ஹலோ with காம்கேர் – 317
November 12, 2020
கேள்வி: விதிவிலக்குகளை மட்டுமே நம்பி சமூக வலைதளங்களில் ரிலாக்ஸ்டாக பயணிப்பது சாத்தியமா?
சமூக வலைதளங்களில் தொடர்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் ‘நேரடியாக’ அறிமுகம் ஆகாதவர்களாகவே இருப்பார்கள். அப்படி இருக்கும்போது அவர்களை ‘சார், மேடம்’ என்ற மரியாதையுடன் அழைப்பதுதான் நீண்டகால நல்லதொரு தொடர்புக்கு வழிவகுக்கும் என்பது குறித்து இரண்டு தினங்களுக்கு முன்னர் இதே ‘ஹலோ With காம்கேர்’ பதிவில் எழுதி இருந்தேன்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் சமூகவலைதளங்களில் இயங்கி வருகிறேன். இன்றுவரை நான் என்ன எழுதி இருக்கிறேனோ அதன்படிதான் செயல்பட்டு வருகிறேன். அதையே பிறரிடமும் வலியுறுத்துகிறேன். ‘பேசும்’போதும் ‘எழுதும்’போதும் ‘அழைக்கும்’போதும் இதேயேதான் பின்பற்றுகிறேன். நாளடைவில் மாற நினைக்கும் மனம் கொண்டவர்கள் அதுபோல மாறுகிறார்கள்.
என் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், என் அலுவலக வல்லுநர்கள் என யாரையும் சமூக வலைதள தொடர்பில் வைத்துக்கொள்வதில்லை. அதுபோல என் சொந்த சகோதரி சகோதரன் மற்றும் அவர்களின் வளர்ந்த குழந்தைகளின் புகைப்படங்களைக் கூட பகிர்வதில்லை. அவர்களின் பெயர்களை டேக் (Tag) செய்வதில்லை.
காரணம் இதுதான்:
நமக்கு தொல்லைக் கொடுக்க நினைப்பவர்கள் நம்மிடம் நேரடியாக மோதாமல் நம் வீட்டு இளம் தலைமுறையினரை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை அல்லவா குறி வைத்து தாக்குகிறார்கள். இது முதன்மைக் காரணம்.
அடுத்து, சமூக வலைதளங்களில் எத்தனைதான் பாதுகாப்பாக இருந்தாலும் நமக்கு லைக், கமெண்ட் போடுபவர்களின் ப்ரொஃபைல் படம் உட்பட அவர்களின் சுய விவரங்கள், அவர்களின் மனைவி / கணவன் / குழந்தைகளின் விவரங்கள் என அவர்களின் ஜாதகத்தையே அலசி ஆராய்ந்து நட்பு அழைப்பு கொடுப்பது நட்பாகிக்கொள்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் செக்யூரிட்டி செட்டிங் செய்துகொள்ளலாமே என யாரும் ஆலோசனை சொல்ல வேண்டாம். ஏனெனில் நான் என் அளவில் செக்யூரிட்டி லாக் செய்துகொள்ளலாம். எனக்கு லைக், கமெண்ட் போடுபர்கள் அத்தனை பேரும் அப்படி செய்துகொண்டிருப்பார்களா என பார்த்து பார்த்து நான் இயங்குவது சாத்தியமில்லைதானே.
அப்படித்தான் நட்பு அழைப்பு கொடுத்து நட்பாகிக்கொள்கிறார்களே, நல்ல நண்பர்களாகவாவது இருக்கலாம் அல்லவா, இருக்க மாட்டார்கள். அந்த நட்புகளுக்கு குறிப்பாக அவர்கள் குடும்பத்து இளம் பெண்களுக்கு தொல்லை கொடுப்பது, மெசஞ்சரில் சென்று ‘So Sweet. என்ன அழகு’ என ஆசை வார்த்தைகள் காட்டி தூண்டில் போடுவது என தொடர்கிறது.
இதில் எல்லாம் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அந்த விதிவிலக்குகளை மட்டுமே நம்பி நாம் சமூக வலைதளங்களில் பயணிக்க முடியாது அல்லவா?
பெண்களை துன்புறுத்துவதில் பலவகை உண்டு.
- கொடூரமாக வன்கொடுமை செய்வது உச்ச கட்டம்.
- மென்மையாக அவர்களை பாராட்டுவதுபோல பாராட்டி சீண்டி சீண்டி அவர்களை கோபப்படுத்துவது / எரிச்சல்படுத்துவது / மட்டப்படுத்துவது ஒருவகை.
- மெசஞ்சர், வாட்ஸ் அப் எண்களுக்குச் சென்று குட்மார்னிங், குட்நைட் தகவல்கள் அனுப்பி தினமும் அவர்களை வர்ணிப்பது. இதைத்தாண்டி அவர்கள் ஏதும் செய்வதில்லை. ஆனால் இப்படி செய்வது தவறு, அசிங்கம், வீட்டில் அழகான மனைவியும், டீன்ஏஜ் மகளையும் மகனையும் வைத்துக்கொண்டு இப்படி நடந்துகொள்வது அவமானம் என தெரிந்தும் ஒருவித போதையில் மென்மையாக பெண்களை துன்புறுத்துகிறார்கள்.
இந்தவகை கொடுஞ்செயல் செய்பவர்களில் உயர்கல்வி படித்தவர்களும், நல்ல வாசிப்பாளர்களும், சமுதாயத்தில் பிரபலம் என முத்திரைக் குத்தப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
இப்போதெல்லாம் பெண்கள் இதையெல்லாம் சமாளித்து சரியான பதிலடிக் கொடுத்து மீண்டு வருகிறார்கள் என்றாலும் இளம் பெண்கள் இதன் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டுமே என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு.
அண்மையில் என்னிடம் 12-ம் வகுப்பு மாணவியின் கவுன்சிலிங்கிற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆண் நட்புகளுடன் தொடர்பு ஏற்பட்டு எல்லை மீறி, ஒரு சினிமா துறை சார்ந்த ஒருவர் தவறான நடவடிக்கையினால் சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு செல்ல முடிவெடுத்ததை கடைசி நேரத்தில் வாட்ஸ் அப் தகவலில் எதேச்சையாக பார்த்து கண்டறிந்த அவள் பெற்றோர் அவளை மீட்டெடுத்தனர்.
மொபைல் போன் இல்லாவிட்டால் போதைக்கு அடிமையானவர்கள் போல் ‘அம்மா ப்ளீஸ், கொஞ்ச நேரம் போன் கொடும்மா, என்னால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பார்க்காமல் இருக்க முடியலைம்மா…’ என கதறுகிறாளாம். காலைப் பிடித்துக்கொண்டு தன்னையே அடித்துக்கொண்டு அழுகிறாளாம்.
அவளுடைய இந்த வேதனையினால் போனை கொடுத்துவிட்டு அவள் அருகிலேயே அமர்ந்து அவளை கண்காணித்து பின்னர் வாங்கி மறைத்து வைத்து விடுகின்றனராம்.
இதுபோல இளம் பெண்களிடம் அவர்களின் அழகை வர்ணிப்பது, அவர்களின் பெற்றோர் குறித்து எதிர்மறையாக சொல்லி தாங்கள் அவர்களின் கற்பனையான வாழ்க்கையை நிஜமாக்குவோம் என சொல்லி அவர்களை தங்கள்பால் ஈர்ப்பது என மோசமான நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற பிரச்சனைகள் என் குடும்பத்திலும், உறவினர்களிடத்திலும், என் அலுவலக வல்லுநர்களிடத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் அவர்களை சமூக வலைதளங்களில் தொடர்பில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் அவற்றில் என்ன பதிவிடுகிறேனோ அவை எங்கள் குடும்ப வாட்ஸ் அப் குரூப், அலுவலக பிசினஸ் குரூப் மற்றும் பணியாளர்களின் வாட்ஸ் அப் குரூப் இவற்றில் ஷேர் செய்து விடுவேன்.
நான் இப்படி இருப்பதுதான் அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதை அறியாமல் சொன்னாலும் புரிந்துகொள்ளாத ஒருசிலருடன் மனஸ்தாபமும் ஏற்பட்டுள்ளது. காரணம் நான் அவர்களின் நட்பு அழைப்பை ஏற்கவில்லை என்பதே.
விதிவிலக்குகளை மட்டுமே நம்பி சமூகவலைதளங்களில் ரிலாக்ஸ்டாக பயணிப்பது சாத்தியம் இல்லை. எனவே எப்போதுமே கவனத்துடன்தான் பயணிக்க வேண்டும். நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளாமல் வேறு யார் வைத்துக்கொள்வார்கள். கவனம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software