ஜம்முனு வாழ காம்கேரின் OTP-172: ஆறப்போடு, எல்லாம் சரியாகும்!

பதிவு எண்: 903 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 172
ஜூன் 21, 2021

ஆறப்போடு, எல்லாம் சரியாகும்!

‘எந்த வேலைக்கும் லாயக்கு இல்லைன்னாலும் வேளா வேளைக்கு கொட்டிக்க மட்டும் சரியா வந்துடு!’ – முன்பெல்லாம் வீடுகளில் வெட்டியாய் சுற்றும் பிள்ளைகளுக்கு விழும் வசவுகளில் இது மிகப் பிரபலம்.

ஆனால் இப்போதெல்லாம் வேளா வேளைக்கு சாப்பிடுவதைக்கூட சரியாக செய்வதில்லை என்பதுதான் வேதனை.

காரணம். நேரத்துக்கு உறங்கினால்தானே நேரத்துக்கு தூக்கத்தில் இருந்து எழ முடியும். நேரத்துக்கு எழுந்தால்தானே சரியான நேரத்துக்குப் பசி எடுக்கும். நேரத்துப் பசி எடுத்து சாப்பிட்டால்தானே நம் மனம் கட்டுக்குள் அடங்கும். மனிதன் மனிதாக வாழ உதவும் அத்தனை குணங்களும் படிப்படியாக நமக்குள் குடிபுகும்.

இளைஞர்கள் என்றில்லை பெரும்பாலும் எல்லா வயதினருமே எரிச்சல், படபடப்பு, சிடுசிடுப்பு, பொறாமை, ஏளனம் இப்படி ஏராளமான எதிர்மறை குணங்களுடன்தான் வளைய வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் எந்த ஒரு விஷயத்திலும் ஒழுங்கின்மை. எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்ற சுதந்திர மனப்பாங்கு மனிதர்களை திசை திருப்புகிறதோ என தோன்ற வைக்கிறது.

இரவு 3 மணி வரை விழித்திருக்கிறார்கள். வேலை நிமித்தமாக சிலர். ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யு-டியூப், கிளப் ஹவுஸ் என சமூகவலைதளங்களில் பலர். நேரம் கெட்ட நேரத்தில் தூங்கினால் பகலில் 11 மணிக்குத்தான் எழுந்துகொள்கிறார்கள். பலர் பல் கூட தேய்ப்பதில்லை. குளிக்கும்போது தேய்த்துக்கொள்ளலாம் என வாய் கொப்பளித்து அப்படியே டிபனும் காபியும் 12 மணிக்கு சாப்பிடுகிறார்கள். பிறகு மதிய சாப்பாட்டு நேரம் தள்ளிக்கொண்டே போய் மாலை 4 மணிக்கு சாப்பிடுகிறார்கள். இதன் தாக்கம் இரவு உணவு 11 மணிக்கு தள்ளிக்கொண்டே போகிறது. இடையில் நொறுக்குத்தீனி வேறு. சில நாட்கள் குளியல் கூட இல்லை பலருக்கு. உட்கார்ந்த இடத்தில் லேப்டாப், மொபைல், எதிரே ஸ்மார்ட் டிவி. வாழ்க்கையை இதன் மூன்றுடன் முடித்துக்கொள்கிறார்கள்.

எப்போது தூக்கம் சீர்கெட ஆரம்பித்ததோ அப்போதே அதன் தொடர்பாய் பல சீர்கேடுகள் ஒன்றன்பின் ஒன்றாய் நம்மை தஞ்சம் அடைய ஆரம்பித்தன.

யாருடனாவது மனஸ்தாபம் கோபத்தைக் காட்ட வேண்டும் என்றால் கடிதம் எழுதி அதை போஸ்ட் செய்து அது சரியான நேரத்துக்கு அனுப்பப்பட்டவருக்குச் சென்றடைந்து அதை அவரும் சரியான நேரத்துக்குப் பார்த்து… இப்படி படிப்படியாக ஒரு தகவலைக் கடத்துவதற்கு சில நாட்களை எடுத்துக்கொள்ளும் காலங்களில் நம் உணர்வுகள் நம் கட்டுக்குள் அடங்கி இருந்தன. ஆனால் இப்போது  ஒரே ஒரு வாட்ஸ் அப் தகவலில், ஒரு நீல கலர் டிக் மார்க்கில் அத்தனையும் அடங்கிவிடுகிறது.  ‘தகவலைப் பார்த்திருக்கிறாய், ஆனால் பதில் அளிக்கவில்லை. அலட்சியப்படுத்துகிறாய்’ என்பதில் இருந்து ஆரம்பித்து வாக்குவாதம் முற்றி தற்கொலை வரை நீள்கிறது. இவ்வளவுதான் நம் மனம். எத்தனைக்கு எத்தனை வசதிகள் வருகிறதோ அத்தனைக்கு அத்தனை நம் உணர்வுகளை நம் கட்டுக்குள் வைக்கும் சக்தியை இழக்கிறோம்.

‘ஆறப்போடு, எல்லாம் சரியாகும்!’ என நம் பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இப்போதெல்லாம் யாருக்கும் எதையும் ஆறப்போட விருப்பமும் இல்லை. சூழலும் இல்லை.

உடனுக்குடன் எதையும் முடித்துவிடத் துடிக்கிறார்கள். தூக்கி எறியவும் தயங்கவும் இல்லை. நடந்து முடிந்த ஒரு விஷயத்துக்கும் அடுத்து என்ன என யோசிக்கும் காலகட்டத்துக்கும் கூட இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும் மனம் போன போக்கில் சட்டென முடிவெடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் சந்தோஷமாக இருக்கிறார்களா என்றால் அதற்கும் இல்லை என்ற பதிலே பெரும்பாலும் கிடைக்கிறது.

சரி எப்படித்தான் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வருவது?

மிக எளிமையான ஒரு வழி உள்ளது.

ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒழுங்கை நேர்த்தியையும் நேரம் தவறாமையையும் கொண்டு வந்தால் அது நம் எல்லா செய்கைகளையும் நேர்வழிப்படுத்தும்.

காலை ஆறு மணிக்கு வாக்கிங் செல்ல வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கையை விருப்பத்தை ஏற்படுத்திக்கொண்டால் நாம் 5.50 மணிக்காவது எழுந்திருப்போம். அப்படி எழுந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு ஏற்றாற்போல் நேரத்துக்கு தூங்கச் செல்வோம். நேரத்துக்கு தூங்க வேண்டுமானால் அதற்கேற்றாற்போல நம் பணிகள் பலவற்றை நேரத்துக்குள் முடிப்போம். இப்படியாக வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விஷயத்தை சரியான நேரத்துக்கு செய்ய வேண்டும் என்ற ஒழுங்கை உண்டாக்கிக் கொண்டால் அது நம்மை பல கோணங்களில் செதுக்கி செம்மைப்படுத்தும் என்பது உறுதி.

உங்கள் குழந்தைகளிடமும் இதே பழக்கத்தை சிறு வயதில் இருந்தே விதைக்க ஆரம்பியுங்கள். பல் தேய்த்தால் தான் பால், பால் குடித்தால்தான் கொஞ்ச நேரம் கேம்ஸ், கொஞ்ச நேரம் கேம்ஸ் விளையாட வேண்டுமானால் இத்தனை மணி நேரத்துக்கு குளித்து, சாப்பிட்டிருக்க வேண்டும் என ஒரு விஷயத்தை மற்ற விஷயங்களுடன் தொடர்புபடுத்தி வரைமுறைப்படுத்தினால் அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் நேர்த்தி உண்டாகும். எதிர்காலத்தில் நேர மேலாண்மைக்கு வகுப்புகளுக்கெல்லாம் செல்ல மாட்டார்கள். அவர்களே நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கை வகுப்புகள் எல்லாம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அண்மையில் தொழில்நுட்பத்தில் புதிதாக முளைத்திருக்கும் கிளப் ஹவுஸில் நேரம் காலம் இல்லாமல் அதிலேயே மூழ்கிக் கிடக்க நம் மக்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது? எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். நாமும் பயன்படுத்துவோம், பயன்படுத்தாவிட்டால் நாம் தொழில்நுட்பத்தில் இருந்து பின் தங்கிவிடுவோமோ, நம்மை பழைய பஞ்சாங்கமாக்கி விடுவார்களோ என்ற பயம்தானே புதிதாய் முளைக்கும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வைக்கிறது. உச்சகட்டமாய் அதற்கே அடிமையாகிக்கிடக்கவும் வைக்கிறது.

யாரோ ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்துக்கே இத்தனை சக்தி என்றால் காலம் காலமாய் நம் முன்னோர்கள் சொல்லித் தந்திருக்கும் விஷயங்களையும் கொஞ்சம் புரிந்துகொள்ளலாமே.

நேரத்துக்குத் தூக்கம், சத்தான சாப்பாடு, தேவையான அளவு தண்ணீர் அருந்துதல், குறிப்பிட்ட நேரம் உடல்பயிற்சி என இந்த நான்கையும் கொஞ்சம் கவனமெடுத்து செயல்படுத்திப்பாருங்கள். உங்கள் மனதில் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 603 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon