ஜம்முனு வாழ காம்கேரின் OTP-173: நம்மில் பெரும்பாலானோரின் சிக்கல் என்ன தெரியுமா?

பதிவு எண்: 904 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 173
ஜூன் 22, 2021

நம்மில் பெரும்பாலானோரின் சிக்கல் என்ன தெரியுமா?

பெரும்பான்மையினர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே வாழ வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்துக்குள் சிக்கிக்கொள்வதுதான்.

நம்மைச் சுற்றி உள்ள நம்மை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் எப்படி எல்லாம் வாழ்க்கை நடத்துகிறார்களோ அப்படியே வாழ ஆசைப்படுவதும் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதும்தான் பெரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வைக்கிறது.

உடைகள், உணவுகள், ஸ்டைல்கள் என அனைத்தும் ட்ரெண்டிங் ஆவதும் இதே மனோபாவத்தினால்தான்.

நமக்குப் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்.  சக வயதினர் எதை விரும்புகிறார்களோ அதையே தங்கள் விருப்பமாக ஏற்றுக்கொண்டு அந்த மெகா சங்கமத்தில் தாங்களும் கலந்து ஒன்றாவதற்கே பலரும் விரும்புகிறார்கள்.

ஆனால் நேர்மையாக இருப்பவர்களைப் பார்த்து அதுபோல நாமும் இருக்க வேண்டும் என பெரும்பாலும் நினைப்பதில்லை. அன்பாக பண்பாகப் பழகுபவர்களைப் பார்த்து அவர்களைப் போல் இருக்க வேண்டும் எனவும் முயற்சிப்பதில்லை. அவர்களுக்கு ‘அது’ இருப்பதால் அப்படி பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார்கள், இவர்களுக்கு ‘இது’ இருப்பதால் அப்படி சிரித்து சிரித்துப் பேச முடிகிறது என்று ஏதேனும் ஒரு ‘சாக்கு’ சொல்லி தங்கள் மனதை கட்டுப்படுத்தி அடக்கி வைத்து மனம் அனிச்சையாக மாற நினைத்தாலும் மாறவே முடியாத வகையில் பெரிய அரண்களை தங்கள் மனதுக்கு அமைத்துக்கொள்கிறார்கள்.

ஆக, பொருளாதார ரீதியாக பிறர் உயர் நிலையில் இருப்பதைப் போல தாங்களும் மாறுவதற்கு கடன் வாங்கியாவது உயர்ரகக் கார், மூன்று அறைகள் கொண்ட வீடு என தங்கள் ஆடம்பரத்தை கூட்டிக்கொள்ள முடிகின்றவர்களால், மிக எளிமையாக செலவே இல்லாத வகையில் முயற்சி செய்து நேர்மையாகவும், அன்பாகவும், பண்பாகவும் வாழ்வதற்கு முடிவதில்லை.

காரணம், பொருளாதாரத்தினால் உயர்நிலையை அடைவது ஒருவித கிளர்ச்சியைக் கொடுக்கிறது. அந்தக் கிளர்ச்சி அவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் உந்து சக்தியாக அமைந்து அவர்களைப் போல மாற வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.

ஆனால், குணாதிசயங்களினால் உயர்நிலையை அடைவது ‘ஏதோ பாவப்பட்ட ஜென்மம்’, ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்ற சுயபச்சாதாப உணர்வைக் கொடுக்கிறது. அந்த தாழ்மைப்படுத்தப்படும் உணர்வு ‘ஐயோ, எதற்காக இப்படி நல்லவர்களாக இருக்க வேண்டும்?’ என்ற எதிர்மறை எண்ணத்தையே விதைக்கிறது.

எப்போது குணத்தால் உயர்ந்தவர்களுக்கும் தங்கள் குணாதிசயங்களினால் பெருமித உணர்வு ஏற்படுகிறதோ அப்போது அவர்களைப் போல மற்றவர்களும் மாற வேண்டும் என்ற உந்துசக்தி ஏற்படும்.

ஆனால் இங்கு குணத்தால் உயர்ந்தவர்கள் ‘நான் இப்படி இருப்பதால் என்னை எல்லோரும் ஏமாற்றுக்கிறார்கள்’, ‘ஏமாளி என்கிறார்கள்’, ‘பிழைக்கத் தெரியாதவன் என முத்திரைக் குத்துகிறார்கள்’ என்றல்லவா புலம்புகிறார்கள். மற்றவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ அவர்களுக்குள்ளேயே அவர்களின் குணாதிசயங்களினால் அவர்கள் கொண்டாடப்படுவதில்லை என்ற ஏக்கம் உண்டாவதால்தான் வார்த்தைகளாலும், செய்கைகளினாலும், உடல் மொழியாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பள்ளி சிறுவன் சதா தன் சக நண்பர்களை சீண்டிக்கொண்டே இருந்தான். மட்டம் தட்டிப் பேசுவான். அவனுக்கு புத்திமதி சொல்ல நினைத்த அவன் அம்மா அவர்கள் உறவினர்களில் ஒரு சிலரை உதாரணம் காட்டி  ‘அவர்கள் எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள், வாழ்க்கையில் உன்னத நிலையை அடைந்துள்ளார்கள். அதற்கெல்லாம் காரணம் அவர்கள் யாரையும் புண்படுத்துவதில்லை. எனவே நீயும் அவர்களைப் போல நல்லவர்களாக பழக ஆரம்பித்தால் உன்னாலும் நல்ல நிலைக்கு உயர முடியும்’ என்று சொன்னபோது அந்த சிறுவன் என்ன சொன்னான் தெரியுமா?

‘அம்மா, நான் இப்போதே சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்… இப்போதே நல்ல நிலையில்தானே இருக்கிறேன்… நான் மற்றவர்களை சீண்டும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேனே, எனக்கு சந்தோஷம் கிடைக்கிறதே… நான் ஏன் மாற வேண்டும்? இப்படியே இருந்துகொள்கிறேனே’ என்றான்.

அவன் இப்போது நல்ல நிலையில் இருப்பது அவன் பெற்றோர்களின் உழைப்பினால் என்பதும், அவனுக்கு தற்சமயம் கிடைத்துக்கொண்டிருக்கும் மகிழ்ச்சி பிறரை சீண்டுவதால் கிடைக்கும் மிக மோசமான கீழ்த்தரமான உணர்வு என்பதும்கூட தெரியவில்லை என்பதே சோகத்தின் உச்சகட்டம்.

இப்படித்தான் நம்மில் பலருக்கு எது உண்மையான பெருமித உணர்வு என்பது தெரியவதில்லை. காரணம், பொருளாதாரத்தினால் (மட்டும்) உயர்ந்தவர் பெருமிதமாகவும், குணத்தினால் மேம்பட்டு வாழ்பவர்கள் ஏதோ தாங்கள் கஷ்டப்படுவதைப் போலவும் ஒரு பிம்பத்தை இந்த உலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதுதான்.

எனவே, பெரும்பான்மையினரைப் பார்த்து நம் உணர்வுகளை நாம் கட்டமைப்பதைவிட நமக்கு எது பொருந்துகிறதோ நம் ஆழ்மனதுக்கு எது பிடித்திருக்கிறதோ அதன்படி வாழ முயன்றால் நம்மைப் பார்த்து பலர் உருவாகக் கூடிய அளவுக்கு நாம் ஆகச் சிறந்த ரோல்மாடலாகலாம்.

நான் அப்படித்தான் வாழ்கிறேன். ஒரு நாளும் நான் எளிமையாக வாழ்வதற்காக வெட்கப்பட்டதில்லை. அலுவலகம் என்றாலும் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும் ஒரே விதமான ஆடைதான். அலுவலகத்தில் இருந்தால், நிர்வாக நிகழ்ச்சிகள் என்றால் கூடுதலாக நான் அணிந்திருக்கும் ஆடை மேல் ஒரு ‘கோட்’ போட்டிருப்பேன். அவ்வளவுதான்.

மற்றபடி குடும்ப நிகழ்ச்சிகளில்கூட பட்டாடை, நகை போன்ற புற அலங்காரங்களினால் என் தரத்தை உயர்த்திக்கொண்டதே இல்லை. அதற்காக மெனக்கெட்டதும் இல்லை. ஆனால் Presentable ஆக உடை அணிந்துகொள்வேன். எளிமையிலும் கம்பீரத்தைக் கொண்டுவரக் கூடிய லாஜிக்கை கற்றிருக்கிறேன்.

எப்படி Presentable ஆக உடை அணிந்துகொள்கிறேனோ அப்படி Presentable ஆக என் சிந்தனைகளையும் கட்டமைத்துக்கொண்டு வாழ்கிறேன்.

அகமும் புறமும் ஒன்றுபோல் அமைந்துவிட்டால் வாழ்க்கை பேரானந்தத்தை அள்ளி அள்ளிக்கொடுக்கும். அதை அள்ளி அள்ளிப் பருக நாம் நம் சுயத்துடன் வாழ வேண்டும். அதைவிட்டு, நமக்குப் பிடிக்காத ஒன்றை மற்றவர்களுக்காக அவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என நினைத்து வேடம் பூண ஆரம்பிக்கும்போதுதான் பலவிதமான உளவியல் சிக்கல்கள் ஆரம்பமாகிறது. பல உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் அதுவே காரணமாகிறது.

உடலும் உள்ளமும் நலமாக இருக்க நமக்குப் பிடித்தபடி வாழ முயற்சிப்போம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 255 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon