ஜம்முனு வாழ காம்கேரின் OTP-59: ‘போதையை’ ஏற்றவும் வேண்டாம், இறக்கவும் வேண்டாமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 59
பிப்ரவரி 28, 2021

‘போதையை’ ஏற்றவும் வேண்டாம், இறக்கவும் வேண்டாமே!

வாழ்க்கையில் கடினமாக விஷயம், தீர்க்கவே முடியாத பிரச்சனை ஒன்று இருக்கிறதென்றால் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்வேன். அது, ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இருக்கின்ற வீடுகளில் பாரபட்சம் காண்பிக்காமல் வளர்ப்பது.

இன்றல்ல நேற்றல்ல, எல்லா காலங்களிலும் இது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. எல்லா விஷயங்களிலும் சரி சமமாக நடத்தினாலும் ஏதோ ஓரிடத்தில் பாதுகாப்புக் கருதி கொஞ்சம் எச்சரிக்கை செய்தால்கூட அது அக்கறை என்ற நிலையில் இருந்து ‘நீ பார்ஷியாலிட்டி காண்பிக்கிறாய்’ என்ற நிலைக்கு சர்ரென ஒரே ஜம்ப்பில் எகிறிவிடுகிறது.

அந்தக் காலத்தில் ஆண் குழந்தைகள் என்றால் அத்தனை ஸ்பெஷல். ஆண் குழந்தைகளை தலையில் வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள்.

‘நீ ஆம்பள சிங்கம்டா…’, ‘பொண்ணு மாதிரி அழறே…’, ‘ஆம்பள பையன் இருக்கும்போது எனக்கென்ன கவலை’ இதுபோன்ற வசனங்களை சர்வ சாதாரணமாக கேட்க முடியும்.

இதற்கெல்லாம் காரணம் ஆண் குழந்தைகள்தான் தங்களை கடைசி காலத்தில் பார்த்துக்கொள்வான், அவன்தான் கொள்ளிபோட வேண்டும் என்று நம்பிக்கை வைத்து அவர்களுக்கு படிப்பு, துணிமணி, சாப்பாடு என சாதாரணமான அடிப்படை விஷயங்கள் முதற்கொண்டு எல்லா விஷயங்களிலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதன் காரணமாய் ஆண் குழந்தைகள் கொஞ்சம் திமிர், கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் கர்வம் என்று பலதரப்பட்ட ஆதிக்க குணங்களுடனேயே வளர்வார்கள்.

பெண் குழந்தைகள் படிப்பில் சுட்டியாகவே இருந்தாலும் ‘வேறு வீட்டுக்குச் செல்லப் போகும் இவளுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் படிக்க வைக்க மாட்டார்கள். திருமணத்துக்காக சேர்த்து வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

25 வருடங்களுக்கு முன் வரை இந்த நிலைதான்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். ஆண்களைவிட நிறைய சம்பாதிக்கிறார்கள். தொழில்முனைவராக பிரகாசிக்கிறார்கள். பெற்றோரை தங்களுடன் வைத்துக்கொண்டு தாங்குகிறார்கள். இத்தனை ஏன், கொள்ளி போட்டு இறுதிச் சடங்குகளைக் கூட செய்கிறார்கள்.

25 வருடத்தில் இத்தனை பெரிய மாற்றம் எப்படி சாத்தியமானதென்றால் இரண்டு காரணங்களை உறுதியாகச் சொல்லலாம்.

ஒன்று கல்வி கற்கும் பெருவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இரண்டாவது, கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களில் வாய்ப்புகளை விரிவாக்கிக்கொடுத்தது. அத்தனை சக்தி வாய்ந்தது கல்வி. பெண்ணின் சக்தியை பலமடங்காக்கிக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது.

இப்போது வீடுகளில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள்தான் நிறைய படிக்கிறார்கள். நன்றாகவும் படிக்கிறார்கள். தான் கற்ற கல்வியை வைத்து தானும் உயர்ந்து தன்னைச் சார்ந்த குடும்பத்தையும், தான் இயங்கும் சமுதாயத்தையும் உயர்த்துகிறாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் பல்மடங்கு அதிகரித்துக்கொடுப்பாள் என்பதற்கு அவளுக்கு அளிக்கப்படும் கல்வியே ஒரு சான்று.

இப்போதெல்லாம் வீட்டில் ஆண் குழந்தைகளைக் கொண்டாடுவதைவிட பெண் குழந்தைகளைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

‘அவளைப் பார்த்து கத்துக்கோடா’, ‘கடைசி காலத்தில கஞ்சி ஊற்றப் போவது என் பெண்தான்’, ‘உன்னை விட வயதில் சிறியவள், எத்தனை பொறுப்பாக இருக்கிறாள் பார்’, ‘நாளை கல்யாணம் ஆனதும் உன் பெண்டாட்டி முந்தானையில் ஒளிஞ்சுக்கப் போகிறாய், உன்னை நம்ப முடியாது’ என பெண் குழந்தைகளை உயர்த்துவதற்காக ஆண் குழந்தைகளை மட்டப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பெண் குழந்தைகள் இல்லாதவர்கள் ‘ஒரு பெண் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்… கடைசி காலத்தில் பாசத்துடன் ஒரு வாய் கஞ்சியாவது கொடுப்பாள்’ என்று பரவலாக பேசி ஏங்க ஆரம்பித்து பலகாலம் ஆகின்றது.

இதுபோன்ற காரணங்களினால், நம்மை நம்பி நம் பெற்றோர் இல்லை, அவர்களை பாதுகாக்க தங்கையோ அக்காவோ இருக்கிறாள் என்ற மனோபாவம் ஆண் பிள்ளைகள் மனதை ஆக்கிரமித்து மெல்ல மெல்ல ஒதுங்க ஆரம்பிக்கிறார்கள். இதனை சோம்பேறியான மனோபாவம், பொறுப்பை தட்டிக்கழிக்க நல்லதொரு வாய்ப்பு, பொறுப்பற்ற மனநிலை, சுமைகளை தூக்கிச் சுமக்க விரும்பாமல் ஒதுங்கிச் செல்லுதல் இப்படி பல்வேறு விதமாக விவரிக்கலாம்.

எது எப்படியோ எல்லா காலங்களிலும் ஆண் பிள்ளைகளுக்குத்தான் சரியான வழிகாட்டுதல் இல்லை என்பேன்.

ஒன்று ‘நீதான் எல்லாம், நீதான் உசத்தி, சாண் ஆனாலும் ஆண்’ என்று அவர்களை ஏதோ அதிசயப் பிறவிபோல பாவித்து சகலவிதங்களிலும் உயர்த்தி ‘போதையை’ ஏற்ற வேண்டியது. இல்லையெனில் ‘உன்னை நம்பியா நாங்கள் இருக்கிறோம், எனக்கு என் மகள் இருக்கிறாள் கஞ்சியோ கூழோ அவள் பார்த்துக்கொள்வாள்’ என ‘போதையை’ இறக்க வேண்டியது.

இந்த இரண்டுமே ஆண்களுக்கு ஆபத்துதான். உணர்வு ரீதியாக சமன் நிலையில் வைத்துக்கொள்ள அவர்களைப் பழக்குவதே இல்லை.

ஆணோ பெண்ணோ அறிவைக் கற்றுக் கொடுங்கள், எளிமையாக வாழ சொல்லிக் கொடுங்கள், இனிமையாக பழக சொல்லித் தாருங்கள்  உண்மையாக வாழுகின்ற உன்னதத்தை உணரச் செய்யுங்கள். அன்பு, பண்பு, மரியாதை, அவரவர் பொறுப்புகள் என அத்தனையையும் உணர்த்துங்கள். அதன் மதிப்பு என்ன என்பதை உங்கள் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டுங்கள், வாழக் கற்றுக்கொள்வார்கள். அதுதான் உங்களின் வெற்றி. உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை.

முயற்சிப்போமே!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 3 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari