பதிவு எண்: 897 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 166
ஜூன் 15, 2021
முரண்பட்ட புரிதல்கள்!
நேற்று இரண்டு போன் அழைப்புகள். மந்தமாக இருந்த மனநிலையை சுறுசுறுப்பாக்கின.
முதல் அழைப்பு. என் புத்தகங்கள் குறித்து கேட்டு தஞ்சை மாவட்டத்துக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து. நான் எழுதியுள்ள கம்ப்யூட்டர் புத்தகங்கள் மிக எளிமையாக இருப்பதாகக் கூறி பாராட்டினார். எனது ஆசிரியர் குறிப்பில் நான் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருப்பதாக சொல்லி இருப்பதால் அவை அத்தனையும் PDF ஆக கிடைக்குமா என கேட்டதும் உஷாரானேன்.
உடனே நான், ‘இ-புத்தகங்களாக அமேசானில் கிடைக்கும், அவற்றில் இருந்து உங்களுக்கு விருப்பமான புத்தகத்தை நீங்களே தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம்’ என சொன்னேன்.
‘மேடம், அங்கெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டுமே… நீங்கள் தான் எழுதியது என்றால் இலவசமாக எனக்கு PDF ஆக அனுப்புங்களேன்… பல வாட்ஸ் அப் குழுக்களில் புத்தகங்கL PDF ஆக இலவசமாகவே விற்பனை செய்கிறார்களே… நீங்களே நூலாசிரியர் எனும்போது ஏன் இலவசமாக PDF கொடுக்கக் கூடாது’
இ-புத்தகங்கள் என்றாலே அது இலவச PDF தான் எனும் அளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த மனோநிலையை மாற்றுவது அத்தனை சுலபமில்லை என்பதும் புரிந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த போன் அழைப்பு.
அந்த அழைப்பு 52 வயதுள்ள ஒரு பெண்மணியிடம் இருந்து.
‘மேடம் நீங்கள் எழுதிய புத்தகங்கள் நான் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்களை உங்கள் வெப்சைட்டிலும் வாசித்து வருகிறேன். இந்த சின்ன வயதில் ஒரு நிறுவனம் நடத்தி வருவது எங்களைப் போன்றோருக்கெல்லாம் உத்வேகமாக உள்ளது…’
நான் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘எனக்கு 52 வயதாகிறது… என்னைப் போன்றோர்களுக்கே எத்தனை பிரச்சனைகள், எத்தனை சவால்கள் இந்த சமுதாயத்தில்… இந்த சின்ன வயதில் நீங்கள் இப்படி வெற்றிகரமாக செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேடம்…’ என்று பேசிக்கொண்டே போனார்.
இப்போதுதான் நான் இடைமறித்தேன்.
‘மேடம் நான் கடந்த 28 வருடங்களாக நிறுவனம் நடத்தி வருகிறேன்…’ என்றேன்.
‘அதானம்மா, இத்தனை சிறிய வயதில் ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்து வருவது ஒரு பெண்ணாக எனக்குப் பெருமையாக இருக்கிறது… என்னைப் போன்ற வயதானவர்களுக்கே ஊக்கமாக உள்ளது…’ என அவர் புரிந்துகொண்டதையே திரும்பத் திரும்ப சொன்னார்.
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் 52 வயதையே ‘வயதானவர்’ என்ற முத்திரிரையுடன் திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருப்பது.
அவருக்கு எக்ஸலில் மேக்ரோ மூலம் புரோகிராம் எழுதுவதில் ஏதோ சந்தேகம் என்று கேட்டார். இமெயிலில் அவரது சந்தேகத்தை அனுப்பச் சொன்னேன். இருந்தாலும் என்ன சந்தேகம் என்று தெரிந்துகொள்வதற்காக போனில் சுருக்கமாகச் சொல்லச் சொன்னேன்.
எளிதில் விளக்கக்கூடிய சந்தேகம் என்பதால் போனிலேயே தீர்வு சொன்னேன். கற்பூரமாய் புரிந்துகொண்டுவிட்டார்.
‘என் மகள்களுக்கு உங்களைத்தான் உதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். ‘இந்த சின்ன வயதில் எப்படி சாதனை செய்துகொண்டிருக்கிறார் பாருங்கள் இவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லாத நாட்களே கிடையாது…’
அவர் மகள்களின் வயதையும் என்னையும் ஒன்றாக கருதியே அவர் கடைசிவரை பேசிக்கொண்டிருந்தார்.
போனை வைப்பதற்கு முன் மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.
‘என் மகள்போல உங்களைக் கருதியே இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். தொந்திரவு கொடுத்திருந்தால் மன்னிக்கவும்… பொறுமையாக என் எக்ஸல் சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி!’ என்றபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
கம்ப்யூட்டர் லாஜிக்கை கற்பூரமாய் புரிந்துகொண்டவருக்கு கணக்கு புரியாததுதான் வருத்தமாக இருந்தது.
அவர் மனதில் என்னை சிறிய பெண்ணாக உருவகம் செய்து கொண்டுவிட்டார். அந்த பிம்பத்தை மாற்றுவது அத்தனை சுலபமல்ல என்பது புரிந்ததால் நன்றி சொல்லி போனை வைத்தேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP