ஜம்முனு வாழ காம்கேரின் OTP-136: உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்!

பதிவு எண்: 867 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 136
மே 16, 2021

உண்மையிலேயே உத்தமராக இருந்துவிட்டால்!

‘நீங்கள் நேர்மையானவர், அன்பானவர். பண்பாளர். உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு உழைப்பவர். கடுமையான உழைப்பாளி. உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கோ இருந்திருக்க வேண்டும். உங்கள் திறமைக்கு ஏற்ற உயரம் இன்னும் வாழ்க்கையில் கிடைக்கவில்லை. உங்களை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் காட்டும் விசுவாதத்துக்கு ஈடு இணையாக மற்றவர்கள் உங்களிடம் காட்டுவதில்லை. உங்கள் அன்பு பரிசுத்தமானது. உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை துணையாகப் பெற்றதற்கு கொடுத்து வைத்தவர். இன்னும் ஓராண்டு காலத்தில் சகல செளபாக்கியங்களும் உங்கள் வாழ்க்கையில் உண்டாகி எங்கோ செல்லப் போகிறீர்கள்…’

நாட்டு மருந்துக் கடையில் வசம்பு வாங்கி வந்த காகிதத்தில் இப்படி ஒரு ராசிபலன். எந்த ராசிக்கு என தெரியவில்லை. அந்தப் பகுதி கிழிந்திருந்தது. சரி அதற்கடுத்த ராசி என்ன என தெரிந்தால் இந்த ராசியை தெரிந்துகொள்ளலாமே என பார்த்தால் அந்தப் பகுதிகளையும் காணவில்லை. மிகச் சரியாக இந்தப் பகுதி மட்டுமே அந்த காகிதத்தில் இருந்தது.

படிக்கும்போதே ஆனந்தமாக இருந்தது. இது யாருடைய ராசிக்கு எழுதப்பட்டது என தெரியவில்லை. ஆனால் படிக்கின்ற யாருக்குமே இது பேரானந்தத்தைக் கொடுக்கும். அவர் எந்த ராசிக்காரராக இருந்தாலும் சரி.

யாராலும் வெகு எளிதில் இதிலுள்ள கருத்துக்களை தங்களுடன் ஒப்பிட்டுப் பிணைத்துக்கொண்டுவிட முடியும். ஏன் ராசிபலன்களில் ஜாதகங்களில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட இது சாத்தியம்.

காரணம். இது தனி மனித துதி பாடுவதைப் போல இருக்கிறதல்லவா?

பொதுவாகவே நம்மைப் பற்றி பிறர் நல்லவிதமாக சொல்லக் கேட்பது என்பது ஒருவித பரவசத்தைக் கொடுக்கவல்லது. நாம் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நல்லவர், வல்லவர், திறமைசாலி அப்படி இப்படி என சொல்லும்போது சொல்ல முடியாத சந்தோஷம் தொற்றிக்கொள்ளும்.

நம்மைப் பற்றி புற உலகில் பிறர் மூலம் நல்லவிதமாக கேட்பதே பேரானந்தத்தைக் கொடுக்கும்போது, உண்மையிலேயே நாம் நல்லவர்களாக வல்லவர்களாக திறமைசாலியாக இருந்துவிட்டால் நம் அக உணர்வு எப்பேற்பட்ட பேரானந்தத்தை அள்ளிக்கொடுக்கும் என்பதை உங்கள் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்.

புறத்தால் வரும் புகழ்ச்சியை விட அகத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி நம்மை இன்னும் செம்மைப்படுத்தும். அகத்தை நாம் தூய்மைப்படுத்திக்கொண்டால், செம்மைப்படுத்திக்கொண்டால் புறத்தால் கிடைக்கும் புகழ்ச்சிகள்கூட கைகட்டி ஓரமாக நிற்கும்.

ஒருசில அதீத திறமைசாலிகளை கவனித்துப் பாருங்கள். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பதற்கு உவமையாய் அமைதியாக அடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அகத்தால் தங்களை உயர்வு செய்துகொண்டவர்கள் என்பதால்தான் புறத்தில் நடக்கும் சலசலப்புக்கெல்லாம் அசராமல் தங்கள் பாதையில் பீடு நடை போடுபவர்களாக இருப்பார்கள்.

இதுவரை கவனிக்கவில்லை என்றால் இனி கவனித்துப் பாருங்கள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari