ஜம்முனு வாழ காம்கேரின் OTP-125: உங்கள் மனம் திடீர் திடீரென வெறுமையாகிறதா? (Sanjigai108)

பதிவு எண்: 856 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 125
மே 5, 2021

உங்கள் மனம் திடீர் திடீரென வெறுமையாகிறதா?

வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பதிலோ அல்லது மாற்றி சிந்திக்க வேண்டும் என நினைத்துப் புதுமைகளை செய்ய விரும்புவதிலோ தவறில்லை. ஆனால் அப்படி செய்யப்படும் விஷயங்கள் உண்மையிலேயே புதுமையாக இருந்தால் அவை தானாகவே மக்களின் பார்வைக்குப் புதுமையாகவே சென்றடையும்.

‘உலகத் தொலைக்காட்சி உலகில் முதன் முதலாக…’ என்று தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் போன்று தான் செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களையும் தான் மட்டுமே புதுமையாக செய்வதாகவும், உலகிலேயே அப்படிப்பட்ட புதுமைகளை வேறு யாருமே செய்திருக்கமாட்டார்கள் என்றும் சுய பெருமை பேசுவது நாளடைவில் சலிப்பையே ஏற்படுத்தும்.

அவர்களின் விஷயங்கள் உண்மையிலேயே புதுமையாக இருந்தாலும் அவை பிறரிடம் உண்டாக்கும் தாக்கத்தைவிட ‘புதுமையா செய்யறேன்னு என்ன பண்ணி வச்சிருக்கானோ/ளோ’ என்று கேலியும் கிண்டலும் செய்யும் நிலைக்குத்தான் அவர்கள் தள்ளப்படுவார்கள்.

இந்த உலகில் நடைபெறும் விஷயங்கள் அனைத்துமே முன்பே நடந்த விஷயங்களின் நீட்சியாக மட்டுமே இருக்க முடியும். அந்தந்த காலகட்டங்களில் அவை புதுமையாகவே நடைபெற்றிருக்கும். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி அன்றிருந்திருந்தால் அவர்களும் தங்கள் செய்கைகளை, படைப்புகளை, அறிவாற்றலை முன்னிலைப்படுத்தி பிரகடனப்படுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு விஷயம் உண்மையிலேயே புதுமையாக இருந்தால் அது தானாகவே அதன் தன்மையில் இருந்து இம்மியும் மாறாமல் அப்படியே சென்றடையும். அது தானாகவே தனக்கான வடிவத்தைப் பெறும். தனக்கான பார்வையாளர்களை இனம் கண்டு சென்றடையும்.

ஆனால் ஒரு விஷயத்துக்கு நாமே வலுக்கட்டாயமாக ‘புதுமை’ முலாம் பூசும்போது அது மிகைப்படுத்தப்பட்ட அலங்காரம் செய்யப்பட்ட முகமாகவே பிறர் பார்வைக்குச் சென்றடையும்.

திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணமகளுக்கு கூடும் மேக் அப் போடுவார்கள். அவர்களின் முகமே மாறியிருக்கும். இன்னும் சொல்லப் போனால் வேறு யாரோ போல காட்சி அளிப்பார்கள். மேக் அப் போடாமல் இயல்பாக இருந்தாலே அழகாக இருப்பார்களே என நினைக்கும் அளவுக்கு அவர்களின் அழகில் இருந்து ஒரு படி குறைவாகவே காட்சி அளிப்பார்கள்.

எங்கள் உறவினர் வீட்டில் திருமணம். ரிசப்ஷனுக்குத் தயாராகும் மணப்பெண் அழுதுகொண்டிருந்தார். என்னவோ ஏதோ என பதறிப்போய் விசாரித்தால் அவருடைய மேக் அப் அவருக்குப் பிடிக்கவில்லையாம். தன் முகமே மாறிவிட்டது. நானே என்னைப் பார்க்கும்போது யாரோவாக தெரிகிறேன் என ஒரே அழுகை.

இப்படித்தான் நம் இயல்பில் இருக்கும் போது கிடைக்கும் அக அழகுக்கும், புற அழகுக்கும் வலுக்காட்டாயமாக ஒரு ஃப்ரேம் போட்டு ‘நானாக்கும் இப்படி இருக்கிறேன்’, ‘நானாக்கும் இப்பேற்பட்ட செயல்களை செய்கிறேன்’ என  ‘நானாக்கும்’ என்ற அரிதாரத்தைப் பூசிப் பூசி நம் அழகை நாமே கெடுத்துக்கொள்கிறோம். ஒரு கட்டத்தில் இயல்பான நம்மை நாம் தொலைத்துவிடுவோம். நம்மையும் அறியாமல் அந்த மிகைப்படுத்தப்பட்ட ‘நாம்’ நாமாகிவிடுவோம். அதுவே நிரந்தரமுகமாகிவிடும். ஆனால் அந்த முகம் அழகாக இருக்காது. நாம் அழகாக இருப்பதாக நினைத்துக்கொள்வோம். ஆனால் பிறர் பார்வையில் கோரமாக இருப்போம்.

திடீர் திடீரென மனம் வெறுமையாகிப் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதுபோல நம்மை நாம் தொலைப்பதும் மிக முக்கியக் காரணமாகும்.

இயல்பு தொலைத்தல் ஒரு சாபம். சாப விமோச்சனம் பெற நினைத்தால் அரிதாரங்களைக் குறைத்துக்கொள்வோம். விமோசனம் கிடைக்கலாம். அதுவும் இயல்பை எந்த அளவுக்கு ஆழமாக தொலைத்திருக்கிறீர்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது.

இயல்பே அழகு. இயல்பாக வாழ்பவர்களையே அனைவரும் விரும்புவார்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் நீங்கள் காட்டும் நேர்மைதான் உங்கள் இயல்பை இன்னும் அழகாக்கிக் காட்டும். அதுதான் உண்மையாகவே நீங்கள் வித்தியாசமாக இருப்பவர்களாக காட்டிக்கொடுக்கும் அற்புத ஆயுதம். அதுவே உங்கள் செய்கைகள் அனைத்தும் புதுமையாக இருப்பதாக சென்றடையும்.

அரிதாரம் என்பது ஆபத்துதான். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கலையக்கூடியது. இயல்புக்கு அரிதாரம் பூசாதீர்கள். தொலைந்துபோவீர்கள். கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 7 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari