ஹலோ With காம்கேர் -363: தவமாய் வாழ்ந்தால் வரமாய்தானே பலன் கிடைக்கும்!

ஹலோ with காம்கேர் – 363
December 28, 2020

கேள்வி: தவமாய் வாழ்ந்தால் வரமாய் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமா?

நேற்றைய பதிவில் நான் வாசிக்கும் லாஜிக் குறித்து எழுதி இருந்தேன். வாசிப்பதற்கு லாஜிக் வைத்திருப்பதைப் போல எழுதுவதற்கும் லாஜிக் வைத்திருக்கிறீர்களா என ஒரு சிலர் கேட்டிருந்தார்கள்.

வாசிப்பதற்கே லாஜிக் வைத்திருக்கும்போது சுவாசிப்பதற்கு லாஜிக் இல்லாமலா இருக்கும். எழுத்து என் சுவாசம் ஆயிற்றே.

இதற்கு பதில் சொல்வதற்கு முன் சில விஷயங்களை சொல்கிறேன்.

எங்கள் காம்கேர் நிறுவனம் சொந்த கட்டிடத்தில் இயங்கத் தொடங்குவதற்கு முன்னர் எட்டு வருடங்கள் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. அலுவலகம் 750 சதுர அடி. கட்டிடத்தின் மாடியில் அமைந்திருந்தது.  அதில் நுழைந்தவுடன் எனக்கான சிறிய அறை. அதில் பிள்ளையார் வீற்றிருப்பார். காலை ஆறு மணிக்கு பூஜை செய்து சாம்பிராணி போட்டு வேலைகளைத் தொடங்குவேன். ஏழு மணிக்கு முதல் ஷிஃப்ட் தொடங்கும்.

1992-ம் ஆண்டு காம்கேர் நிறுவனத்தைத் தொடங்கிய போது முதன்முதலில் ஒரு பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்கினோம். அப்போது அதன் விலை ஒரு லட்சத்துக்கும் மேல். இன்று அந்த விலையில் மூன்று கம்ப்யூட்டர்கள் வாங்கிவிடலாம்.

அதன் பிறகு எங்கள் நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப கம்ப்யூட்டர்களை நானே அசெம்பிள் செய்ய ஆரம்பித்தேன். மேலும் எங்கள் கம்ப்யூட்டர்களை நானே சர்வீஸும்  செய்து வந்தேன். கம்ப்யூட்டர் அசெம்ப்ளிங்கும் சர்வீஸும் சுயமாகக் கற்றதே. காலையில் ஆறு மணிக்கே அலுவகம் வந்துவிடுவதால் அலுவலகம் பரபரப்பாவதற்கு முந்தைய காலை நேரத்தை அசெம்ப்ளிங்கிற்கும் சர்வீஸுக்கும் என ஒதுக்கி இருந்தேன். கம்ப்யூட்டர் பாகங்களை பரப்பி வைத்துக்கொண்டு பாகங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து முழுமையாக்கும்போது கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. நேரம் போவதே தெரியாது. தியானம் போல் அந்த வேலையில் மூழ்கிவிடுவேன்.

அந்த வேலை என்றில்லை. நான் செய்கின்ற ஒவ்வொரு வேலையையுமே யோகா போல, தியானம் போல வேறு சிந்தனை இன்றி அதிலேயே லயித்து செய்வதால் பரிபூரண ஆத்மதிருப்தி கிடைக்கும்.

ஏழு மணிக்கு முதல் ஷிஃப்ட் தொடங்கும். தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும், ஹார்ட்வேர் செக்‌ஷனை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து சாஃப்ட்வேர் / அனிமேஷன் தயாரிப்பு பணிகளில் மூழ்கிவிடுவேன்.

1992-களில் நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அப்போதுதான் அடி எடுத்து வைக்கத்தொடங்கி இருந்ததால் என்னிடம் பணிபுரிபவர்களில் பலர் கம்ப்யூட்டர் சயின்ஸே படித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு எங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி கொடுத்து பிராஜெக்ட்டைப் புரிய வைத்து வேலையையும் கற்றுக்கொடுத்து… அப்பப்பா அது ஒரு மிகப் பெரிய பயணம். ஆனால் எனக்கு அலுப்போ சலிப்போ வந்ததில்லை. அதையும் தியானம் போலவே செய்வேன்.

தொழில்நுட்பத்தை ஓரளவுக்கு புரிய வைத்து அவர்களுக்கு நம் அலுவலக சூழலும், எனக்கு அவர்களைப் பிடிக்கத் தொடங்கி வேலைகள் மூன்றாம் கியருக்கு நகர்ந்து வேகம் எடுப்பதற்குள் ஆண்களாக இருந்தால் வேறு வேலை, பெண்களாக இருந்தால் திருமணம் என ஒவ்வொருவராக விலக ஆரம்பிப்பார்கள். அப்போதெல்லாம் பெண்கள் 25 வயதுக்குள் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிடுவார்கள்.

திரும்பவும் நேர்காணல் செய்தல், ப்ராஜெக்ட்டுக்குப் பொருத்தமான ஆட்களை தேர்ந்தெடுத்தல், பயிற்சி கொடுத்தல் என என் வேலை முதலில் இருந்து தொடங்கும். இடைப்பட்ட நேரத்தில் வேலையில் இருந்து சொந்தக் காரணங்களினால் விலகிக்கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களால் பாதியில் நிற்கும் ப்ராஜெக்ட்டுகளை நானே முன்னென்று முடிக்க முழுமூச்சாக முடிக்க வேண்டி இருக்கும்.

இரவில் கனவிலும் ப்ராஜெக்ட்டுகளுக்கான லாஜிக் ஓடிக்கொண்டே இருக்கும். உறக்கமும் ஒரு தியானம் போல என் வேலைகளிலேயே லயித்திருக்கும். உறக்கம் வீட்டில்தான் என்றாலும் 15 நிமிடப் பயண தூரத்தில் இருக்கும் என் அலுவலகத்தில் இருப்பதைப் போலவே சப்தநாடியும் ஐக்கியமாகி இருக்கும்.

தவிர. ப்ராஜெக்ட் மீட்டிங்குகள், கிளையிண்ட் மீட்டிங்குகள், நேர்காணல்களுக்கு வருகின்ற இளைஞர்களின் கூட்டம் என அந்த இடமே யாகம் செய்வதைப் போல தெய்வீகமாக இருக்கும்.

மேலும் வருடா வருடம் சரஸ்வதி பூஜை அன்று எங்கள் நிறுவன ஆண்டு விழாவும் கொண்டாடுவோம். பூஜையில் தொடங்கும் விழா சிறப்பாக பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருதுகள் கொடுத்து கவுரவித்தலில் வந்து முடியும். பிறகு வடை பாயசத்துடன் விருந்தும் உண்டு.

காலையில் 6 மணிக்குத் தொடங்கும் யாகம் இரவு 9 மணி வரை பரபரப்பாக தெய்வீகமாக தொய்வில்லாமல் நடந்துகொண்டே இருக்கும்.

இடையில் குடிப்பழக்கம் கொண்ட அந்தக் கட்டிட உரிமையாளரின் மகன் எங்கள் நிறுவனத்தின் கதவை உடைத்து திருட முற்பட்டு நாங்கள் காலையில் வருவதற்கு முன்னரே திருட்டுக்கு முயன்றவரே போலீஸ் கம்ப்ளையின்ட் கொடுத்து தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாததைப் போல நடித்து, நாங்கள்   அலுவலகம் வந்தபோது கூட்டமாய் போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருக்க… இப்படியான சில அதிபயங்கர அனுபவங்களும் கிடைத்தன. இதில் என்ன அதிபயங்கரம் இருக்கிறது என சிலர் மனதுக்குள் நினைக்கலாம். அதற்கும் நான் பதில் சொல்லிவிடுகிறேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அந்த அனுபவம் அதிபயங்கரமே.

அதன்பிறகு கட்டிட உரிமையார் என் அலுவலகத்துக்கு முன்னே இருக்கும் சிறிய வீட்டில் இரவில் பாதுகாப்பிற்காக தங்க ஆரம்பித்தார். எங்கள் அலுவலகத்தில் சிறிய சப்தம் கேட்டால்கூட அவர் வீட்டில் நடப்பதைப்போல சப்தமாக இருக்கும்.

தன் மகனின் செயலால் நாங்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் என் உழைப்பினால் என் மீது வைத்திருந்த அபிமானத்தினாலும், என் அப்பா அம்மா மீதுள்ள உள்ள மரியாதையினாலும் எங்களுக்குப் பாதுகாப்பாக அவர் நடந்துகொண்ட செயல் மனிதர்கள் மீதான நம்பிக்கையை எனக்குள் விதைத்தது.

அவருடைய மனைவி என்னிடம் மிகவும் பாசமாக நடந்துகொள்வார். நான் வருவதற்கு முன்னரே எங்கள் அலுவலக வாசலை துடைத்து கோலம் போட்டு வைத்துவிடுவார். எப்போது என்னைப் பார்த்தாலும் கண்களில் வாஞ்சையும், அன்பும் ததும்பி வழியும். ‘சாப்பிடாயாம்மா…’ என்று கேட்பார். ‘எப்போ கல்யாணம்’ என கேட்டுக்கொண்டே இருப்பார். நான் அசராமல் வேலை செய்வது அவருக்கு அதிசயமாக இருக்கும். ‘ஏன் இத்தனை கஷ்டப்படறே…அதான் அப்பா அம்மா வேலைக்குச் செல்றாங்களே…’ என வெகுளியாக கேட்பார். என் கனவுகளையும், இலட்சியங்களையும், குறிக்கோள்களையும் பலமுறை சொல்லி புரிய வைக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் எங்கள் உரையாடல் ‘எப்போ கல்யாணம்…’ என்ற கேள்வியிலேயே வந்து நிற்கும்.

2000-ம் ஆண்டு நாங்கள் எங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கத் தொடங்கிய போது அந்த வாடகை கட்டிடத்தை விட்டு விலக முடியாமல் நான் கலங்கி இருக்கிறேன். தவித்திருக்கிறேன் எட்டு வருடங்கள் யாகம் செய்வதைப் போல என் அயராத உழைப்பினால் எத்தனை ப்ராஜெக்ட்டுகள், எத்தனை சாஃப்ட்வேர்கள், எத்தனைப் புத்தகங்கள், எத்தனை அனிமேஷன் படைப்புகள் எத்தனை எதிர்கால திட்டங்கள், எத்தனை முயற்சிகள், எத்தனை வெற்றிகள்… அப்பப்பா வியப்பாக இருக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையையும் பிடிப்பையும் ஏற்படுத்திக்கொடுத்த அந்த இடமே தியான மண்டபம் போல இருக்கும்.

அதனாலேயே சொந்த கட்டிடம் சென்றாலும் அந்த கட்டிடத்தையும் விட்டு விலகாமல் 6 மாதங்கள் வாடகைக் கொடுத்துக்கொண்டு சில முக்கியப் பணிகளை செய்து வந்தோம். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் அந்தக் கட்டிடத்தைவிட்டு மொத்தமாக குடிபெயர்ந்தோம்.

இன்றும் என் மனதில் தியான மண்டபம் போல் கம்பீரமாக இருப்பது ஆரம்பகாலத்தில் என் கனவுகளை நனவாக்க உதவிய அந்த வாடகைக் கட்டிடமே.

சில முக்கியமான முடிவுகளை எடுக்க நினைத்தால் அந்த கட்டிடத்தை மனதுக்குள் கொண்டுவருவேன். நான் எடுக்கும் முடிவுகளுக்கு நல்லதொரு நேர்மறை அதிர்வலைகள் உருவாகும்.

இதெல்லாம் கதைபோல் இருக்கலாம். ஆனால் அக்மார்க் உண்மை.

இந்தக் கதையெல்லாம் எதற்கென்றால் ஒரு அலுவலகக் கட்டிடத்துக்கே இத்தனை சக்தி இருக்கிறதென்றால் நான் நித்தம் அமர்ந்து எழுதும் இடத்துக்கும், பயன்படுத்தும் கம்ப்யூட்டர் / லேப்டாப்புக்கும், மவுசுக்கும் எத்தனை சக்தி இருக்கும்.

தினமும் நான் அமர்ந்து எழுதும் இடமும் நான் தியானம் செய்யும் இடம்போலவே மிகவும் வைப்ரேஷனாக இருக்கும். இதற்குக் காரணம் நான் அல்ல. நான் உருவாக்கும் படைப்புகளுக்காக எழுத்தில் வடிக்கும் சொற்களுக்கான சக்தி அது.

ஒருமுறை நான் எழுதிவரும் விடியற்காலை பதிவுகள் குறித்து பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஊடவியலாருமான உயர்திரு. எம்.பி.உதயசூரியன் அவர்கள் ‘தவமாய் எழுதுகிறீர்கள், வரமாய் கிடைக்கிறது’ என்று பாராட்டி இருந்தார். அது 100-க்கு 100 நிஜம்.

நாம் செய்யும் செயல்கள் தவமாய் இருந்தால், கிடைக்கும் பலன்களும் வரமாய் அல்லவா இருக்கும்.

வேறு இடம் மாறி எழுதினால் எழுத்து வராதா என கேட்கலாம். வரும். டிஜிட்டல் யுகத்துக்கு முன்பெல்லாம் நெடுந்தூர பஸ், ரயில், விமானப் பயணங்களில்கூட மனதுக்குள் தோன்றுவதை அப்படியே காகிதத்தில் பேனாவால் எழுதிக்கொண்டே வந்த காலமும் இருந்தது. இப்போது டிஜிட்டலாக குறித்து வைத்துவிடுகிறேன்.

ஆனால் எழுத்தில் ஒரு இலாவகமும் ஆத்ம திருப்தியும்  வர வேண்டும் என்றால் தினமும் நான் அமரும் இடத்தில் மட்டுமே அவை கிடைக்கும்.

ஓரிரு நாட்கள் வேறொரு இடத்தில் அமர்ந்து பணியைத் தொடங்கினால் அந்த இடமும் தியான மண்டபம் போல சக்தியை பெற்றுவிடும்.

இடம் ஒரு பொருட்டல்ல. நம் பணிகளின் நேர்த்தியினாலும் நேர்மையினாலும்  நாம் பணி செய்யும் இடம் தெய்வீகத் தன்மை பெற்றுவிடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். என்ன நம் உடலும், உள்ளமும், அந்த இடமும் சூழலும் உணர்வு ரீதியாக பிண்ணிப் பிணைய சில நாட்கள் ஆகும். அவ்வளவுதான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 44 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon