ஜம்முனு வாழ காம்கேரின் OTP-97: எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 97
ஏப்ரல் 7, 2021

எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்!

விருந்தோம்பல் மிகச் சிறந்த பண்பு. நம் நாட்டின் அடையாளம். ஆனால் அது இன்று எப்படி உருமாறி வருகிறது தெரியுமா?

வந்திருப்பவர்களுக்கு உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா, ஒத்துக்கொள்ளாதா அது பற்றி எல்லாம் கவலை இல்லை. டீயோ, காபியோ, குளிர்பானமோ ஏதோ ஒன்றை கொடுத்து வலுகட்டாயமாக குடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

‘வேண்டாம், இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வந்தோம்’ என சொன்னாலும் விடுவதில்லை. என்னவோ அவர்களை அவமானப்படுத்திவிட்டதைப் போல நினைத்துக்கொண்டு வருந்துகிறார்கள்.

‘ஏன் தொந்திரவு செய்கிறீர்கள்?’ என கடுமையாக சொல்ல வேண்டியுள்ளது. அப்படி கடுமையாகப் பேசியபிறகு நம்மாலும் நிம்மதியாக இருக்க முடிகிறதா?

அதுபோலவே சாப்பிட அழைத்தாலும் விருந்தினர்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவை சமைத்துப் போடுவதில்லை. அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் உணவை தயாரித்துப் போட்டு மகிழ்விப்பதில்தான் மகிழ்ச்சியடைகிறார்கள். விருந்தினராக வருபவர்களுக்கு டயாபடிக்ஸ், இரத்த அழுத்தம், இதயநோய் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் சாப்பிடக்கூடாத உணவுவகைகள் நிறைய இருக்கும்.

ஆனால் அதுகுறித்த உணர்வுகளே இல்லாமால் தேங்காயை அள்ளிப் போட்டு, எண்ணையில் காய்கறிகளைப் பொறித்தெடுத்து, பிழிந்தால் எண்ணை சொட்டும் வடை செய்து விருந்தினர்களை அசத்துவார்கள்.

‘இதெல்லாம் சாப்பிடக் கூடாது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாது’ என சொன்னாலும் ‘ஒருநாள் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது’ என சொல்லி வற்புறுத்துவார்கள். ‘இப்படியெல்லாம் பாசத்துடன் வற்புறுத்துகிறார்களா? அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா?’ என நீங்கள் நினைப்பதை என்னால் காதுகளால் கேட்க முடிகிறது. ‘இருக்கிறார்களே’, தங்கள் சிறப்பைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் இதில் அடங்கி உள்ளதால் வற்புறுத்தி விருந்தினர்களை மறைமுகமாக காயப்படுத்துகிறார்கள்.

‘எனக்கு காபி பிடிக்கும்’ என்ற ஒற்றை கருத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு போட்டு வைத்திருக்கும் டிகாஷனை சூடு கூட செய்யாமல் சர்க்கரை அதிகம் போட்டு பொங்குவதற்கு முன்பே அடுப்பை அணைத்த பாலில் விட்டு ‘உனக்கு காபி பிடிக்குமேன்னு போட்டேன். குடி…’ என வற்புறுத்தினால் ஆறிய காபி, பாயசம் போல தித்திக்கும் காபி வயிற்றை குமட்டிக்கொண்டு வருவதை தவிர்க்க முடியாமல் வாஷ் பேசினுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

காபி என்றால் புது டிகாஷன், திக்கான டிகாஷன், சூடான திக்கான பால், கொஞ்சமாக சர்க்கரை, நுரை வரும் வரை ஆற்றாமல் டவரா டம்ளரில் விட்டு வாய் பொறுக்கும் சூட்டில்  உதட்டில் படாமல் நாக்கில் மட்டும் விட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும் எனக்கு. அந்த காபியின் கசப்பு ஒரு மணி நேரம் வரை நாக்கில் நிற்கும்.

அன்பாக கொடுப்பதை குறை சொல்லாமல் சாப்பிட வேண்டும்தான். ஆனால் உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா இல்லையா என்பது தெரியாமல் வற்புறுத்துவதைத்தான் தவறு என்கிறேன்.

கொரோனா காலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் தங்கள் பெற்றோருக்கு சதாபிஷேகம் என சொல்லி பத்திரிகை அடித்து ‘வீட்டுக்கு நேரில் வந்து கொடுக்கிறேன்’ என சொன்னார்கள். நாங்கள் ‘வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் போதுமே’ என சொன்னாலும் கேட்காமல் மாஸ்க் கூட போடாமல் நேரில் வந்து கொடுத்தார்கள். மேலும் நிகழ்ச்சிக்கு முதல்நாள் வாட்ஸ் அப்பில் அழைப்பிழை அனுப்பி நினைவுபடுத்தினார்கள்.

ஆனால் நாங்கள் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. கடிதம் எழுதி அதில் செக் இணைத்து வாழ்த்துக்களைச் சொல்லி அவர்களிடம் ஆசிர்வாதம் வேண்டி கொரியரில் அனுப்பி வைத்தோம். ஆனால் நிகழ்ச்சி முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகியும் அவர்களிடம் இருந்து எந்த போன் அழைப்பும் இல்லை என்பதால் நாங்களே போன் செய்து வர இயலாததுக்கு காரணம் சொல்லி கொரியர் வந்ததா எனக் கேட்டறிந்தோம்.

சதாபிஷேக தம்பதிகளே வயதானவர்கள், அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்களாம். பெருமையாக சொல்லிக்கொண்டார்கள். கொரோனா காலத்தில் இத்தனை கூட்டம் எல்லோருக்குமே ஆபத்துத்தானே?

எல்லாம் சரி, அழைப்பிதழை வலுகட்டாயமாக வீட்டுக்கு வந்து கொடுப்பதிலும், முதல்நாள் வாட்ஸ் அப்பில் நினைவுபடுத்துவதிலும் இருக்கும் அக்கறை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும், தபாலில் / கொரியரில் / இமெயிலில் வாழ்த்து அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்லி வாட்ஸப்பில் தகவல் அனுப்ப அவர்களுக்கு தோன்றாதது ஏன் என தெரியவில்லை.

இப்போதெல்லாம் விருந்தோம்பலின் நோக்கம் எப்படி செல்கிறது தெரியுமா?

‘பார், நான் எப்படி வாழ்கிறேன், எவ்வளவு வசதியாக இருக்கிறேன், என்னால் எப்படி சிறப்பாக செய்ய முடிகிறது’ என்ற ஒரு ஆடம்பரத்தை வெளிக்காட்ட விருந்தோம்பலை ஒரு காரணியாக பயன்படுத்துகிறார்கள்.

இதனால்தான் திருமண நிகழ்ச்சிகளில் காலை டிபனுக்கு இட்லி, தோசை, மசால் பூரி, வடை, பொங்கல், இனிப்பு வகைகள் என இலை முழுவதும் அடைத்து பரிமாறுகிறார்கள். இத்தனையையும் காலை 8 மணிக்கு சாப்பிட்டு மதியம் ஒரு மணிக்கு எத்தனை பேரால் சாப்பாட்டு சாப்பிட முடியும்? ரசம் சாதம் மட்டும் சாப்பிட்டு இலையில் மற்றதை அப்படியே வைத்துவிட்டு எழுந்து செல்பவர்களே அதிகம்.

காலையில் எளிமையான டிபன், மதியம் வடை பாயசத்துடன் நிறைவான விருந்து சாப்பாடு, ஒரு பழம், ஐஸ்க்ரீம், வெற்றிலை பாக்கு என எளிமையான விருந்துக்கு ஈடாகுமா?

ஆனால் இப்போதெல்லாம் விருந்தும், விருந்தோம்பலும் ஸ்டேட்டஸின் அடையாளமாகிப் போய்விட்டது. விருந்துக்கு வந்திருப்பவர்களின் ‘உடல்நிலையின் ஸ்டேட்டஸ்’ பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 20 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari