ஜம்முனு வாழ காம்கேரின் OTP-135: டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்!

பதிவு எண்: 866 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 135
மே 15, 2021

டிபன் பாக்ஸும், தண்ணீர் பாட்டிலும், கைகுட்டையும்!

என்னுடைய பள்ளி நாட்களில் நிறைய சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறேன். சக மாணவர்கள் மதிய நேரம் சாப்பிடும்போது ஒருவர் டிபன் பாக்ஸில் இருந்து அவர்களின் உணவை கைகளாலோ அல்லது அவர்கள் எச்சில் செய்து சாப்பிட்ட ஸ்பூனினாலோ எடுத்து அப்படியே மற்றவர்கள் சாப்பிடுவார்கள். ஒருவர் எச்சில் செய்ததை மற்றவர்கள் சாப்பிடக் கூடாது, நோய் தொற்று ஏற்படும் என்று எங்கள் வீட்டில் சொல்லிக்கொடுத்திருந்ததால் பள்ளியில் மதிய உணவு இடைவெளி வந்தாலே எனக்குள் ஒரு சிறு சங்கடம் ஒட்டிக்கொள்ளும். சக மாணவர்களுக்கு இதையெல்லாம் எப்படி புரிய வைப்பது அல்லது நான்  மட்டும் என்ன எடுத்துச் சொல்லி புரிய வைக்க பெரிய மனுஷியா என்ன? நானும் அந்த வயதில் சிறுமிதானே.

மற்றவர்கள் தாங்கள் சாப்பிடும்போது எச்சில் செய்ததை எனக்கு கொடுத்தாலும் வாங்க மாட்டேன். நானும் எச்சில் செய்து சாப்பிட்டதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன். அவர்களாக கேட்டால் நான் சாப்பிடுவதற்கு முன்னர் அவர்கள் டிபன் பாக்ஸ் மூடியில் எடுத்து கொடுத்துவிட்டே சாப்பிடுவேன்.

இப்படி செய்வது அவர்களுக்கு வினோதமாக இருந்தது. ஒருசிலர் நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து கிண்டலும் செய்திருக்கிறார்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும்.இதுபோன்ற நியாயமான விஷயங்களை கடைபிடித்ததால் (இன்றும் கடைபிடிக்கிறேன்) ஒரு கூட்டத்தில் பொருந்துவது என்பது சிக்கலான விஷயமாக இருந்தது.

அதனால் நானாகவே ஒதுங்கி தனியாக சாப்பிட ஆரம்பித்தேன். பத்து நிமிடங்களில் சாப்பிட்டு படிக்க உட்கார்ந்து விடுவேன். இதே சூழல்தான் கல்லூரி நாட்களிலும்.

அதுபோல எனக்கு நினைவு தெரிந்து பள்ளி நாட்களில் இருந்தே கர்சீஃப் பயன்படுத்துவேன். அதுவும் மாணவர்கள் மத்தியில் காட்சிப் பொருள். அவர்களுக்கு வியர்த்தால் என் கர்சீஃபை கேட்பார்கள். ஒருவர் பயன்படுத்தியதை பிறர் பயன்படுத்தக் கூடாது என்று அப்போதெல்லாம் பாடம் எடுக்கத் தெரியாது. ஆனால் ‘கொடுக்க முடியாது’ என்பதை மட்டும் எனக்குத் தெரிந்த மொழியில் சொல்லிவிடுவேன். ஒருநாள் பள்ளி ஆசிரியர் ஒருவரே என் கர்சீஃபை கேட்டு வாங்கி முகம் துடைத்துக்கொண்டு கொடுத்தார். அந்த அளவுக்குத்தான் விழிப்புணர்வு அந்த நாட்களில். அவர் தலை மறைந்ததும் அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன்.

அடுத்ததாக தண்ணீர் பாட்டில். நான் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலைத் தவிர வெளியில் எங்கும் தண்ணீர் குடிக்க மாட்டேன். சக மாணவர்களுக்கு அந்த தண்ணீர் பாட்டில் மீதே கண். தாகமாய் இருக்கிறது என கேட்டு வாங்கி குடிப்பார்கள். ஆனால் தூக்கிக்குடிக்க மாட்டார்கள். உதட்டில் வைத்து எச்சில் செய்தே சாப்பிடுவார்கள். நான் அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன். பல நாட்கள் நா வரட்சியோடு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறேன்.

அதுபோல பிறந்தநாள் போன்ற விசேஷ தினங்களில் பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி, ஒரு கேக் பீஸை ஒருவர் மாற்றி ஒருவர் வாயில் எச்சில் செய்து சாப்பிடுவார்கள். அதுபோன்ற சூழலிலும் பெரும் சங்கடம் தான் எனக்கு. வேண்டாம் என மறுத்தால் அவர்களை அவமதிப்பதற்கு சமம். சாப்பிட்டால் உடல்நலனுக்குக் கேடு. என்ன செய்வது? அவர்கள் என்னிடம் கொடுப்பதை கைகளில் சிறிது விண்டு எடுத்துக்கொண்டு தூர எறிந்துவிடுவேன்.

பொதுவாகவே நான் பேசுவதைவிட கவனிப்பது அதிகம். இதனால் என் வயதுக்குறிய மாணவர்களுக்கு மத்தியில் என் நட்பு வட்டம் சுருங்கினாலும், என் ஆசிரியர்களின் கவனம் என் மீது விழத் தொடங்கியது. அவர்களின் பெற்றோர் மத்தியிலும் நான் அவர்கள் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகிப் போனேன்.

பெரும்பாலான தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குபவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஒரே ஸ்பூனினால் ரெசிப்பியை சுவை பார்ப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்பூன் பயன்படுத்தலாமே? ஆனால் செய்வதில்லை.

இதுபோன்று பெருவாரியாக மக்களைச் சென்றடையும் நிகழ்ச்சிகள் மறைமுகமாக அவர்கள் செய்வது சரிதான் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைக்கிறார்கள்.

பெருவாரியான மக்கள் எதை செய்தாலும் அதுவே சரி என்ற மனோநிலை ஏற்பட்டுவிடுவது தானே நிதர்சனம்.

இன்றைய சூழலில் சுத்தமும், சுகாதாரமும் மக்களுக்கு எத்தனை அவசியம் என கொரோனா பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழல்தான் இயல்பாக இருந்திருக்க வேண்டிய சூழல். ஆனால் இது என்னவோ ஒரு வைரஸுக்காக அறிவுறுத்தப்படும் அவசரகால அறிவுறுத்தலாக மாறிப்போனதுதான் அவலம்.

கொரோனா முற்றிலும் விலகி உலகம் முன்பு போல சகஜமாக இயங்க ஆரம்பித்த பிறகும் நாம் நம் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் விட்டு விடாமல் பேணி பாதுகாப்போமே!

வருங்காலத்தில் அடுத்த சந்ததியினருக்கு நாம் ரோல் மாடலாவோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 10 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari