ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 18: குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததும் பெண்களின் உரிமைதான்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 18
ஜனவரி 18, 2021

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததும் பெண்களின் உரிமைதான்!

‘மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் தொடர்ச்சியாக மாற நினைப்பது ஒருவித மனநோய்’ என்று நான் எழுதி இருந்த பதிவு (http://compcarebhuvaneswari.com/?p=7831) நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் பதிவில் நான் இரண்டு இளைஞர்களை உதாரணமாக்கி இருந்தேன். முதலாமானவர் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து சொந்தமாக ஒரு பிசினஸ் செய்வதற்கு உண்டான அனுபவங்களைப் பெறும் அளவுக்கு தன் திறமையை வளர்த்துக்கொள்கிறார். இரண்டாமானவர் தொடர்ச்சியாக வெவ்வேறு நிறுவனங்களில் மாறி மாறி வேலை செய்து எந்தத் துறையிலும் முழுமையான அனுபவத்தை பெறாமல் இருக்கிறார்.

இதற்கு வந்திருந்த இரண்டு பின்னூட்டங்களின் அலசலே இன்றையப் பதிவு.

உயர்திரு. கோபி சரபோஜி:

ஏறக்குறைய இரண்டாமவர் வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்திருக்கிறேன். இன்னும் கூட அப்படித்தான். எனக்கு மேலதிகாரியாக இருந்தவர்  ‘செய்யும் வேலையை நூறு சதவிகித ஈடுபாட்டோடு செய். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அந்த வேலையை விட்டு ஓடிவிடு’ என்று அறிவுறுத்தியிருந்த விசயம் மீது எனக்கு எப்பவும் ஒரு ஈர்ப்பு இருந்தது. எண்ணிப்பார்க்கையில் இப்போது ‘அந்த ஈர்ப்பு தவறோ?’ என்று கூட நினைப்பேன். கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தேன். வேலை பிடித்திருக்கிறதா? என நண்பர்களோ, உறவினர்களோ கேட்டால் பழகிவிடுவேன் என்பதே பதிலாக இருக்கும். அதில் தோற்றதில்லை என்பதில் எப்போதும் ஒரு திருப்தி இருக்கும். மூன்றாண்டுகளுக்கு குறையாமல் பார்த்த எந்த வேலையிலும் நிறுவனத்தில் இருந்து தவறான மதிப்பீடுகளை பெற்றதில்லை. ஊதியமும் அதற்கென பயிற்சிபெற்றவர்களுக்கு இணையாகவே வாங்கி வந்திருக்கிறேன். ஆனால்,  ‘நீங்கள் சொல்லி இருப்பது போல முழுமை பெற்றிருக்கிறேனா’ என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இப்போதும் கூட அறிவியல் பாடம் படித்து விட்டு பெற்றிருந்த குறைந்தபட்ச அனுபவ அறிவைக் கொண்டு அக்கவுண்டிங் துறையில் இருக்கிறேன். ஈடுபாடு ஏற்படாத நிலையில் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு களத்தில் இறங்க வாய்ப்பும், வயதும் இருந்ததால் நாற்பது ஆண்டுகளில் அப்படி இருப்பது சாத்தியமானது. இப்போது அது சாத்தியமா? என்ற கேள்வியை உங்களின் பதிவு என்னுள் கேட்ட படி இருக்கிறது.

உயர்திரு. உதயபாபு:

‘நமது விருப்பத்தை விட, நாம் பணியாற்றும் நிறுவனத்தின் விருப்பத்திற்கு இணங்கி விஸ்வாசமாக பணியாற்றுவதே நமது திறமைகளை உயர்த்தும்’ என தினமலரில் சேதுசார் சொன்னது நினைவுக்கு வந்தது. நிறைய சிந்திக்கவும் வைத்தது.

இவர்கள் இருவருக்கும் நான் அளித்த பதிலை விரிவாக்குகிறேன். பொதுவாக்குகிறேன்.

ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உண்மையில் நம் மனதுக்கு பிடித்த வேலை, பிடிக்காத வேலை என்ற பாகுபாடெல்லாம் இருப்பதில்லை. நாம்தான் அதையெல்லாம் வரையறுத்துக்கொள்கிறோம். எந்த வேலையையும் நம்மால் ஈடுபாட்டுடன் செய்ய முடியும். அப்படித்தான் இயற்கை நம் மனதையும் உடலையும் பக்குவப்படுத்தி வடிவமைத்துள்ளது.

இன்று நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அதில் நமக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுப்பதில்தான் சிக்கிக்கொள்கிறார்கள் பலர். அவரவர்களின் ஆர்வத்துக்கும், திறமைக்குமான வித்தியாசம் புரியாமல் அந்த இரண்டுக்குமான இடைவெளியில் மாட்டிக்கொண்டு முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள் சிலர்.

அந்தகாலத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தவர்களை கவனித்திருப்பீர்கள். ஆண், பெண் என இருவருமே விடியற்காலையில் எழுந்து கஞ்சி சாப்பிட்டு வயல் வேலைக்குக் கிளம்புவார்கள். கணவன் முன் சென்றுவிட, மனைவி மதியத்துக்கும் சமைத்து எடுத்துக்கொண்டு கைக்குழந்தையையும் எடுத்துக்கொண்டு சற்று தாமதமாக வயல்வெளிக்குக் கிளப்பிச் செல்வாள். அங்கு குழந்தையை மரத்தில் தூளியில் கட்டிவிட்டு வியர்க்க வியர்க்க வேலை செய்வார்கள். மதியம் சாப்பிட்டு மீண்டும் வேலை செய்வார்கள். இருட்டுவதற்கு முன் வீடு வந்து குளித்து சுடச்சுட சமைத்து சாப்பிட்டுத் தூங்குவார்கள். அவர்களுக்கு பிடித்த வேலை பிடிக்காத வேலை, ஈடுபாடுள்ள வேலை, ஈடுபாடில்லாத வேலை என்ற பாகுபாடெல்லாம் தெரிந்திருக்குமா என யோசித்துப் பாருங்கள்.

நமக்குப் பிடிக்காத இடத்தில் /  பிடிக்காத வேலையில் நாம் வேலை செய்யவே முடியாது. மூச்சு கூட விட முடியாது.

அத்துடன், நமக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் கவிதை எழுதிக்கொண்டு வானத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் ஜீவனம் நடக்குமா?

எனவே பிடித்த வேலை, பிடிக்காத வேலை என்பதைவிட, செய்யும் எல்லா வேலைகளிலும் ஈடுபாடு வேண்டும் என்பதே நான் வலியுறுத்துவது.

பெண்களையே எடுத்துக்கொள்ளுங்களேன்.

தனக்குப் பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வருடம் முழுவதும், வாழ்நாள் முழுக்க தினந்தோறும் வீட்டுக்காக சமைத்து போடுகிறார்களே அவர்களுக்கு மட்டும் அது பிடித்த வேலையா என்ன? கடமை. அவ்வளவுதான்.

அந்தக் கடமையை ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள்.

பிள்ளை பெற்றுக்கொள்ள எல்லா பெண்களுக்குமே ஆசை இருப்பதில்லை. இந்தக் காலம் அந்தக் காலம் என்றில்லை. எல்லாக் காலங்களிலுமே. சமுதாயக் கட்டுப்பாடுகளுக்காக குடும்ப நிர்பந்தத்துக்காகவே நிறைய_பெண்கள் பிள்ளைகளை பெற்றுக்கொள்கிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். இந்த இடத்தில்  ‘நிறைய_பெண்கள்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘சில_பெண்கள்’, ‘பல_பெண்கள்’ என எந்த வார்த்தையையும் பொருத்திக்கொள்ளலாம். நான் சொல்ல வருவது பிள்ளை பெறுவதை விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள் என்பதே.

கர்ப்பம் ஆனதும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க, கண்களில் ஆனந்தம் கொப்பளிக்க சினிமாக்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் வேண்டுமானால் தட்டாமாலை சுற்றி அந்த நிகழ்வை கொண்டாடலாம். பத்து குழந்தைகள் பெற வேண்டும் என கதாநாயகனுடன் காதல் கவிதைகள் பேசி ஆடிப் பாடலாம்.

ஆனால் உண்மையில் பெண்கள் அனைவருமே அப்படித்தான் என்ற பொதுவிதியில் வைக்க முடியாது. பிள்ளை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று ஒரு பெண் தன் விருப்பத்தைக் கூறுவதற்கு அவளுக்கு 100 சதவிகிதம் உரிமை இருக்கிறது. ஆனால் விடுமா இந்த சமுதயாமும் குடும்பமும். நிர்பந்தம். அவ்வளவே.

அந்த  நிர்பந்தத்துக்குக் கட்டுப்படுகிறார்கள். மகிழ்ச்சியான குடும்ப அமைப்புகள் உருவாகக் காரணமாகிறார்கள்.

எப்படி பெண்கள் தங்களுக்குப் பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ அதுபோல்தான் ஓரிடத்தில் பணிபுரிவதையும் சொல்கிறேன்.

நிறுவனத் தலைமைகளும் சுயேச்சையாக 100 சதவிகிதம் தங்கள் விருப்பம் போல செயல்பட முடியாது.

அவர்களுக்கும் அழுத்தம் இருக்கும், நிர்பந்தங்கள் இருக்கும். அவர்களுக்குப் பிடித்தமானதை மட்டுமே அவர்களால் செய்துவிட முடியாது. அவர்களும் பணியாளர்களின் நலன்களை மனதில் கொண்டுதான் வாய்ப்புகளை அமைப்பார்கள்.

ஒரு வீட்டில் இருக்கும் நம் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை ஒத்த சிந்தனையுடன் ஒருங்கிணைக்க முடிகிறதா? யாரேனும் ஒருவர் முரண்டுபிடிக்கத்தானே செய்கிறார்கள்.

ஒரு குடியிறுப்பில் இருக்கும் ஏழெட்டு வீடுகளை ஒருங்கிணைத்து சில நியதிகளைப் பின்பற்ற முடிகிறதா? ஒன்றிரண்டு நபர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் அல்லவா.

நமக்கு மிக நெருக்கமாக இருக்கும் வீடும், நாம் குடியிருக்கும் பகுதியிலுமே நம் விருப்பம்போல் சில ஒழுக்கங்களையும், நியதிகளையும் நம்மால் கட்டமைத்துக்கொண்டு வாழ முடிவதில்லை எனும்போது பல நூறு பேர் பணிபுரியும் ஒரு நிறுவனத்தில் நிர்வாகத்துக்கு எத்தனை கஷ்டங்கள் இருக்கும். அத்தனை பேரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத செயல்.

பெற்றோராய் இருப்பதன் கஷ்டங்கள் நாமும் ஒரு பெற்றோராய் ஆகும்போதுதான் உணர முடியும். அதுபோல்தான் நிர்வாகத்தின் கஷ்டநஷ்டங்களை நீங்களே நிறுவனம் தொடங்கும்போது மட்டுமே உணர முடியும்.

ஈடுபாடு, கடமை, கிரியேட்டிவிட்டி, நேர்த்தி, நேர்மை இந்த நான்கையும் தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த லாஜிக் நாம் வாழும் வீட்டுக்கும், பணி புரியும் நிறுவனக்கும் பொருந்தும்.

வாழத்தானே பிறந்தோம். வாழ்ந்துத்தான் பார்த்துவிடுவோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 31 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon