுக்கும்போதுதான் எந்த ஒரு பணியும் சிறக்கும். அது சிறியதோ, பெரியதோ. வீட்டுக்காகவோ அல்லது நாட்டுக்காகவோ.

அதே மனநிலையில்தான் எனக்கும். நான் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில்  என் கவனம் முழுவதும் நிகழ்ச்சியில் மட்டுமே இருக்கும். அதனால் ஆரவாரமாக சிரிப்பதற்கோ, கைதட்டி மகிழ்வதற்கோ வாய்ப்பில்லை. ஆனால் நிகழ்ச்சியின் சாராம்சத்தை ஒன்றுவிடாமல் உள்வாங்கிக்கொண்டே இருப்பேன்.

சரி, இந்தப் பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் நகைச்சுவையாக பேசிய பேச்சாளர் என்னிடம் வந்து ‘நிகழ்ச்சியில் எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்கள். மேடம் மட்டும் சிரிக்கவே இல்லை. சீரியஸாக இருந்தார்…’ என சொன்னபோது அவருக்கு வேறொரு உதாரணத்துடன் விளக்க வேண்டியதாயிற்று.

திருமண நிகழ்ச்சியில், கல்யாண மண்டபமே திருமணக் கோலம் பூண்டு மகிழ்ச்சியாக இருக்கும். விருந்தினர்கள், உறவினர்கள் சூழ்ந்திருக்க மணமக்களும் என ஒரே கொண்டாட்டமாக இருப்பார்கள். குழந்தைகள், இளைஞர்கள், வயதில் பெரியோர்கள் என ஒவ்வொருவரும் தங்கள் வயதுக்கு ஏற்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஆனால் மணப்பெண்ணின் பெற்றோரும், (இப்போதெல்லாம்) மணமகனின் பெற்றோரும் வெகு சீரியஸாக பரபரவென அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள். முகம் சோர்வாக இருக்கும்.

காரணம் திருமண நிகழ்வு நல்லபடியாக நடைபெற வேண்டும். ஏற்பாடு செய்துள்ள விருந்தில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது. விருந்தினர்கள் அனைவரும் மனமகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருப்பர்.

அதனால் அவர்கள் முகத்தில் சிரிப்பு இருக்காது. உள்ளத்தில் உற்சாகம் இருந்தாலும் முகத்தில் அது சிரிப்பாக, கொண்டாட்டமாக வெளிப்படாது. அவ்வளவுதான்.

நிகழ்ச்சி முடிந்து வீடியோ கைக்குக் கிடைக்கும்போதுதான் திருமண நாள் நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என்பதையெல்லாம் பார்த்து ரசிப்பார்கள். நெகிழ்வார்கள்.

அதுபோன்ற ஒரு மனநிலையில்தான் நான் ஏற்பாடு செய்யும் எங்கள் நிறுவன நிகழ்ச்சிகளில் என் மனநிலை இருக்கும்.

நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்களும், பேச்சாளர்களும் மனமகிழ்ந்து விடைபெறும் போதுதான், என் மனதில் உள்ள நகைச்சுவை உணர்வும்  உற்சாகமும் மன நிம்மதி வடிவத்தில் வெளிப்படும்.

எங்கள் நிறுவனத்தில் குழந்தைகளுக்காக அனிமேஷன் தயாரிப்புகள் பல தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். அதில் பலவற்றில் என் குரலை மாற்றி, மிமிக்கிரி செய்து குதூகலத்துடன் உற்சாகத்துடன் நான்தான் குரல் கொடுத்திருப்பேன்.

மனதில் உற்சாகமும், நகைச்சுவை உணர்வும் இல்லையென்றால் எப்படி அத்தனை குதூகலம் என் குரலில் வெளிப்படும். அனிமேஷனுக்காக எங்கள் நிறுவன அனிமேஷன் டீமினால் வரையப்படும் ஓவியங்களுக்கும் பெரும்பாலும் நான் தான் ஸ்டோரிபோர்ட் தயாரித்துக்கொடுப்பேன். அந்த ஓவியங்களும், பின்னணி குரலும் என் நகைச்சுவை உணர்வின் எல்லையை வெளிப்படுத்தும்.

இதுபோன்ற தயாரிப்புகளில் என் நகைச்சுவை உணர்வு அழகுணர்ச்சியுடன் துள்ளளுடன் குதூகலத்துடன் வெளிப்படும்.

சமயத்துக்கு ஏற்ப, சூழலுக்குக் கட்டுப்பட்டு, என் நிலை அறிந்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதம் மாறுமே தவிர நான் சீரியஸாக இருப்பதால் நகைச்சுவை உணர்வே இல்லை என்றாகிவிடாது.

பொதுவாகாவே சீரியஸாக இருப்பவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்காது, கோபமாக இருப்பார்கள், கடுமையான நடந்துகொள்வார்கள் என பொதுவிதியில் அவர்களை கொண்டுவந்துவிட வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அவர்களின் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். அவ்வளவுதான். 

வீடியோவில் என் உரையுடன் நான் மிமிக்கிரி செய்த எங்கள் நிறுவன அனிமேஷன் தயாரிப்பின் சிலவற்றையும் இணைத்துள்ளேன். தவறாமல் பார்க்கவும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 7,002 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon