ஜம்முனு வாழ காம்கேரின் OTP-167: அன்புள்ள!

பதிவு எண்: 898 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 167
ஜூன் 16, 2021

அன்புள்ள …,

நீ எப்படி இருக்கிறாய்? கொரோனா கால சிறப்பு பணிக்காக உன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று வேறொரு ஊரில் பணியாற்றி வருகிறாய். காரணம் அங்குதான் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் உனக்கு அங்கு டியூட்டி போட்டுள்ளதாகச் சொன்னாய். வாரத்தின் அனைத்து நாட்களும் ஓய்வில்லாமல் வேலை, அந்த அளவுக்கு கொரோனா பாதித்த மக்கள் சிகிச்சைக்காக வந்துகொண்டே இருக்கிறார்கள் என சென்ற வாரம் போன் செய்த போது சொன்னாய்.

சில நாட்கள் இரத்தப் பரிசோதனை, சில நாட்கள் மாத்திரைகள் வழங்குதல், சில நாட்கள் கவுன்சிலிங் பிரிவில், சில நாட்கள் பில்லிங் செக்‌ஷன் என படுபிசியாய் இருக்கிறது என்றும் காலை முதல் இரவு வரை வேலை சரியாக இருக்கிறது என்றும் சொன்னாய்.

காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் எல்லாம் வேளா வேளைக்கு மணி அடித்தாற்போல் வந்துவிடும். ஆனால் கொரோனாகால மருத்துவமனை சூழலால் சாப்பிடத்தான் தோன்றாது என்றும் சொன்னாய்.

இரவு படுத்து உறங்குவதற்கு உன்னுடன் பணிபுரியும் நான்கு பெண்கள் இருக்கும் அறையை ஒதுக்கி இருக்கிறார்கள் என்றும், ஆனால் தரையில்தான் படுக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தாய். எல்லோரும் எழுந்து கொள்வதற்கு முன் எழுந்து குளித்து தயாராகிவிடுவதாகவும் சொல்லி இருந்தாய்.

வேலை பளுவில் இயற்கை உபாதைகளுக்காக கூட எழுந்து செல்ல  முடியாத சூழல் இருக்கும் என்பதைச் சொன்னபோது மிகவும் கவலையாக இருந்தது.

நாள் முழுவதும் பாதுகாப்புக் கவச உடையில் இருப்பது உடலே வெந்து போய்விடுமோ எனும் அளவுக்கு இறுக்கமாக இருக்கிறது என்றபோது உன் சேவை சார்ந்த பணி மீது மிகப் பெரிய மரியாதை உண்டானது. உன் மீதும் மதிப்பு கூடியது.

சென்ற மாதம் தினமும் ஏழு எட்டு என இறப்புகள் இருந்ததாகவும், இப்போது குறைந்து வருவதாகவும் சொன்னாய். எல்லாம் 20,21 வயது இள வயது மரணங்கள் என்றும், அவர்களைப் பார்க்கும்போது உன் மகன் நினைவு வருவதாகவும் சொல்லி வருத்தப்பட்டாய்.

உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. உன் பணியின் தன்மையினால் கொரோனா காலத்தில் நேரடியாக களத்தில் இறங்கி சர்வீஸ் செய்கிறாய். வழக்கம்போல் பணிக்கான சம்பளம் கிடைக்கத்தான் போகிறது. ஆனாலும் எத்தனை பேருகுக்கு இப்படி நேரடியாக களத்தில் இறங்கி பணிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும்?

ஒரு முறை நாங்கள் ஒரு ஆஸ்ரமத்தில் அங்குள்ள குழந்தைகளுடனும் பாட்டிகளுடனும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்ததை சொன்னபோது ‘நான்தான் வெட்டியாக வாழ்கிறேன் என நினைக்கிறேன். நீ எப்படி எல்லாம் உருப்படியாக சமுதாயத்துக்கு பயனுள்ள வகையில் வாழ்கிறாய்’ என சொல்லி வருந்தினாய்.

உண்மைதான், நான் குடும்பத்துடன் தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை போன்றவற்றை ஆதரவற்ற இல்லங்களில் கொண்டாடுவது வழக்கம்தான்.

ஒன்றை புரிந்துகொள். நாங்கள் எல்லாம் எங்களுக்கு சவுகர்யமான நேரத்தில் எங்கள் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது எங்கள் மனதுக்குப் பிடித்த வகையில் சர்வீஸ் செய்கிறோம்.

ஆனால் நீயோ, உனக்குப் பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் உயிர் காக்கும் கவசத்துடன் நாள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல உயிர்களைக் காக்கும் பணியில் இருக்கிறாய். அது எத்தனை பெரிய கொடுப்பினை. இப்போது கூட நானும் என் குடும்பமும் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு Work From Home செய்துகொண்டு பத்திரமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் நீயோ உன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேறு ஊர் சென்று, நாள் முழுவதும் பாதுகாப்புக் கவச உடையின் வியர்வையில் குளித்து, உயிர் பயத்தைத் துறந்து, பிறருக்காக சேவை சார்ந்த பணியில் ஈடுபட்டுள்ளாய். உண்மையில் உன்னை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் என் அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருந்தபோது சிகிச்சை அளித்த டாக்டர்களின் சீரியப் பணியைப் நேரடியாக பார்த்தபோது  ‘நான் ஒரு டாக்டர் ஆகவில்லையே’ என நினைத்து வருந்தினேன். இப்போது உன் பணியினைப்  பார்க்கும்போது  நீ பணிபுரியும் மருத்துவமனை டாக்டர்களின் சேவையைப் பற்றி சொல்வதைக் கேட்கும்போது திரும்பவும் ‘நான் டாக்டராகி இருக்கலாம்’ என நினைத்து ஏங்குகிறேன்.

ஆனால் எங்கள் துறையில் மருத்துவத் துறைக்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்து சாஃப்ட்வேர்கள் உருவாக்கி இருக்கிறோம் என்பது வேறு விஷயம். நான் ஏங்குவது நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணிபுரியும் உயிர்காக்கும் அந்த சேவைக்காக!

Hats off to you!

முக்கியக் குறிப்பு:

இந்த கடிதத்தை மருத்துவமனையில் பணிபுரியும் என் பெரியப்பா மகளுக்கு எழுதி உள்ளேன். போனிலேயே எல்லா விஷயங்களையும் பேசி விடுகிறோம்தான். ஆனாலும் வார விடுப்பில்லாமல் உழைத்துக் களைத்து ஒரே மாதிரியான வேலை செய்து செய்து இறுக்கமான மனநிலையில் இருப்பவருக்கு உற்சாகம் கொடுக்க நினைத்து கடிதமாக எழுதினேன். சில விஷயங்களை காதால் கேட்பதைவிட எழுத்தில் வாசிக்கும்போது மனதுக்குள் உண்மை ஊடுருவிச் செல்லும் அல்லவா?

இதில் உள்ள உண்மை நிலவரம் மருத்துவமனைகளில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களுக்கும் சாலப் பொருந்தும். ஆகவேதான், அன்புள்ள என்று ஆரம்பித்த கடிதத்தில் பெயர் எதுவும் எழுதாமல் … என வெற்றிடமாக வைத்துள்ளேன். மருத்துவமனை பணியாளர்கள் யார் பெயரையும் இங்கு பூர்த்தி செய்துகொள்ளலாம்.

கொரோனா காலத்தில் மருத்துவமனையே வீடாகக் கருதி அங்கேயே தங்கி பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இன்னபிற பணியாளர்களுக்கும், மருந்தகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP­

(Visited 738 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon