ஜம்முனு வாழ காம்கேரின் OTP-151: காம்ரேட்!

பதிவு எண்: 882 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 151
மே 31, 2021

காம்ரேட்!

எங்கள் குடும்பம் மற்றவரின் குடும்பத்தைபோன்று எப்போதும் இருந்ததில்லை. இதற்கு காரணம் என் அம்மா. என் அம்மாவைப் பற்றிய எனது குழந்தைப் பருவ ஞாபகமேஅவரது டைப்ரைட்டரும் என்னைத் தாலாட்டும்அதன் இசையும் தான். என்னைப் பொருத்தவரை அம்மாவின் இயல்பு என்பது கட்டுரைகள்எழுதுவதும், டைப் செய்வதும், செய்தித்தாளிலிருந்து தினமும் குறிப்பெடுப்பதும், பொதுக் கூட்டங்களில் பேசுவதும், வீட்டிற்கு வந்த நண்பர்களுடன் ஆவேசமாக அரசியல் விவாதிப்பதும் தான். சமையல் கரண்டியுடன் அம்மாவை நான் பார்த்ததே இல்லை.

அம்மா சென்னையில் பி.ஏ. படித்தபிறகு படிப்புதவி தொகை பெற்று அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்றார். ஐக்கியசபையில் சில ஆண்டுகள் வேலை செய்த பிறகுஇந்தியாவிற்குத் திரும்பினார்.

சிறுவயதிலிருந்து செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை எனக்கு உருவாக்க வேண்டும் என்று அம்மா மிகவும்விரும்பினார். இதற்காக அம்மாவும், அப்பாவும் செய்தித்தாளிலிருந்து தினமும் சுவாரசியமான இரண்டு செய்திகளையாவது கண்டுபிடித்து   ‘அம்மா நியூஸ்’,  ‘அப்பா நியூஸ்’ என்று படித்துசொல்வார்கள்.

அம்மா ஒரு வித்தியாசமான மனுஷி. எந்தக் குடும்பவிசேஷத்துக்கும் அம்மா பட்டு உடுத்தியதில்லை. ஒரு சின்ன தங்க நகைக்கூட அணிந்ததில்லை.

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தபோது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் என்மீது இல்லை. பள்ளிபடிப்பிற்கு அப்பாற்பட்ட எனது ஈடுபாடுகளையும்அம்மா முழுமனதோடு வரவேற்பார்.

இந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்றவிதிகள் எப்படி இல்லையோ, அப்படியே திருமணம் மற்றும் உறவுகளும் . அம்மாவின் திருமண வாழ்க்கை என்பதுதோழமையும், நட்பும் கலந்த வாழ்க்கை. என் பெற்றோரை பார்த்து நான் கற்றுக் கொண்ட முக்கியப் பாடம், ஒரு பெண் பொது வாழ்வில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருக்க முடியும் என்றும்,அவளை வியந்து பாராட்டியே ஒரு ஆண் எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவளைப்போற்றி வாழ முடியும் என்பதே ஆகும்.

எப்படி வாழ்க்கை அமைய வேண்டும் என்றுநினைத்தார்களோ, அப்படியே வாழ்ந்து காட்டினார்கள். என் வாழ்க்கையைத் தீர்மானிப்பது எனது உரிமை மட்டுமல்ல எனது கடமையும் தான் என்பதை எனக்கு உணர்த்தினார்கள்.

இது யார் பற்றியது தெரியுமா?

மே 30, 2021 அன்று தன் 81 வயதில் மறைந்த ‘காம்ரேட்’ மைதிலி சிவராமன் அவர்களின் ஐஐடி-யில் பேராசிரியராக பணிபுரியும் மகள் கல்பனா கருணாகரன் தன் தாய் குறித்து எழுதிய கட்டுரையில் இருந்து சில குறிப்புகள்.

முத்தாய்ப்பாக,  ‘குடும்பம், குழந்தை, இயக்கம், பொதுவெளி என்பதற்கெல்லாம் இடையே மனிதர்கள் பொதுவாக அமைக்கும் சுவர்களை உடைத்தெறிந்து வாழ்ந்த  ‘காம்ரேடு’மைதிலி எனக்கு அம்மாவாக கிடைத்தது எனது  பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்று முடித்திருந்தார்.

இதைப் படித்தபோது என் அம்மாதான் எனக்கு நினைவில் வருகிறார்.

என் அம்மா எந்த இயக்கத்திலும் சேர்ந்து போராடவில்லை என்றாலும் அந்த நாட்களிலேயே இரவு பகல் பாரது 24 மணி சுழற்சிப் பணியில் பண்டிகை தினங்கள் என பாராது, வெயில் மழை வெள்ளம் புயல் என எல்லா இயற்கை சீற்றங்களின் போதும் பணிக்குச் சென்று உழைப்பே நம் வாழ்க்கையை உயர்த்தும் என்பதை எங்களுக்குள் விதைத்தது முதல் எளிமையான வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, கல்வி குறித்த கண்ணோட்டம் குறிப்பாக மதிப்பெண் குறித்த மதிப்பீடுகள், செய்தித்தாள் வாசித்தல், பிள்ளைகளின் திருமணம் குறித்து அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்பது அவர்களின் உரிமையும் கடமையும் என்பதை வலியுறுத்தியது, எந்தப் பிரச்சனை என்றாலும் ‘எவ்வளவோ பார்த்தாச்சு, இதையும் பார்த்துக்கலாம்’ என தைரியம் கொடுப்பதுடன் முழுமையாக அதை எதிர்த்துப் போராட மன வலிமையை ஊட்டி, தேவைப்பட்டால் பக்கபலமாக இருந்து போராடவும் தவறியதில்லை.

நேர்மையற்ற செயல்பாடுகளை பொதுவெளியில் எங்கு பார்த்தாலும் மிக தைரியமாக குரல்கொடுப்பதில் அவருடைய தைரியத்தைப் பார்த்து நான் இன்னமும் வியந்துகொண்டுதான் இருக்கிறேன்.

இன்றுவரை என் அம்மா இப்படியாக தன் இயல்பில் வாழ்ந்து வருவதற்குக் காரணம் என் அப்பா. அப்பாவும் அம்மாவும் ஒரே டெம்ப்ளேட்டில் வார்த்தெடுத்ததைப் போல நேர்சிந்தனைகொண்டவர்கள். தைரியமானவர்கள். வாழ்க்கை, குழந்தைகள், எதிர்காலம் என அனைத்திலும் ஒன்றுபோல செயல்படுபவர்கள்.

என் அப்பா அம்மா இருவருமே எங்கள் விருப்பத்திலும் உரிமையிலும் கடமையிலும் ஒரு போதும் குறுக்கே வந்ததில்லை. எப்படி வாழ வேண்டும் என வகுப்பெடுத்ததில்லை. ஆனால் தாங்கள் வாழ்ந்து காட்டினார்கள். அம்மா அலுவலகம் சென்றிருக்கும் நேரத்தில் அப்பா தாயுமானவராக, அப்பா அலுவலகம் சென்றிருக்கும் நேரத்தில் அம்மா தந்தையுமானவராக இருந்து எங்களுக்கு பாசத்துடன் பரிவுடன் சேர்த்து மெகா துணிச்சலையும் சேர்த்தே ஊட்டினார்கள்.

இப்படி கணவன் மனைவி இருவரும் ஒத்த சிந்தனையுடன், ஈகோ இல்லாமல், பெருந்தன்மையுடன் வாழ்ந்து வழிகாட்டும் வீடுகளில் வளரும் குழந்தைகள் பாக்கியச்சாலிகள். அவர்களும் பொது வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்தரும் வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட அப்பா அம்மாக்கள் எந்த வீடுகளில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருமே ‘காம்ரேடுகள்’ தான். அவர்களின் பிள்ளைகளும் ‘காம்ரேடுகளின் வாரிசுகள்தான்’

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 993 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon