பதிவு எண்: 855 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 124
மே 4, 2021
ஒரு நேர்காணல்!
‘பணம், புகழ், பதவி – இவை மூன்றும் போதைத் தரக்கூடியவை. இந்த மூன்றையும் உங்கள் கண்ணோட்டத்தில் எப்படிப் பார்க்கிறீர்கள்?’
பணம்…
இதற்கு நான் என் இளவயதுக்குப் போக வேண்டும். என் பெற்றோரிடம் பணம் இருந்ததில்லை. இருந்தாலும் வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு பணம் வேண்டும் என்பதே இல்லை. நான் சிறுவனாய் இருந்த போது காலையில் 4 மணிக்கு எழுந்து அப்பாவுடன் தொழுது விட்டு மதரஸா பள்ளியில் குரான் படித்து, ரயில்வே ஸ்டேஷனில் பேப்பர் கட்டுக்களை எடுத்து விநியோகம் செய்து, வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, உடை மாற்றி பள்ளிக்குச் சென்று, மாலையில் திரும்பி, பணம் வசூலிக்கச் சென்று, வீட்டுப் பாடங்களை முடித்து விட்டு, சாப்பிட்டுப் படுப்பேன். மூச்சு விட நேரமிருக்காது. என்றாலும் சந்தோஷத்துக்கு அளவேயில்லாமல் இருந்தது.
பணம், நல்ல பணமாய் நேர்வழியில் வந்ததாய் இருந்தால் வாழ்க்கை அமைதியாய் இருக்கும்.
அடுத்தது புகழ்…
இதை நான் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். முதன் முதலில் ராக்கெட்டை அனுப்பும் முயற்சியில் நான் தோல்வியடைந்த போது, எனக்கு மேலதிகாரியாக இருந்த சதீஷ் தாவன் என்ற அருமையான மனிதர், அந்தத் தோல்விக்கு தன்னைப் பொறுப்பாக்கிக் கொண்டார். ஆனால் அடுத்த முறை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய போது அந்த வெற்றிக்கு என்னைக் காரணமாக்கினார். இது எப்பேர்ப்பட்ட உயர்ந்த காரியம்! தோல்வியை தான் எடுத்துக் கொண்டு, வெற்றியை எனக்குக் கொடுத்த அந்த உயர்ந்த செய்கை, இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அதன் பிறகு ஏதாவது காரியத்திற்காக புகழ் வந்தால், உடனே நான் சதீஷ் தாவனை நினைத்துக் கொள்வேன்.
அடுத்தது பதவி…
அது வரும், போகும். நாம் ஏன் அதற்காக கவலைப்பட வேண்டும்?
இந்த நேர்காணலை பற்றி விரிவான செய்திக்கு இங்கு செல்லவும்… https://youtu.be/hHls5ncOU3E
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP