ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 100
ஏப்ரல் 10, 2021
என் அப்பாவின் சமையல் அறையில்!
நான் வேலை செய்யும் டேபிள் எனக்கு படு சுத்தமாக இருக்க வேண்டும். கலைத்துப் போட்ட புத்தகங்கள், பேனா, பென்சில், ஐபேட் என ஆங்காங்கே பரவலாக இருந்தால் எனக்குள் இருக்கும் சிந்தனை சிதறலாகவே இருக்கும். இவ்வளவு ஏன் துருத்திக்கொண்டிருக்கும் லேப்டாப் ஒயர் கூட இடைஞ்சலாகவே இருக்கும்.
நானும் என் லேப்டாப்பும் மட்டுமே என் கண் முன் இருக்க வேண்டும். மற்றவை தனி டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தால் தேவையானதை தேவையானபோது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். அதைவிட்டு அத்தனையும் நான் வேலை செய்யும் டேபிளில் இருந்தால் மனமும் எனக்கு ஒருங்கிணையாது. வேலையின் வேகமும் தாமதமாகும்.
காம்கேரில் என் அறையில் ஒரு பெரிய டேபிளில் நல்ல கிராஃபிக்ஸ் கார்டுடன் கூடிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை சர்வாக வைத்திருப்பேன். அதில் இருந்து டெஸ்க்டாப் ஒன்றையும், மற்றொரு லேப்டாப்பையும் இணைத்து கிளையிண்ட்டாக்கி வைத்திருப்பேன்.
ஒரு கம்ப்யூட்டரில் ஏதேனும் வீடியோ ரெண்டர் ஆகிகொண்டே இருக்கும். ரெண்டரிங் என்றால் வீடியோவை எடிட் செய்த பிறகு அதை எல்லா சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் முழுமையான வீடியோ ஃபைலாக மாற்றும் முறை. 4 நிமிட வீடியோவை படங்களில் இணைத்து டைட்டில் கார்ட் போட்டு முழுமையானதாக மாற்றுவதற்கு 4 மணி நேரம் கூட ஆகும்.
மற்றொரு கம்ப்யூட்டரில் ஏதேனும் ஆடியோ பைல் எடிட் செய்வதற்காக ஓடிக்கொண்டிருக்கும்.
சர்வரில் அத்தனையும் பதிவாகிக்கொண்டே இருக்கும். இந்த சர்வர் கம்ப்யூட்டர், நிறுவனத்தின் சர்வர் அறையில் உள்ள முதன்மை சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில்தான் நிறுவனத்தின் அத்தனை கம்ப்யூட்டர்களும் இணைந்திருக்கும். யார் என்ன வேலை செய்தாலும் என் கவனத்துக்கு வந்திவிடும்.
இது தவிர என் டேபிளில் ஒரே ஒரு லேப்டாப் இருக்கும். பக்கத்தில் எழுதுகிறேனோ இல்லையோ ஒரு சிறிய நோட்பேடும், ஒரு பேனாவும் இருக்கும். இவை தவிர வேறெதுவும் இருக்காது.
ஒருமுறை என் நிறுவனத்துக்கு வந்திருந்த ஒரு கிளையிண்ட் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?
‘இத்தனை ஒழுங்கமைப்புடன் இருந்தால் ஸ்ட்ரெஸ் வந்துவிடும் மேடம்…’
‘உங்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் எனக்கு நான் இயங்கும் இடம் இப்படித்தான் நேர்த்தியாக இருக்க வேண்டும்…’ என்று பதில் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு மாணவியின் வீட்டுக்கு செல்ல வேண்டிய சூழல். வீட்டுக்குள் நுழைந்தால் காலை வைக்க இடமில்லை. பெரிய வீடுதான். ஆனால் கொடியில் தொங்கிக்கொண்டிருக்கும் துணிமணிகளும், பரவலாக போடப்பட்டிருந்த் பொருட்களும் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்த ஒட்டடையும் பார்ப்பதற்கே மிக சங்கடமாக என் மனதை என்னவோ செய்தது. நல்ல வசதியானவர்கள்தான். ஆனாலும் ஏன் இப்படி என யோசித்துக்கொண்டிருந்தபோது என் மனதின் ஓட்டத்தைப் படித்த மாணவியின் அம்மா ‘எங்கள் வீட்டில் இப்படி இருந்தால்தான் எல்லோருக்கும் பிடிக்கும்… வீடு என்றால் இப்படி கலைந்துதானே இருக்க வேண்டும்…’ என்றாரே பார்க்கலாம்.
எனக்கு அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் மூச்சு முட்டியது. என்னால் அதுபோன்ற சூழலில் சில நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடிவதில்லை.
இந்த ஒழுங்கு எனக்கு எங்கிருந்து வந்தது என்றால் எங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்துதான் வந்தது.
அதுவும் என் அப்பா சமைக்கும்போது, சமையல் அறை அத்தனை ஒழுங்கு அமைப்புடன் இருக்கும். சமைப்பதற்கு முன் தேவையானதை அழகாக எடுத்து வைத்துக்கொள்வதாகட்டும், சமைக்கும்போது ரசனையுடன் சமைப்பதாகட்டும், சமைத்தபின் சமையல் செய்த இடத்தை சுத்தம் செய்து வைப்பதாகட்டும் அது சமையல் செய்த இடமா என்று பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படும் அளவில்தான் எங்கள் வீட்டு சமையல் அறை சமையல் வாசனையில் மட்டுமில்லாமல் சுத்தத்திலும் ஒழுங்கமைப்பிலும் மணமணக்கும். அதுபோலவே உபசரிப்பதிலும் பார்த்துப் பார்த்து பரிமாறுவதிலும் யாரும் அடித்துக்கொள்ள முடியாது.
ஏதோ ஒரிரு நாட்களில் சமையல் அறைக்குள் வருவார் என நினைக்க வேண்டாம். தினமும் அப்பாவின் பங்களிப்பு சமையலில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கும். பணி ஓய்வுக்குப் பிறகு மட்டும் என நினைக்க வேண்டாம். பணியில் இருந்தபோதும் அப்படித்தான்.
அம்மாவின் பக்குவமும் ஏறத்தாழ இதே திட்டத்தில்தான் இருக்கும். அப்படி இருந்தால்தானே ஆண், பெண் என் இருவர் புழங்கும் இடம் இருவருக்கும் வளைந்துகொடுக்கும்படி அமையும்.
ஆனால் எங்கள் குடும்பங்களில் யார் சமைத்தாலுமே சமைத்து முடித்த இடமா என்று ஆச்சர்யப்படும் அளவில்தான் இருக்கும். நான் ஏன் அடிக்கடி எங்கள் குடும்பத்து ஆண்கள் சமைப்பதை சிலாகிக்கிறேன் என்றால் சமையல் பெண்களுக்கான வேலை மட்டும் அல்ல, சமையல் அறையும் அவர்களுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுக்கப்பட்ட இடமும் அல்ல என்பதை ஏதேனும் ஒரு விதத்தில் வலியுறுத்தியபடியே இருக்கிறேன்.
எங்கள் குடும்பங்கள் என்று நான் சொல்வது என் வீட்டை மட்டும் அல்ல. என் அப்பா அம்மாவை மட்டுமல்ல. எங்கள் குடும்பத்து ஆண்கள் அத்தனை பேருமே பெண்களுக்கு இணையாக சமையல் வேலைகளில் கலக்குவார்கள். ஒருநாளும் ஒரு வாய் காபிக்கு பிறரை எதிர்பார்த்து காத்திருந்து நான் பார்த்ததில்லை.
என் கொள்ளுதாத்தா, தாத்தா, பெரியப்பா, மாமா… இவ்வளவு ஏன் எங்கள் அடுத்தத்தலைமுறையில் எங்கள் வீட்டுச் செல்லங்கள் வரை அனைவருமே சமையல் வேலை மட்டுமல்ல, வீட்டு வேலைகள் அத்தனையிலும் கலக்குவார்கள். இனிப்பு காரம் என அத்தனையும் செய்து அசத்துவார்கள். சமையல் அறையில் அவர்களின் உடல்மொழியே அத்தனை அழகாக இருக்கும். பாசமும் நேசமும் அக்கறையும் இழைந்தோடும்.
இதையே பார்த்துப் பார்த்து எங்களுக்குள் எல்லா விஷயங்களிலும் ஒரு நேர்த்தி, ஒரு அழகுணர்ச்சி, ஒரு ஒழுங்கமைப்பு எல்லாமே உண்டாகிவிட்டது. அதை எங்கள் அடுத்தத் தலைமுறைக்கும் கடத்திக்கொண்டிருக்கிறோம்.
ஒருவரின் சுபாவத்தையும் குணநலன்களையும் ஒருவர் வீட்டு சமையலறை நேர்த்தி நிர்ணயிக்கிறது என நான் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அதுதான் உண்மை. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒழுங்கைக் கற்றுக்கொடுக்க விரும்பினால் பாடத்தை உங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்துத் தொடங்குங்களேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP