ஜம்முனு வாழ காம்கேரின் OTP-150: நாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டுமா?

பதிவு எண்: 881 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 150
மே 30, 2021

நாம் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டுமா?

கொரோனா வெர்ஷன் – 2 க்குப் பிறகு காய்கறி கடைக்கு நேராகச் செல்வதைக் கூட தவிர்த்து, எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு காய்கறி கடையில் இருந்து ஆர்டர் செய்து வாங்குகிறோம்.

காய்கறிகளின் பெயர்களை வாட்ஸ் அப்பில் டைப் செய்துகொண்டிருந்தபோது பூசணிக்காய் நினைவு வந்தது. பூசணிக்காய், பரங்கிக்காய் என தேவையான அளவு வெட்டி வாங்கும் காய்கறிகளை சாப்பிட்டு 1-1/2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பூசணிக்காய் அவ்வளவு பிடிக்கும். ஆனால் என்ன செய்வது சுத்தம் சுகாதாரம் கருதி கொரோனாவுக்காக அதுபோன்ற காய்கறிகளை சாப்பிடுவதில்லை. வெட்டாமல் அப்படியே வாங்கினால் சாப்பிட ஆட்கள் இல்லை. எனவே அவற்றை எல்லாம் தியாகம் செய்துள்ளோம். கொரோனாவுக்காக தங்கள் இயல்பு வாழ்க்கையையே பணயம் வைத்து போராட்டக்களத்தில் பணி புரிந்து வரும் மருத்துவர்களின் தியாகத்துக்கு முன் இந்தத் தியாகம் எல்லாம் தூசிக்கு சமம்தான்.

இன்றைய பதிவு பூசணிக்காய் குறித்து அல்ல. ஆனால் பூசணிக்காயையும் பற்றி பேசி இருக்கிறேன்.

‘நான் என் இயல்புபடி எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் பேசுகிறேன். ஆனால், அவர்கள்தான் என்னை புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு மாதிரி பேசி நடிக்க எனக்குத் தெரியாது’ என ஒருசிலர் தான் முகமூடியே இல்லாமல் நேர்மையாக இருப்பதைப் போல கொஞ்சம் கர்வம் மேலோங்க பேசுவதை பார்த்திருக்கிறீர்களா?

அது எப்படி எல்லோரிடமும் ஒரே மாதிரி பேச முடியும். ஒரே விஷயத்தை நம் வீட்டில் உள்ள நம் குழந்தையிடமும், நம் அப்பா அம்மாவிடமும் ஒன்று போல் சொல்ல முடியுமா? முடியாதல்லவா?

அவரவர் வயதுக்கு ஏற்ப அவரவர் புரிதலுக்கு ஏற்ப சொல்லுகின்ற நபருக்கும் நமக்குமான உறவுமுறைக்கு ஏற்ப நாம் சொல்லுகின்ற விஷயத்தின் Voice of Tone மாறுமல்லவா? அதாவது சொல்லுகின்ற விதத்தை மாற்றாமல் எப்படி பேச முடியும்?

உங்கள் மனைவியிடமோ அல்லது கணவனிடமோ பேசுவதைப் போல உங்கள் பணியிடத்தில் உங்கள் தலைமையிடம் பேச முடியுமா? அப்படி உரிமையாகப் பேசும் அளவுக்கு உங்கள் தலைமை நட்பாகவே இருந்தாலும் கூட நாகரிகம் கருதி பேச மாட்டீர்கள் அல்லவா?

அதுபோல்தான் ஒரு விஷயத்தை சொல்லும் விதத்தில் நாம் செய்கின்ற சின்ன சின்ன மாற்றங்கள். இதனால் சொல்லப்படும் விஷயத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை. சொல்லும் விதத்தில் மட்டுமே மாற்றம். பலரும் புரியாமலோ அல்லது பொறாமையினாலோ சொல்வதைப்போல் இதற்குப் பெயர் நடிப்பது என்றோ அல்லது ஆளுக்கு ஏற்றாற்போல் பேசி மயக்கும் வித்தை என்றோ அர்த்தம் கிடையாது. பிறரை மதிப்பது என்ற அளவில்தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வளவு ஏன்? நாம் சமைக்கும் காய்கறிகள் கூட நாம் எப்படி நறுக்குகிறோமோ அதற்கேற்பவே சுவையில் மாறுபடும். காய்கறிகளை நறுக்குவதில்கூட சூட்சுமம் இருக்கிறது.

உதாரணத்துக்கு பூசணிக்காயையே எடுத்துக்கொள்வோமே.

இதை பொடிப்பொடியாக சதுரவாக்கில் நறுக்கி கூட்டு செய்தால் ஒரு சுவை. அதையே நீளவாக்கில் நறுக்கி செய்தால் வேறொரு சுவை.

கொஞ்சம் பெரிய அளவில் நீள்சதுரவாக்கில் நறுக்கி மோர்குழம்பிலும், மோர் கூட்டும் செய்தால் அருமையாக இருக்கும். இதே அளவில் நறுக்கி சாம்பாரில் போட்டாலும் நன்றாக இருக்கும்.

பூசணியையும் தக்காளிடையும் பொடிப்பொடியாக நறுக்கி சூப் செய்து சாப்பிடலாம். பூசணிக்காய் ரசவாங்கி செய்யலாம்.

யோகா மற்றும் தியானங்களில் தீவிரம் காட்டுபவர்கள் பூசணியை சீவி கொஞ்சம் அவல் சேர்த்து தயிர் விட்டு அப்படியே பச்சையாகவே சாப்பிடுவார்கள்.

தூவலாக சீவிய பூசணியை சர்க்கரை சேர்த்து பூசணிக்காய் அல்வா (காசி அல்வா) செய்து சாப்பிடலாம்.

இப்படி பூசணிக்காயை சிறியதாக நறுக்கினால் ஒரு சுவை. பெரியதாக நறுக்கினால் வேறொரு சுவை. சீவினால் மற்றொரு புதிய சுவை. இவற்றுடன் புளி சேர்த்தால் ஒரு சுவை. மோர் சேர்த்தால் வேறொரு சுவை. சர்க்கரை சேர்த்தால் இனிப்பு சுவை.

இது பூசணிக்காய்க்கு மட்டுமல்ல. அனைத்துக் காய்களுக்கும் பொருந்தும்.

காயை ஏனோதானோவென்று நறுக்கினால் சுவையும் அதற்கேற்பவே இருக்கும்.

காய் ஒன்றுதான். ஆனால் அதை நறுக்குவதிலும், அதனுடன் சேர்க்கும் பொருட்களினாலும் அதன் சுவை மாறுவதைப் போலதான் நாம் பேசுகின்ற பேச்சும்.

ஒரே விஷயம்தான். ஆனால் அதை அவரவர் சொல்லும் முறையில் அதற்கான மதிப்பைப் பெறுகிறது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 1,225 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon