பதிவு எண்: 920 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 189
ஜூலை 8, 2021
செட்டில்மெண்ட்டுக்கும், அச்சீவ்மெண்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?
என்னைப் பொருத்தவரை இரண்டுக்குமே ஆயுள் நிரந்தரமில்லை. இரண்டுமே நாம் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருந்து கவனமாக வாழும்வரைதான் அதன் வாழ்வு. சில நேரங்களில் நாம் எத்தனைதான் கவனமாக இருந்தாலும் சூழல் காரணமாக இரண்டின் வாழ்வும் அல்பாயுசாக அமைந்துவிடுவதுண்டு.
இதனால்தான் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த திருமணங்கள் தோல்வியில் முடிவதும், கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த சாதனையாளர்கள் சிறு தோல்வியைக் கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் நம் கண் முன்னே அவ்வப்பொழுது அரங்கேறி வருகின்றன.
திருமணம் செய்துகொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகாதவர்கள் என்று ஒரு விவாதம்.
அப்போது நான் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் டாக்டர் சாந்தா அவர்கள் குறித்தும், டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் குறித்தும் உதாரணங்களைக் காட்டினேன்.
‘டாக்டர் சாந்தா அவர்களினால் எத்தனை பேருடைய குடும்பங்கள் நோயில் இருந்து மீண்டுவாழ்ந்து கொண்டிருக்கின்றன… அவர் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லையா… அவரால் எத்தனை பேருடைய வாழ்க்கை செட்டில் ஆகியிருக்கிறது…’
‘அதெல்லாம் செட்டில்மெண்ட் இல்லை… அது அச்சீவ்மெண்ட்’
‘அச்சீவ்மெண்ட்டும் ஒருவகையில் செட்டில்மெண்ட்தான்…’
‘அச்சீவ்மெண்ட் வேறு, செட்டில்மெண்ட் வேறு…’
‘ஓ… அப்படியா, அப்படியானால் நல்ல வேலை, திருமணம், குடும்பம், குழந்தைகள் என வழக்கமான வாழ்க்கையில் ஒன்றியவர்கள் உங்கள் பார்வையில் செட்டில் ஆனவர்கள் என்றால் திருமணம் ஆன பிறகும் திருட்டுத்தனமாக ஃபேஸ்புக்கிலும் இன்னபிற சமூக வலைதளங்களிலும் பிற பெண்களை ஏமாற்றி நயவஞ்சகத்துடன் வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை செட்டில்மெண்ட்டா அல்லது மாபெரும் அச்சீவ்மெண்ட்டா?’
‘எல்லோரும் அதுபோல இருப்பதில்லையே… விதிவிலக்குகள் உண்டல்லவா. அந்த பிரிவில் அவர்கள் வருவார்கள்…’
‘அப்படி வாருங்கள் வழிக்கு. இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு… அதுபோல தான் செட்டில்மெண்ட்டும் அச்சீவ்மெண்ட்டும்…’
இப்படியாக அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
இப்படித்தான் இங்கே வாழ்க்கையும் சாதனையும் தனித்தனியாக பார்க்கப்படுவதால்தான் கருத்துச் செறிவுடன் எழுதுபவர்கள், முற்போக்கு சிந்தனையுடன் மேடையில் பேசுபவர்கள், ஆகசிறந்த கவிஞர்கள், சமூக சேவகர்கள் என பலருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் முகம் ஒன்றாகவும், பொதுவெளியில் அவர்கள் முகம் வேறொன்றாகவும் உள்ளது. முரண்கள் அதிகமாகின்றது.
எத்தனைக்கு எத்தனை வாழ்க்கைக்கும் சாதனைக்குமான இடைவெளி குறைகிறதோ அத்தனைக்கு அத்தனை அதில் நேர்மை இருக்கும். இரண்டுக்குமான இடைவெளி அதிகமாக அதிகமாக முரண்கள் அதிகரிக்கும். நம்பிக்கைத்தன்மை குறையும். நேர்மை அடிமட்டத்துக்கும் வந்துவிடும்.
அதென்ன வாழ்க்கைக்கும் சாதனைக்குமான இடைவெளி?
வாழ்க்கை என்பது திருமணம் சம்மந்தப்பட்டது ‘மட்டும்’ அல்ல. திருமணம் என்பது அதில் ஓர் அங்கமே.
அதுபோல சாதனை என்பதும் திருமணம் ஆகாதவர்கள் ‘மட்டும்’ செய்யும் அரிய பெரிய செயல் அல்ல. வாழ்க்கையின் ஓர் அங்கமே சாதனை. அது அவரவர்கள் திறமை, உழைப்பு, வாய்ப்பு, ஆர்வம், சூழல் இவை சார்ந்தவை.
எண்ணம், சொல், செயல் என இவை மூன்றும் ஒன்றாக இருக்கும் நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுவெளியில் அவர்களுக்கான முகமும் பெரும்பாலும் வெவ்வேறாக இருப்பதில்லை. ஒன்றுபோல் இருக்கும். அப்படிப்பட்டவர்களை நமக்கு மிகவும் பிடித்துப் போகும். ‘ஆஹா எவ்வளவு நல்லவர்’ என வியந்து பாராட்டுவோம். நம் தேவைகளுக்கு அவர்களை அணுகுவோம். ஆனால் எத்தனைபேரால் அவரைப் போல நல்லவராக இருக்க முடிகிறது அல்லது அதற்கு முயற்சிக்கவாவது முடிகிறது? என்பதுதான் பெரிய கேள்விக்குறி. காரணம் இங்கே யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.
இதை சற்று நுணுக்கமாக புரிந்துகொள்ள வேண்டும். யாராலுமே வீட்டில் மனைவி / கணவனிடம், மகன் / மகளிடம் பேசுவதைப்போல பழகுவதைப் போல பொதுவெளியில் பேச முடியாது. பழக முடியாது.
தனிநபர்களின் நேர்மை சார்ந்த குணாதிசயங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவெளியிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே நான் வலியுறுத்தும் எண்ணம், சொல், செயல் இதன் மூன்றுக்கும் பின்னால் உள்ள உளவியல். ‘படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்பதைப்போல சொல்லாலும் செயலாலும் முரண்பட்டு வாழக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறேன்.
‘செட்டில்மெண்ட், அச்சீவ்மெண்ட்’ இரண்டும் வெவ்வேறு கிடையாது. இரண்டுமே ஒன்றுதான். நான் இந்தப் பதிவில் சொன்னதை ஆழமாகப் படித்துப் பார்ப்பவர்களுக்கு இரண்டும் ஒன்றே என்ற உண்மை புரியும். புரியவில்லை என்றால் பதிவை மீண்டும் மீண்டும் பொறுமையாகப் படியுங்கள். புரியும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP