ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 96
ஏப்ரல் 6, 2021
மனமெனும் கல்லாப்பெட்டியில் வினைகளும் எதிர்வினைகளும்!
பொதுவாகவே, நாம் ஒரு படைப்பை உருவாக்குகிறோம் என்றால் அதை பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வைத்துவிட்டால் அது தானாகவே பல கிளைகளைப் பரப்பிக்கொண்டு சென்று சேர்ந்துவிடும்.
அதைவிட்டு ‘இது எப்படி இருக்கிறது?’ என கேள்வி கேட்டால் ஆயிரம் கருத்துக்கள் உங்கள் முன் குவியும். அவை உங்கள் மனத்தின்மைக்கு ஏற்ப உங்களை ஊக்கப்படுத்தலாம் அல்லது சோர்வடையச் செய்யலாம். காரணம், இங்கு பலருக்கும் கருத்து தெரிவிப்பதற்கு சின்னதாக கேள்வி எனும் தூண்டுதல் தேவையாக உள்ளது.
மேலும் முதன் முதலில் ஒரு கதையை எழுதுபவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்?
‘ஆஹா சூப்பர்…’, ‘எழுத்து நடை அருமை…’ என்ற பாராட்டுக்காகவே ஏங்குவார்கள்.
ஆனால் தொடக்கத்தில் அந்த ஆத்மார்த்தமான பாராட்டு உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினரைத் தவிர வேறு யாருரிடம் இருந்தும் வரப்போவதில்லை என்பது உங்கள் அனுபவத்தில் தெரியவரும். பெரும்பாலானோருக்கு வீட்டில்கூட அந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம்.
என் முதல் கதை ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோகுலத்தில் வெளியானபோது என் வயது 10. புத்தகம் கடைகளுக்கு வரும் தினத்துக்கு முன் தினம் இரவு முழுக்க உறக்கமே இல்லை. எல்லோரும் என்னைப் பாராட்டுவதைப் போலவும், எல்லோரும் பெருமையாக என்னைப் பார்ப்பது போலவும் குழந்தைப் பருவத்துக்கே உரிய அத்தனை அபிலாஷைகளுடன் விடியலுக்காகக் காத்திருந்தேன்.
ஆனால் கதையைப் படித்த என் அப்பாவும் அம்மாவும் சந்தோஷப்பட்டார்கள். தங்கள் அலுவலக நண்பர்களிடம் சொன்னார்கள். என் தம்பி தங்கையும் மகிழ்ந்தார்கள்.
ஆனால் வீட்டைத் தவிர வெளியில் யாருமே இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அப்போதுதான் நான் ‘நம் திறமை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால் போதும். அந்த சந்தோஷமும் உற்சாகமும் ஆயிரம் ஆயிரம் படைப்புகளை உருவாக்கித்தரும்’ என்று வாழ்க்கையின் பேருண்மையை தெரிந்துகொண்டேன்.
அதன் பின்னர் யாருடைய பாராட்டையும் எதிர்பார்ப்பதில்லை. பாராட்டினால் வாங்கி மனமெனும் கல்லாப்பெட்டியில் போட்டு பொக்கிஷமாக்குவேன். அவ்வளவே.
முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில்தான் என் வாழ்க்கைப் பயணம் என்றாலும் என் அனுபவங்களை அவ்வப்பொழுது புத்தகமாக்கி வருவதையும் என் பணியாக்கிக்கொண்டேன்.
என்னுடைய புத்தகங்கள் 140-ஐ கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு தமிழ் பேராசிரியர் நான் எழுதிய டாட் நெட் புரோகிராம் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பெருந்தன்மையுடன் என் எழுத்துக்களைப் பாராட்டினார். அவர் பெருந்தன்மையை நீங்களும் உணருங்களேன்.
‘எப்படியோ 100-க்கும் மேல் இவ்வளவு புத்தகம் எழுதிட்டீங்க… ஆனா பெரும்பாலும் ஆங்கில வார்த்தையாக இருக்கு… எங்களைப் போன்ற தமிழ்ப் பேராரிசிரியர்களையும் கலந்து ஆலோசித்து எழுதி இருந்தால் தமிழுக்கு நீங்கள் செய்த சேவை இன்னும் பெரிதாக இருந்திருக்கும்…’
டாட் நெட்டிலும், ஜாவாவிலும், சி மொழியிலும் புரோகிராம் எழுதி அதை விவரிக்கும் புத்தகத்தில் எப்படி தூயத்தழிழைக் கொண்டுவர முடியும்? அறியாமல் சொல்கிறார் என ஒதுக்கிவிட்டு சென்றிருக்கலாம். ஆனாலும் ‘எப்படி முழுமையான தமிழை கொண்டு வந்திருக்கலாம் சொல்லுங்களேன் சார்’ என கேட்டேன்.
இதற்காகவே காத்திருந்ததைப் போல ‘உதாரணத்துக்கு மவுஸ் என்பதை மவுஸ் என ஆங்கிலத்தில் எழுதாமல்…’ என ஏதோ சொல்ல ஆரம்பித்தவருக்கு போன்கால் வர அதில் அவர் கவனம் சென்றது.
‘எலி என எழுத வேண்டுமா?’ என நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கம்ப்யூட்டர் சம்மந்தமாக முதன் முதலில் தமிழில் கட்டுரைகள் எழுதிய ஒருசிலர் இப்படி மவுஸ் என்பதை எலி என்று தூயத் தமிழ்ப்படுத்தி அவை புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றன.
140- புத்தகங்கள் அதில் 100-க்கும் மேல் தொழில்நுட்பம். எளிய தமிழில் நம் மக்களுக்குப் புரியும் எளிய மொழி நடையில் நான் எழுதியிருப்பது அந்தத் தமிழ்ப் பேராசிரியருக்கு என்னவோ ‘ஜஸ்ட் லைக் தட்’ உழைப்பாகி விட்டது. இப்படியான ஒரு மனநிலைதான் பெரும்பாலானோரிடம் உள்ளது. என் புத்தகங்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்திலும், சில புத்தகங்கள் இந்தியிலும் வெளியாகி இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பாடதிட்டமாகவும் நூலகங்களிலும் இடம் பெற்றுள்ளன.
என்னிடம் பேசிவிட்டு அவர் கிளம்பும்போது ஒரே ஒரு தகவலை மட்டும் சொல்லிவிட்டு அனுப்பினேன்.
‘நான் தமிழுக்கு சேவை செய்யவில்லை. தொழில்நுட்பம் நம் மக்களுக்கு சென்றடைய வேண்டுமானால் அது நம் மக்களுக்குப் புரியும் மொழியில் எளிய தமிழில் இருக்க வேண்டும். இதுதான் என் நோக்கம்’ என்ற போதும் அவர் விடாமல் ‘இருந்தாலும், இன்னும் தமிழ்படுத்தி இருக்கலாம்’ என்று சொன்னதையே சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஒரு முறை 12-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தை மல்டிமீடியா அனிமேஷன் படைப்புகளாக தயார் செய்வதற்காக ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து என்னை தொடர்புகொண்டார்கள். அதாவது புத்தகத்தில் உள்ள பாடங்களை அனிமேஷன் மூலம் கற்றுத் தர அனிமேஷன் பாடங்கள் உருவாக்க வேண்டும்.
உண்மையில் அந்த புத்தகத்தைப் படித்த நான் பயந்தே போனேன். காரணம் கம்ப்யூட்டர் சயின்ஸை வார்த்தைக்கு வார்த்தை தமிழ்ப்படுத்தி இருந்தார்கள். இரண்டு வரிகளுக்கு மேல் எனக்கு புரியவே இல்லை. நல்லவேளை நான் இந்தத் தலைமுறையில் பிறந்து தமிழ் மீடியத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைப் படிக்கவில்லை என்பதே ஆறுதலாக இருந்தது. அந்த அளவுக்கு வார்த்தைகள் கடினமாக இருந்தது. காரணம் எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்துகிறேன் என கம்ப்யூட்டரின் ஒவ்வொரு விஷயத்தையும் தமிழ்ப்படுத்தியிருந்தார்கள்.
படித்து முடித்து வெளியில் வந்தால் யார் அந்த தமிழ்ப் பெயர்களால் கம்ப்யூட்டர் சம்மந்தமான விஷயங்களை குறிப்பிடப் போகிறார்கள்?
எனவே ஆங்கிலத்தில் இருக்க வேண்டிய விஷயங்களை ஆங்கிலத்திலேயே பயன்படுத்தி, தமிழில் அவற்றை எழுதி (உதா: Class Object என்றால் கிளாஸ் ஆப்ஜெக்ட்) புரோகிராமில் அவற்றைக் கையாளும் விதத்தை விளக்குவதுதான் என் பாணி. அதைவிட்டு Class என்பதற்கும் Object என்பதற்கும் தூய தமிழை எழுதிக் குழப்புவதெல்லாம் தேவையே இல்லாத வேலை. யாருக்கும் புரியாது.
மொழி என்பது நம் பணியை இலகுவாக்க வேண்டும். அதைவிட்டு நம்மை சிரமப்படுத்தினால் அதன் பயன்தான் என்ன?
சரி, பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருவோம்.
கேள்வி எழுப்புவது, கருத்து கேட்பது குறித்து பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா?
இதில் உள்ள ஒரு உளவியலை தொலைக்காட்சியில் ஏதேனும் செய்தி சேகரிப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு.
‘நீங்களாகவே பேசி விடுகிறீர்களா அல்லது நாங்கள் கேள்வி எழுப்ப எழுப்ப நீங்கள் பதில் சொல்கிறீர்களா?’ என்ற கேள்வி பொதுவாகவே நான் கலந்துகொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னிடம் கேட்பதுண்டு. அது 3 நிமிட வீடியோவானாலும் சரி, அரை மணிநேர வீடியோவானாலும் சரி.
இதன் பின்னணியில் ஓர் உளவியல் உள்ளது. சிலருக்கு கேள்வி கேட்டால் பதில் அருவியாய் கொட்டும். சிலரிடம் கேள்வி கேட்டால் அவர்கள் சொல்ல வருவதை மறந்துவிடுவார்கள். என்னைப் பொருத்தவரை கேள்வி கேட்டாலும், கேட்காவிட்டாலும் நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதைப் பிடித்துக்கொண்டு நேர்காணல் செய்பவரை என் போக்கில் அழைத்துச் சென்றுவிடுவேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. இது என் பாணி.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP