பதிவு எண்: 906 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 175
ஜூன் 24, 2021
உயரம் செல்லச் செல்ல தனிமை தவிர்க்க முடியாது!
நமக்குப் பிடிக்காத எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து சென்றால் அதைவிட ஆகச் சிறந்த எதிர்வினை எதுவாகவும் இருக்க முடியாது.
இருவர். அதில் முதலாமானவர் புத்திசாலி. இரண்டாமானவரும் புத்திசாலிதான். ஆனால் அவருக்கு முதலாமானவர் புத்திசாலியாக இருப்பதை பொறுக்க முடியவில்லை. எனவே அவர் செய்கின்ற செயல்கள் எதுவாக இருந்தாலும் அது குறித்து சீண்டிக்கொண்டே இருப்பார். நக்கல், ஏளனம், எகத்தாளம் இப்படி பல ரூபங்களில் அவருடைய செயல்பாடுகள் அமையப்பெறும். பார்ப்பவர்களுக்கே கோபம் கோபமாக வரும். ஆனால் எதிர்வினையாற்ற வேண்டிய நபரோ எதையுமே கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டே இருப்பார். கொஞ்சமும் தன் வெறுப்பை முகத்திலோ அல்லது வார்த்தையிலோ அல்லது உடல் மொழியிலோ காண்பித்துக்கொள்ளவே மாட்டார்.
இதுதான் சீண்டும் நபருக்கு எரிச்சலை அதிகமாக்கிக்கொண்டே வந்தது. மென்மேலும் தொடர்ச்சியாக அவருக்கு பலவிதங்களில் தொந்திரவு கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் எதிராளி அசைந்துகொடுக்கவே இல்லை. தன் வேலையிலேயே கவனமாக இருந்தார். தான் உண்டு தன் வேலை உண்டு என தனக்கான பாதையில் சென்றுகொண்டே இருந்தார். நாளுக்கு நாள் அவர் வாழ்க்கையில் வளர்ச்சி கூடிக்கொண்டே போனது.
சீண்டிக்கொண்டே இருந்த நபர் தன் வளர்ச்சியைவிட எதிராளியை சீண்டுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தியதால் எப்படி பிறரை நன்றாக மட்டப்படுத்தலாம், அவமானப்படுத்தலாம் என்ற ஆராய்ச்சியில் பி.எச்டி பட்டம் பெறாத குறையாக ஆழ்ந்த ஞானம் பெற்றார். அதனால் அவரது உடல் நலனும், மன நலனும் பாதிக்கப்பட ஆரம்பித்தது. பொருளாதார வளர்ச்சியும் குறைந்தது. தீய பழக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவரிடம் குடிபுக ஆரம்பித்தது.
ஒரு நாள் அவர் அழாத குறையாக ‘நான் பேசும் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றி கோபத்தால் இரண்டு அடிகொடுத்திருந்தால் கூட என் ஆத்திரம் அடங்கி இருக்கும். போனால் போகிறதென்று விட்டு விடுவேன். ஆனால் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அமைதியாக கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என் ஆத்திரத்தை அதிகப்படுத்துகிறது…’ என குடிபோதையில் ‘உண்மையை’ உளறினார்.
ஆம். ஒருவரை அடியோடு வீழ்த்த ஆகச் சிறந்த ஆயுதம் என்ன தெரியுமா? எந்த எதிர்வினையையும் காட்டாமல் புறம் தள்ளிவிட்டு ஒதுங்குவது அல்லது கடந்து சென்றுகொண்டே இருப்பது.
ஆனால் அப்படி ஒதுங்குவது பொதுவெளியில் ‘பயந்தாங்கொள்ளி’ என வெளித்தோற்றத்தில் தோன்றினாலும் ஒதுக்கப்படுபவருக்கு மட்டுமே அது எத்தனை கூரிய ஆயுதம் என தெரியும்.
மணிக்கணக்கில் ஆயிரம் வார்த்தைகளால் பேசி எதிர்வினை ஆற்றுவதைவிட நொடிப் பொழுதையும் வீணாக்காமல் அமைதியாகக் கடந்து சென்றுவிடுவது உத்தமம்.
இப்போது சமூக வலைதளங்களில் இந்த லாஜிக்கைத்தான் பின்பற்ற வேண்டியதாக உள்ளது. புரிய வைப்பதற்காகவும், நல்லதொரு தொடர்பில் இருக்கவும் பேச ஆரம்பிப்பது நேர விரயம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிறது. ஏனெனில் இங்கு பெரும்பாலும் யாரும் யாருடைய கருத்துக்கும் செவிசாய்ப்பதில்லை. தான் நினைப்பதை கொட்டுவதற்கு ஒரு இடமாகவே சமூக வலைதளங்களைப் பார்க்கிறார்கள். தன்னைப் போல இருப்பவர்களுடன் கூட்டாக சேர்ந்துகொள்கிறார்கள்.
நியாயம், அநியாயம், நீதி, நேர்மை இதற்கெல்லாம் இங்கு இடம் இல்லை.
நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்புகள் குறைவாக இருந்த காலகட்டங்களில் மற்றவர்களுடன் சுமூகமான உறவுமுறையை வளர்த்துக்கொள்ள கொஞ்சமாவது பிறர் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் மனோபாவம் இருந்தது. ஏன் என்றால் கூட்டாக சேர்ந்துகொள்ள ஆட்கள் குறைவு. சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எதிர்த்துக்கொண்டால் வாழ்வது எப்படி என்கின்ற பயம் இருந்தது.
ஆனால் இன்று சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் தொடர்பில் இருப்பவர்களால் தான் எதற்காகவும் மாற வேண்டியதே இல்லை, தான் செய்வது (மட்டுமே) சரி என்ற மனோபாவம் பெருகி வருகிறது. தன் கருத்துக்களுக்கு ‘ஆமாம் சாமி’ போட ஆயிரக்கணக்கில் இருப்பவர்களால், ‘வெர்ச்சுவல்’ உலகம் கொடுக்கும் ‘வெர்ச்சுவல்’ தைரியம், தான் கொண்ட கருத்துக்களை அவை எப்படிப்பட்ட மோசமான உள்ளர்த்தங்களைக் கொண்டதாக இருந்தாலும், அதை அப்படியே நினைத்த நேரத்தில், நினைத்தபடி உமிழ வைக்கும் முரட்டுத்தனத்தைக் கொடுக்கிறதோ என எண்ண வைக்கிறது.
அவர்கள் தங்கள் கருத்துக்களை உமிழ்ந்துவிட்டுச் சென்றால்கூட பரவாயில்லை, மற்றவர்கள் கருத்துக்களையும் கேவலமாக சித்தரித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசுவதுதான் கருத்துச் சுதந்திரம் கொடுத்துள்ள கொடுமையின் உச்சகட்டம்.
அவர்களுக்கு என்னதான் எடுத்துச் சொன்னாலும், புரியும்படி பேசினாலும் பலன் இல்லை. தனி ஆளாக நின்றால் அவர்கள் செய்வது அவர்களுக்கே தவறு என தெரியும், அடுத்தவர் எடுத்துச் சொன்னாலும் புரியும். ஆனால் அவர்கள் தொடர்பில் உள்ள அவர்கள் கருத்துக்களை ஒத்த ஆயிரம் ஆயிரம் நபர்கள் இருப்பது அவர்கள் தவறுகளை அவர்கள் உணர வைப்பதற்கு கொஞ்சமும் வழிகொடுப்பதில்லை. மென்மேலும் அவர்கள் செய்துகொண்டிருப்பதையே செய்கொண்டிருக்கும் துர்பாக்கிய நிலையே இன்று.
அவர்களுடன் பேசி, புரிய வைப்பது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருப்பதால் கொஞ்சமும் எதிர்வினை ஆற்றாமல் கடந்து சென்று கொண்டே இருந்தால் நம் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் நல்லது.
இப்படிச் செய்வதால் நம்முடன் தொடர்பில் இருப்பவர்களின் எண்ணிக்கைக் குறையலாம். அது குறித்து நாம் வருத்தப்படத் தேவையில்லை. காரணம் எந்த அளவுக்கு நாம் உயரத்தை அடைகிறோமோ அத்தனைக்கு அத்தனை தனிமையை அனுபவிக்க வேண்டியிருக்கும். காரணம் எல்லோராலும் அந்த உச்சிக்கு நம்முடன் பயணிப்பது சாத்தியமில்லைதானே. பலர் பயணத்தில் ஆரம்பத்திலேயே விலகி விடுவார்கள். இன்னும் சிலர் கொஞ்ச தூரம்வரை தாக்குப்பிடிப்பார்கள். அரிதாக ஒரு சிலரே நீங்கள் உச்சிக்குச் செல்லும் வரை உடன் பயணிப்பார்கள். இதுதான் இயற்கையின் நியதி. ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP