ஜம்முனு வாழ காம்கேரின் OTP-62: பச்சிளம் குழந்தையின் பக்குவத்தைப் பெறுவோமே! (Sanjigai108)


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 62
மார்ச் 3, 2021

பச்சிளம் குழந்தையின் பக்குவத்தைப் பெறுவோமே!

பிறருக்கு உதவ வேண்டிய நல்ல பதவியில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சரியான நபர்களுக்கு உதவி செய்யவில்லை என்றால் அந்த பதவியில் அவர் இருந்துதான் என்ன பயன்?

அதுபோலதான் நம்மிடம் உள்ள திறமையைப் பயன்படுத்தி நாம் வாழும் இந்த சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் அதை கையாளவில்லை என்றால் அந்தத் திறமை நம்மிடம் இருந்தும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

அதனால்தான் சொல்கிறேன், திறமை என்பது இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் உயரிய பதவி. அதுவே பலருக்குத் தெரியாதுதான் பெரும் சோகம்.

ஒரு சிலருக்கு திறமை இருக்கும். நல்ல உழைப்பும் இருக்கும். ஆனால் அந்தத் திறமையை உழைப்பினால் வெளிப்படுத்தி தன்னை இந்த சமுதாயத்தில் ஒரு நிலையில் நிலைநிறுத்திக்கொள்ளத் தெரியாதவர்களாக இருப்பார்கள். உழைப்பையும் திறமையையும் விரயம் செய்பவர்களாக இருப்பார்கள். காரணம், கம்ப்யூனிகேஷனில் பின்தங்கி இருப்பார்கள்.

ஒரு வேலையை செய்வது என்பது தன்னுடைய திறமையினால் தான் மட்டும் அந்த வேலையை செய்துகொண்டிருப்பது என்று பொருள் அல்ல. அந்த வேலையுடன் தொடர்புடைய பலரையும் அதில் இணைத்துக்கொண்டு செயல்படும்போது அந்த வேலையின் திறன் முழு வீச்சில் வெளிப்படும்.

முயற்சி என்பது நாம் மட்டும் முயற்சிக்கும் விஷயமல்ல. அந்த முயற்சியை வெற்றியடையச் செய்யும் பலரின் உதவியைப் பெற்று நாம் மேற்கொள்ளும் முயற்சியை வெற்றிகரமாக்குவது நம் கைகளில்தான் உள்ளது.

அதுபோல உதவி கேட்பதும் அவமானமல்ல. சரியான நபரிடம் தேவையான நேரத்தில் உதவியை கேட்டுப் பெறுவது நாம் செய்துகொண்டிருக்கும் பணியின் திறனை கூட்டும்.

மற்றொரு முக்கியமான விஷயம். கம்ப்யூனிகேஷன். அதாவது ஒரு விஷயத்தை எடுத்து செய்யும்போது ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளும் நுணுக்கத்தில் பாதி வெற்றியை பெற்றுவிட முடியும். நாம் பிறரிடம் உதவியைப் பெறுவதற்காக தொடர்புகொள்ளும்போதும் சரி, மற்றவர்கள் நம்மிடம் உதவி கேட்கும்போது அவர்களுடன் தொடர்புகொள்ளும்போதும் சரி, சரியான நேரத்தில் தொடர்புகொண்டுவிட வேண்டும். காலம் தாழ்த்தி செய்யும் எந்த உதவியும் விரயம்தான்.

வாட்ஸ் அப்பிலோ இமெயிலிலோ ஒரு தகவலை அனுப்பினால் அன்றைய தினத்தின் 24 மணி நேரத்துக்குள் ஏதேனும் ஒரு நேரத்தில் பதில் அளித்துவிடக் கூடிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ‘உங்கள் தகவலை பார்த்தேன். புரிந்துகொண்டேன். விரைவில் அப்டேட் செய்கிறேன்’ என்று ஒரு வரி தகவலில் உங்கள் நேர்மை வெளிப்படும்.  அத்துடன் கடமை முடிந்தது என்றில்லாமல் அதற்கு உதவ முடிந்தால் அதற்கான வழிமுறைகளை விரைவில் எடுத்து செய்துகொடுங்கள். செய்ய முடியாத சூழலில் ‘மன்னிக்கவும். தற்சமயம் இயலவில்லை. பின்னர் பார்க்கலாம்’ என்ற பதிலையாவது கொடுங்கள். இது உங்கள் மீதான நன்மதிப்பைக் கூட்டும். நன்மதிப்பை வைத்து என்ன செய்வது என ஏளனமாக நினைக்க வேண்டாம். பெரிய பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் நன்மதிப்பு சரிந்ததால்தான் வீழ்ந்திருக்கின்றன என்பதையும் மறவாதீர்கள்.

இரண்டையுமே செய்யாமல் எந்த பதிலையும் கொடுக்காமல் இருப்பது பொறுப்பைத் தட்டிக்கழிப்பது மட்டுமில்லாமல் எதிராளியை அவமானப்படுத்தும் ஒரு செயல். இதில் என்ன அவமானம் இருக்கிறது? என்று நினைக்காதீர்கள். வாழ்க்கையில் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் இதுபோல சின்ன சின்ன விஷயங்களினால்தான் வீழ்ச்சி அடைகின்றன.

யாரும் தாங்களகாவே வந்து ‘ஏன் சோகமாக இருக்கிறாய், என்ன வேண்டும் சொல்… நான் செய்கிறேன்’ என கேட்டு உதவிக்கு வர மாட்டார்கள். உங்களுக்கு வலி என்றால் நீங்கள்தான் அழ வேண்டும், பசி என்றால் நீங்கள்தான் சொல்ல வேண்டும். பிறந்த பச்சிளம் குழந்தையைப் பாருங்கள். சிரித்து விளையாடிக்கொண்டே இருக்கும். நொடிப் பொழுதில் சிணுங்கி பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கும். அம்மாவின் கவனத்தை ஈர்த்து பால் குடிப்பதற்காக. இப்படித்தான் பச்சிளம் குழந்தையின் பக்குவத்துடன் வாழ வேண்டும்.

நாமெல்லாம் உணர்வுப்பூர்வமாக வாழும் சாதாரண மனிதர்கள். சின்னதாக ஒரு தட்டு தட்டினாலே சரிந்துவிழும் மணல் வீடுகளைப் போன்ற மென்மையான மனம் பெற்றவர்கள். பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க தவற வேண்டாம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon