ஜம்முனு வாழ காம்கேரின் OTP-98: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 98
ஏப்ரல் 8, 2021

பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா?

கோவிட் வேக்சினேஷன் செய்த பிறகு இரண்டு நாட்கள் மிக அசெளகர்யமாக இருந்ததை பதிவிட்டிருந்தபோது ஒரு சிலர் ‘ஏன் அந்த மாத்திரை சாப்பிட்டீர்கள்? பாராசிடமால்தானே சாப்பிட வேண்டும் அதுவே இதுவே…’ என என்னவோ அவர்களே டாக்டர்கள் போல அறிவுரைகள் வழங்கி இருந்தார்கள்.

நித்தம் இத்தனை மனோரீதியாக அலசி ஆராயும் ஒருவருக்கு டாக்டரிடம் கலந்து ஆலோசிக்காமல் சாப்பிடக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போகுமா என்பதை யோசிக்கக் கூட முடியவில்லை.

நான் குறிப்பிட்டிருந்த மாத்திரையும் மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொண்ட பாராசிடமால் மாத்திரையே. நானாக எடுத்துக்கொண்டதல்ல.

அடுத்ததாக, ‘உணவுக் கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி என்றிருந்தும் ஏன் உங்களுக்கு வேக்சினேஷன் செய்தபோது இத்தனை உடல் உபாதைகள் ஏற்பட்டன என தெரியவில்லையே… ஆச்சர்யமாக உள்ளதே?’ என்ற ஒரு கேள்வியும் ஒருசிலரால் எழுப்பப்பட்டிருந்தது.

உணவுக் கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி என்ற இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையை வாழ்வதால்தான் வேக்சினேஷன் செய்த பிறகு உடல் உபாதைகளுடன் விட்டது. இல்லை என்றால் வேறு மாதிரி எதிர்வினைகள் கூட ஏற்பட்டிருக்கலாம் அல்லவா?

அத்துடன் உணவுக் கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி, நடைப் பயிற்சி இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டால் உடலில் எந்தப் பிரச்சனையுமே வராது என யார் சொன்னார்கள்? வருகின்ற பிரச்சனைகளின் தாக்கம் குறையும் என்பதுதான் மருத்துவரீதியான உண்மை.

ஒருசமயம் என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தபோது ஐசியூ-வில் 15 முதல் 60 வயதைத் தாண்டிய பலதரப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. பெரும்பாலானோர் ‘ஹார்ட் அட்டாக்’ வந்து அனுமதிக்கப்பட்டிருந்தவர்களே.

டாக்டரிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது, ‘உதாரணத்துக்கு இளம்வயதில் தொடர் சிகரெட் வழக்கம் அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், தற்போது அவற்றை நிறுத்திவிட்டாலும் அவர்களுக்குள் ஏற்கெனவே சென்றிருக்கும் அதன் தாக்கம் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நுரையீரலை, இதயத்தை, சிறுநீரகத்தை பாதிக்கலாம். அவரவர் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றாற்போல பிரச்சனையின் தாக்கம் கூடும் அல்லது குறையும். அவ்வளவே…’ என்று சொன்னார்.

‘என் அம்மா அதீத சுறுசுறுப்பு. கிட்டத்தட்ட 40 வருடங்கள் 24 மணி நேர பணி சுழற்சியில் பணியில் இருந்தவர். உணவுக் கட்டுப்பாடும் அதிகம். நடைப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் தினமும் உண்டு. நிறைய புத்தகங்கள் வாசிப்பார். தன்னை எப்போதுமே உற்சாகமாக வைத்துக்கொள்வார். நீங்கள் சொன்ன மது, சிகரெட் என்று எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மொத்தத்தில் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை. அப்படி இருந்தும் எப்படி ஹார்ட் அட்டாக் வந்தது?’ என வருத்தத்துடன் கேட்டேன்.

‘இப்படி தன்னை ஆரோக்கியமாக வைத்திருந்ததால்தான் இத்தனை வயதான பிறகு ‘மைல்ட்’ அட்டாக் வந்துள்ளது. இல்லை என்றால் இளம் வயதிலேயே ‘சிவியர்’ அட்டாக் வந்திருக்கும்…’ என்று சொல்லிவிட்டு ‘என்னவோ மனிதனாகப் பிறந்துவிட்டால் ஹார்ட் அட்டாக் வந்தே தீர வேண்டும்’ என்ற சட்டம் இருப்பதைப் போல மிக இயல்பாக சிரித்தபடி என்னைக் கடந்து சென்றார்.

உண்மைதானே?

நம் வீடு சுத்தமாக இருந்தால் பூச்சிகள், கொசுக்கள் அண்டாமல் தூய்மையான சூழல் உருவாகும் என்று சொல்வார்கள். அதற்காக என்றேனும் ஒரு பூராணோ, பல்லியோ, பாம்போ நம் வீட்டுக்குள் வந்துவிட்டால் ‘என்னவோ சுத்தம் சுத்தம்னு சொல்லி கொண்டாடினாங்க… இப்பப் பாருங்க அவங்க வீட்டில் பாம்பு வந்திருக்கு’ என புரியாமல் பேசினால் எப்படி இருக்கும்?

அந்த அபத்தமான புரிதல் இல்லாத கருத்துக்கு இணையானதுதான் ஹார்ட் அட்டாக் வந்திருப்பவர்கள் மீதான மோசமான கண்ணோட்டமும்.   ‘என்னவோ மூச்சுப் பயிற்சி, உடல் பயிற்சி என சதா தன் உடல் நலனில் கவனம் எடுத்துக்கொண்டார்கள். ஹார்ட் அட்டாக் வந்திருக்கு?’ என ஏளனமாக கருத்து சொல்பவர்களின் மனநிலை என்னவென்பது?

சுத்தமாக இருக்கும் நம் வீட்டில் என்றேனும் பூராணோ, பாம்போ வருவது நம் வீட்டு அசுத்தத்தினால் அல்ல,  பிறர் வீட்டு கொல்லைப்புறக் குப்பைக்கு குடிவந்து அங்கிருந்து விரட்டப்பட்டதாகக் கூட இருக்கலாம் அல்லவா?

நல்ல கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வரும் நமக்கு உடல்நலன் பாதிக்கப்படுவது நம்மால் மட்டுமல்ல, பிறர் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையினாலும், பொறுப்பில்லாமல் சாலையில் உமிழும் எச்சில் மற்றும் சாலையோர சிறுநீர் விநியோகத்தினாலும், முகத்துக்கு எதிரே தும்மியும் இருமியும் பரப்பும் கிருமிகளினாலும் கொஞ்சமும் சுகாதாரமற்ற பிறர் நலனில் மட்டுமில்லாமல் தன் நலனிலும் அக்கறையே இல்லாதவர்களின் செயல்பாட்டினால்கூட நம் உடல்நலன் பாதிக்கப்படலாம் அல்லவா?

ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இந்த மனிதப் பிறவியில் நம் இன்ப துன்பங்களுக்கு நாம் மட்டுமே காரணம் அல்லவே.

நாமும் சரியாக இருந்து, நம்மைச் சுற்றி உள்ளவர்களும் சரியாக இருந்தால் நமக்கு உண்டாகும் பிரச்சனைகளின் அளவு குறையும் அவ்வளவே. பிரச்சனைகளே வராது என்ற உத்திரவாதம் யாருக்குமே கிடைக்காது.

எனவே, குறைந்த அளவு பிரச்சனைகளுடன் வாழ்க்கையை நல்லபடியாக நடத்துவதற்கு நாமும் சரியாக இயங்கி நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் அவற்றை உணர்த்தி வாழும் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 422 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon