பதிவு எண்: 905 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 174
ஜூன் 23, 2021
தேர்வெழுதும்போது பிள்ளையார்சுழி போடலாமா?
இருவர்.
ஒருவர் மிக மென்மையானவர். நேர்மறையாக மட்டுமே பேசுவார். நல்லவற்றை மட்டுமே செய்வார். எல்லோருடனும் மரியாதையுடன் நடந்துகொள்வார். தனக்கு பாதகம் வந்தால் கூட நியாயமானதை மட்டுமே சிந்தித்து செயல்படுத்துவார். இவரது நோக்கத்தில் பொதுநலன் அதிகம் இருக்கும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இவருக்கு ‘ரொம்ப நல்லவர்பா’ என்ற அடைமொழி உண்டு.
இரண்டாமானவர் கொஞ்சம் தடாலடிப் பேர்வழி. பாம்பென்றும் பயப்பட முடியாது, கயிறென்றும் தாண்டிவிட முடியாது. எதிர்மறை விஷயங்கள் நிறையவே செய்வார். எப்போதுமே எல்லா விஷயங்களிலுமே சுயநலம் அதிகம் இருக்கும். இதனால் அடுத்தவருக்கு கஷ்டம் வந்தால்கூட தன் நலனைக் கருதியே செயல்படுவதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டிய நபர். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ‘பார்த்துப்பா, அவர் அவ்வளவு நல்லவர் இல்லை…’ என்ற அடைமொழி உண்டு.
முதலாமானவர் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் இரண்டாமானவரை தன்னைப் போல மாற்றவே முடியாது. ஆனால் இரண்டாமானவர் முதலாமானவரை தன்னைப் போல முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிடக் கூடியவர்.
ஒருவர் தனக்குப் பிடிக்காதவரை சீண்டிக்கொண்டே இருந்தால் எதிராளி ஒரு கட்டத்தில் ‘ஏய்… என் பொறுமைக்கும் எல்லை உண்டு’ என கத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தி அவரை திட்டுவதற்கும், அவரைப் போலவே நடந்துகொள்வதற்கும், ஏன் அவரைப் போலவே மாறுவதற்கும் நிறைய வாய்ப்புண்டு. ஆனால் ஒரு நல்லவர் எத்தனைதான் நல்ல விஷயங்களை மற்றவருக்கு போதித்தாலும் ‘ஏய் என்ன இப்படி நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறாய்… என் பொறுமைக்கும் எல்லை உண்டு… உன்னைப் போல் நானும் நல்லவனாக மாறிவிடுவேன்’ என யாரும் சொல்வதில்லை. அது நடக்கவும் நடக்காத விஷயம். இதுதான் நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்குமான வித்தியாசம்.
சுருங்கச் சொன்னால், நல்லவை அத்தனை எளிதில் மற்றவர்களிடம் மாற்றத்தைக் கொண்டுவருவது கிடையாது. கெட்டவை வெகு விரைவில் மற்றவர்களிடம் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடக் கூடியது. மனதில் நல்லவற்றை ஏற்றுவது கடினம். ஆனால் கெட்டவற்றை ஏற்றுவது சுலபமாக இருப்பதே இதற்குக் காரணம்.
நிறைய நல்ல ஆப்பிள்கள் இருக்கும் ஒரு கூடையில் ஒரே ஒரு ஆப்பிள் ஒரு முனையில் அழுகி இருந்தால்போதும், அது மற்ற ஆப்பிள்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழுகச் செய்துவிடும். இதே லாஜிக்தான் மனிதர்களிடமும்.
பத்து நல்ல மனிதர்கள் இணைந்து ஒரு கெட்டவனை நல்லவனாக்க முடியாது. ஆனால் ஒரே ஒரு கெட்டவன் நல்லவர்கள் குழுமி இருக்கும் ஒரு கூட்டத்தினரையே அசைத்துப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் போல மாற்றிவிட முடியும். இது ஒரு சாபக்கேடுதான்.
நல்லவற்றுக்குக்கான ஆற்றல் அவ்வளவுதான். நல்லவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் நல்ல செயல்பாடுகளும் மிக மிக ஆழமாகவும் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருந்தால் மட்டுமே அவை பெருமளவில் பெருகக் கூடும். தீயவை நுழைய சிறிய இடைவெளிகூட கிடைக்க முடியாத அளவுக்கு நல்லவையும் நல்லவர்களும் பிரமாண்டமாய் விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.
நல்லவைப் பெருக வேண்டுமானால் ‘நாங்கள் நல்லவர்கள், வல்லவர்கள்’ என்ற புற அடையாளத்துக்கும் அங்கீகாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் எதிராளி நம் செயல்பாடுகளினால் ‘நல்லவர்கள் வல்லவர்கள்’ என உணரும்படி நடந்துகொள்ள வேண்டும். பேச்சால் புரிய வைப்பதைவிட உணர்வினால் புரிய வைப்பதற்கான வீரியம் அதிகம்.
நாம் புத்திசாலி என்பதை நம் பேச்சினாலும் செயல்பாடுகளினாலும் வெளிப்படுத்துவதைவிட நாம் புத்திசாலி என எதிராளி மனதின் ஓரத்தில் உணர்ந்துகொண்டாலே அதுவே நமக்கான அரணாக அமையும். உணர வைக்கவே முடியாமல் வெறும் வார்த்தைகளால் பேசிக்கொண்டிருப்பது எந்த விதத்திலும் பலன் கொடுக்கவே கொடுக்காது.
புற அடையாளங்கள் பெரும்பாலும் நம்மை அழிப்பதற்கே பயன்படுகிறது. புற அடையாளங்கள் தீய சக்திகளை அழையா விருந்தாளியாய் அழைத்து நம் அருகில் வைத்துக்கொள்வதற்கே வழிவகுக்கிறது.
தேர்வுகளை எழுதும்போது விடைத்தாளில் பிள்ளையார்சுழி போட வேண்டாம் என என் பெற்றோர் சொல்லிக்கொடுத்துள்ளார்கள். காரணம் விடைத் தாளை திருத்துபவர் யாராக வேண்டுமானாலும் இருப்பார்கள். அவர்களுக்கு அது உறுத்தலாக அமைந்து விடைத்தாளை திருத்துபவரின் மனப்போக்கையே மாற்றிவிடக்கூடும். எனவே நம் பக்தி, நம்பிக்கை இவற்றை நம் மனதுக்குள் வைத்துக்கொண்டு பிராத்தனை செய்துகொண்டு தேர்வெழுதத் தொடங்கலாம். இதில் உள்ள பிரமாண்டமான உளவியலை கவனியுங்கள். புறத்தால் நம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதைவிட அகத்தால் நாம் எண்ணும் நல்ல விஷயங்கள் மூலம் அதிர்வலைகளை உண்டாக்குவதே மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இதை எல்லா விஷயங்களுக்கும் பொருத்திக்கொள்ள முடியும்.
நல்லவற்றை வெறி கொண்டு அழிப்பதே தீய சக்திகளின் ஆற்றல். தீய சக்திகளின் ஆற்றலை வெறிகொண்டு அழிக்கும் அளவுக்கு வேகம் நல்ல சக்திகளுக்கு இருப்பதில்லை. 1:1000 விகிதத்தில் கெட்ட சக்தியும் நல்ல சக்தியும் போட்டிப் போடுவதால் ஒரு தீயதை விரட்ட 1000 நல்ல விஷயங்கள் தேவைப்படுகிறது.
அந்த 1000 நல்ல விஷயங்களுள் நாமும் ஒன்றாக இருப்பதற்கு முயற்சிப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP