பதிவு எண்: 899 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 168
ஜூன் 17, 2021
பரம்பரை செல்வந்தரும், திடீர் செல்வந்தரும்!
நல்லவர்களாக இருப்பவர்களை இந்த உலகம் விரும்புவதில்லை. அவர்களை எப்படியாவது கெட்டவனாக்கிப் பார்த்துவிட வேண்டும் என துடியாய் துடித்துக்கொண்டிருக்கும்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன வார்த்தைகளிலாவது சீண்டி சீண்டி எப்படியாவது வெறுப்பேற்றி கொஞ்சமாகவாவது கெட்டவனாக்கிவிட முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள்.
ஆனால் நல்லவர்களைப் பாருங்கள். அமைதியாக தானுண்டு, தன் வேலை உண்டு என தன் கடமைகளை செய்துகொண்டிருப்பார்கள். அத்தோடு நின்றுகொண்டால் பரவாயில்லை. தன்னிடம் தன் கோப தாபங்களை ஏமாற்றங்களைக் கொட்ட வருபவர்களிடம் ‘வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். நாம் நம் கடமையைப் பார்ப்போம்…’ என்றும், ‘அவர்கள் கெட்டது செய்தால் என்றாவது ஒருநாள் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும், நாம் யார் தண்டனைக் கொடுக்க…’ என்றும் தன்னுடைய சாத்வீகமான குணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இதுதான் பெரும்பாலானோருக்குப் பிடிப்பதில்லை.
‘என்னவோ இவருதான் பெரிய மனசுக்காரராம்… பெருசா சொல்ல வந்துட்டார்…’, ‘இவருக்கு எல்லாம் நல்லபடியா நடந்து வருவதால் வேதாந்தம் பேசுறார்… ஏதேனும் அடிபடும்போதுதானே தெரியும்…’ என்று மனதுக்குள் கருவிக்கொண்டே இருப்பார்கள். ‘எப்போதடா ஏதேனும் நடந்து இவனும் நம்மைப் போல புலம்புவான், அழுவான், கதறுவான், கொஞ்சமாகவாவது கோபத்தைக் கொட்டுவான்’ என்று ஒற்றை மீனுக்காக நாள் முழுவதும் காத்திருக்கும் கொக்குபோல கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.
அதனால்தான் சொல்கிறேன். நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது. தான் நல்லவன் என்பதை வார்த்தைகளாலும் உடல் மொழிகளாலும் எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக அமைதியாக கடந்து சென்றுகொண்டே இருப்பதுதான் நல்லவன் நல்லவனாக வாழ்வதற்கான ஒரே வழி.
இல்லை என்றால் உங்களை ஒரு நாளாவது, ஒரு மணி நேரமாவது, ஒரு நிமிடமாவது கெட்டவனாக்கி அதைப் பார்த்து மகிழ இந்த உலகம் காத்திருக்கும்.
காரணம், பொன்னும் பொருளும் வைத்திருப்பவர்கள் எப்படி பணக்காரர்கள் என்ற முத்திரையுடன் வளைய வருகிறார்களோ அப்படித்தான் நல்லவர்களும். அவர்களின் நல்ல குணங்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் இணையானது. பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் இவ்வளவு கோடி இருக்கிறது என சதா பொதுவெளியில் யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்களா? இல்லை எனக்கு இத்தனை பவுன் நகைகள் இருக்கின்றன, வங்கியில் இவ்வளவு பணம் சேமிப்பில் உள்ளது, இத்தனை ஏக்கர் நிலம் என் குடும்பத்தார் அனைவரின் பெயரிலும் வைத்திருக்கிறேன் அப்படி இப்படி என வாய் விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி சதா சொல்லிக்கொண்டிருந்தால் அவர்களின் மேல் வருமான வரித்துறைக்கு புகார் சென்று விடும். அவை உண்மையிலேயே அவர்கள் உழைப்பில் சம்பாதித்தவை என்றாலுமே, அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்.
பரம்பரை பரம்பரையாக நல்ல வசதியாக வாழ்பவர்களையும், உழைத்து சம்பாதித்து செல்வந்தர்களாக உயர்ந்திருப்பவர்களையும் கவனித்திருக்கிறீர்களா? எளிமையாக இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு கம்பீரம் இருக்கும். குடும்பத்துடன் அமைதியாக வாழ்வார்கள். ஆனால் அதில் ஒரு பெருமிதம் இருக்கும். வலது கை கொடுத்தால் இடது கைக்குத் தெரியாதவண்ணம் அறங்கள் பல செய்வார்கள். ஆனால் தற்பெருமை ஒருதுளியும் இருக்காது. இவர்களை பெரும்பாலானோருக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் திடீர் செல்வந்தர்களை கவனியுங்கள். அவர்கள் பகட்டு, படோடாபம், ஆடம்பரம், கர்வம் என அத்தனையும் அப்பட்டமாக வெளியில் காட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை பெரும்பான்மையினருக்குப் பிடிப்பதில்லை.
இதே லாஜிக்தான் நல்லவர்களாக இருப்பதும் அதை கடைசிவரை தக்கவைத்துக்கொள்வதும்.
நீங்கள் நல்லவராக இருந்தால், பரம்பரை செல்வந்தர்களிடமும் உழைப்பால் உயர்ந்தவர்களிடமும் இருக்கின்ற குணாதிசயங்களுடன் வாழப் பழகுங்கள். அந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்தது உங்களிடம் உள்ள நல்ல குணங்கள்.
திடீர் செல்வந்தரைப் போல நீங்கள் நல்லவர் என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டு ‘பில்டப்’ கொடுப்பவராக இருந்தால், உங்கள் நல்லவர் என்ற பட்டத்தைக் கிழித்தெறிய இந்த உலகம் துடித்துக்கொண்டிருக்கும். எந்த நேரமும் உங்கள் நல்லவர் பட்டத்தை திருடிச் செல்ல பலர் காத்திருப்பார்கள்.
எனவே நல்லவர் என்ற பட்டம், உங்களிடம் இருக்கும் மதிப்பு வாய்ந்த பணத்துக்கும், பொன்னுக்கும், பொருளுக்கும் இன்ன பிற அசையும் சொத்து, அசையா சொத்துக்களுக்கும் மேலானது. அவற்றைத் தொலைக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் நல்லவராக இருப்பதை சதா வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டே இருக்க வேண்டாம். உங்களுக்காக உங்கள் மனதுக்காக உங்கள் இயல்பில் நல்லவராக இருங்கள். இயல்பாக செயல்படுங்கள். அமைதியாக வாழுங்கள். மக்களுடன் மக்களாகப் பழகுங்கள். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாவிட்டாலும், காலில் போட்டு மிதிக்க மாட்டார்கள்.
சுருங்கச் சொன்னால், இயல்பிலேயே நல்லவராக இருப்பது பரப்பரை செல்வந்தராக இருப்பதற்கு சமம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP