ஹலோ with காம்கேர் – 347
December 12, 2020
கேள்வி: உங்கள் அனுபவங்களை பிறருக்கு பாடமாக்கலாமா?
வயதில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளை அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றி இருப்பார்களா என எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
எனக்குத் தெரிந்து சொந்தமாக ஒரு அச்சு பத்திரிகை நடத்தி வரும் எடிட்டர் ஒருவர் ‘குழந்தைகளை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்வது?’ என ஒரு இணைப்புப் புத்தகம் ஒன்றை அவரது மாதந்திர பத்திரிகையுடன் வெளியிட்டார்.
அதில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் எப்படி நேரம் செலவழிக்கலாம், எப்படி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்தெல்லாம் விரிவாக சொல்லி இருந்தார். பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய புத்தகம்தான் அது.
அந்த இணைப்புப் புத்தகம் குறித்து அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன கருத்து ஆச்சர்யப்படுத்தியது.
‘நான் எப்படி எல்லாம் அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறேனோ, அதன்படி என்னால் நடந்துகொள்ள முடிந்ததே இல்லை. தினமும் என் மகனை தனிமையில் விட்டுவிட்டுத்தான் பத்திரிகை பணிகளில் கவனம் செலுத்துகிறேன். அவனுடன் சனி ஞாயிறு கூட நேரம் செலவழிக்கவே முடிவதில்லை. எனக்கு நேரம் கிடைக்கும்போது அவனுக்கு பள்ளியில் ஏதேனும் நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள். அவனுக்கு நேரம் கிடைக்கும்போது எனக்கு அவசர மீட்டிங்குக்கான அழைப்புகள். ஒருநாளும் அவனை மகிழ்ச்சியாக வைத்திருந்ததாக எனக்கு தோன்றவில்லை. எனக்கு அது சற்று குற்ற உணர்ச்சியாகவே உள்ளது. வேறு வழியில்லை. அப்பா இல்லாத குழந்தையை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்லவே. அவனுக்கும் எனக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறதே தவிர குறையவே இல்லை…’ என்று சொன்னார்.
உண்மைதான். ஆலோசனை கொடுப்பதைப் போல எல்லோராலும் நடந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் அருமையிலும் அருமையாகவே இருக்கும். காரணம் அவர்கள் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ அல்லது எப்படி எல்லாம் வாழ ஆசைப்படுகிறார்களோ அதையெல்லாம் ஆலோசனைகளாக கொடுக்கிறார்கள்.
வயதில் பெரியவர்களும் அப்படித்தான். அவர்கள் வீட்டில் அறிவுரைகள் வழங்கும்போது ‘நான்தான் இப்படி இருந்துட்டேன்… நீயாவது உன் வாழ்க்கையை இப்படி சரிசெய்துக்கோ…’ என சொல்வதை கவனித்திருப்பீர்கள். இங்கும் மேலே சொன்ன பத்திரிகை ஆசிரியரின் செயல்பாட்டைப் போல்தான். தாங்கள் வாழ்க்கையில் தவற விட்டதையெல்லாம் எப்படி வாழ்ந்தால் எப்படி சாதிக்கலாம் என அறிவுரையாகவும் ஆலோசனையாகவும் வழங்குவார்கள்.
ஆனால் என்ன எல்லோருக்குமே தாங்களே அடிபட்டு தட்டுத்தடுமாறி மேலே வரும்போதுதான் வாழ்க்கை புரிபடுகிறது. அனுபவஸ்தர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கேட்பதற்கு காதுகளும், உள்வாங்கிக்கொள்ள மனதும் தயாராக இருப்பதில்லை.
ஒரு விஷயத்தை உதாரணமாக சொல்ல நினைக்கிறேன்.
பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஐந்தாம் வகுப்பு கணக்குகள் சுலபமாக இருப்பதைப் போல இருக்கும். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புப் பாடங்கள் சுலபமாகப் புரிவதைப் போல் இருக்கும். அதாவது அடுத்தடுத்த வகுப்புகள் செல்லும்போது முந்தைய வகுப்பின் பாடங்கள் ‘அட இவ்வளவு சுலபமா இருக்கே, இதற்கா நாம் அவ்வளவு கஷ்டப்பட்டு மண்டையை உடைத்துக்கொண்டு படித்தோம்…’ என நாமே வியக்கும் அளவுக்கு எளிமையாக இருக்கும். நம் வீட்டில் அந்தப் பாடங்களை நம் இளைய சகோதரன் சகோதரிக்கு சொல்லிக்கொடுத்து உதவும்போது நம்மால் உணர முடியும்.
எனக்குத் தெரிந்த கணித ஆசிரியர் ஒருவர். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தில் 100-க்கு 100 எடுக்க வைப்பதில் பெயர் பெற்றவர். அந்த ஆசிரியர் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் 50% தான் மதிப்பெண் எடுத்திருந்தார். அவரால் எப்படி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களை 100-க்கு 100 வாங்க வைக்க முடிகிறது. அதையே தன் சாதனையாகவும் மாற்றிக்கொள்ள முடிந்தது. யோசியுங்கள்.
இதே லாஜிக்தான் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் எல்லா விஷயங்களிலும்.
ஒரு விஷயத்தைக் கடந்து வரும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்களே மற்றவர்களுக்கு ஆலோசனைகளாகவும், அறிவுரைகளாகவும் ஆகின்றன. நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நம் வாழ்க்கையில் தோல்வியைக் கூட ஏற்படுத்தி இருக்கலாம். அந்த அனுபவங்களை நேர்மறையாக்கி ‘இப்படிச் செய்தால் இப்படி நடக்கலாம்’ என பிறருக்கு பாடமாக்கலாம்.
அப்படி அனுபவங்களை சொல்லும்போது கரடுமுரடான அறிவுரையாக இல்லாமல் மென்மையான சுவாரஸ்யமான நிகழ்வுகள் மூலம் எடுத்துச் சொன்னால் உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாகலாம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software