பதிவு எண்: 955 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 224
ஆகஸ்ட் 12, 2021 | காலை: 6 மணி
உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறது என உங்களுக்கு சரியாகத் தெரியுமா?
‘பிறர் அறிவுரையை கேளுங்கள். உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறதோ அதை செய்யுங்கள்’ என்று பொதுவாக சொல்வார்கள்.
ஒரு உண்மை தெரியுமா?
நம்மில் பெரும்பாலானோருக்கு ‘நம் மனதுக்கு எது சரி எனப்படுகிறது?’ என்பதே தெரியாது என்பதுதான் உண்மை. நம்மைச் சுற்றி இயங்கும் இந்த சமுதாயம் என்ன சொல்கிறதோ அதன் தாக்கம் நிறைய இருக்கும் பலருக்கு. சமுதாயத்தின் கருத்து எதுவோ ‘அதுவே சரி’ என்று நினைப்பர்.
ஒரு சிலர் மதில் மேல் பூனை. தங்களுக்கு எது சரி என தெரிந்தாலும், இந்த சமுதாயம் என்ன சொல்லுமோ என நினைத்து அது எப்படி சரி தவறுகளைக் கட்டமைத்து வைத்திருக்கிறதோ அதை செய்வார்கள்.
ஒருசிலர் ‘நான் ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட்பா, என் மனதுக்கு எது சரியோ அதையே சரி என்பேன். அதன்படி மட்டுமே நடப்பேன்’ என பிறருக்கு எந்த தீங்கு வந்தாலும் அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் தங்களுக்குப் பிடித்ததை செய்து சென்றுகொண்டே இருப்பர்.
இவர்களுள் பரிதாபத்துக்குரியவர்கள் முதல் பிரிவினரே. தங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறது என்பதே தெரியாமல் தவிக்கும் வகையினர்.
அதனால் ‘பிறர் அறிவுரையை கேளுங்கள். உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறதோ அதை செய்யுங்கள்’ என்ற அறிவுரை எல்லோருக்கும் பொருந்துவதில்லை. பொருத்திக்கொள்ளவும் தேவையில்லை.
நம்மால் எப்போது நம் மனதுக்கு எது சரி எனப்படுகிறது என்பதில் முடிவெடுப்பதில் குழப்பமோ, அப்போது நம் நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்கள் அல்லது உறவினர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்துகொள்வதில் தவறே இல்லை.
குறிப்பாக குழந்தைகளுக்கு ‘உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யுங்கள்’ என்ற விதியைப் பொருத்திப் பார்க்கவே முடியாது. குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர விட வேண்டும், அவர்களிடம் நம் கனவுகளை திணிக்கக் கூடாது, அவர்கள் மனநலன் பாதிக்கப்படும் அப்படி இப்படி என ஏராளமான அறிவுரைகள் குழந்தைகள் நலன் சார்ந்து பெற்றோருக்கு.
சில குழந்தைகளுக்கு இயல்பாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தும் திறன் இருக்கும். சில சிறுவர்களுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லி வழிகாட்டினால்தான் தங்கள் திறமை என்ன என்றே தெரிந்து கொள்வார்கள். பொத்தாம் பொதுவாக எல்லா குழந்தைகளையும் அவர்கள் போக்கில் வளர விடுவது என்பது சாத்தியம் கிடையாது.
காரணம் அப்படியே அவர்கள் போக்கில் விட்டால் ஏதேனும் ஒரு பழக்கத்துக்கு ‘அடிக்ட்’ஆகி விடுவதும் உண்டு. உதாரணத்துக்கு யு-டியூப் பார்த்துக்கொண்டே இருப்பது, ஆன்லைன் கேம்ஸ், கார்ட்டூன் சேனல் என எதை தொடர்ச்சியாக செய்கிறார்களோ அதை அப்படியே தொடர்ச்சியாக செய்து அதற்கு முழுமையாக அடிமையாகிவிடுவதும் உண்டு.
அதுபோன்ற குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது கண்காணித்து அவர்கள் திறமைகளை முதலில் பெற்றோர் இனம் கண்டுகொண்டு பின் அதை தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தெடுத்து அவர்களை வடிவமைக்க வேண்டும்.
எதையும் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் போக்கில் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த சூழலை ஏற்படுத்தித் தருவதில் தவறே இல்லை.
அப்படி செய்யாமல் அவரவர்கள் இஷ்டத்துக்கு விடப்பட்டு சுதந்திரமாக வளர்ந்த குழந்தைகள் பின்னாளில் ‘என்னை நீ ஏன் சரியாக வளர்க்கவில்லை’ என்றோ, ‘எனக்கு நீ சரியாக வழிகாட்டவில்லை என்றோ’, ‘எனக்கு அன்றே எடுத்துச் சொல்லி இருந்தால் நான் மாறி இருப்பேன் அல்லவா என்றோ’ உங்களையே கேள்வி கேட்கும் சூழல் உண்டாகும்.
தன் அப்பா அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என மனதுக்குள் வருத்தப்பட்டு நினைக்கும் குழந்தைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்ததும் தன் பெற்றோரை நினைத்து பெருமிதம்தான் கொள்வார்கள்.
ஆனால், சுதந்திரமாக வளர்ப்பதாக நினைத்து அவர்கள் அறைக்குள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் நட்ட நடு இரவு வரை லேப்டாப்பில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தால் கூட ‘என் பிள்ளை என்னமா கஷ்டப்பட்டுப் படிக்கிறான் பாவம்’ என்ற பரிதாபத்துடன் டீயோ, போர்ன்விட்டாவோ கலந்து கொடுக்கும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகளின் ஆள் காட்டி விரல் பின்னாளில் பெற்றோரை நோக்கி ’எனக்கு ஏன் அப்போதே என் தவறுகளை எடுத்துச் சொல்லவில்லை?’ என கேள்வி கேட்டு நீளும் என்பதை மறக்கவே வேண்டாம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எல்லோருக்குமே எல்லா நேரங்களிலும் ‘தன் மனதுக்கு எது சரி எனப்படுகிறது?’ என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘எல்லோருக்கும்’ என்பதில் குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம், வளர்ந்த குழந்தைகளாகிய பெரியோர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அவ்வளவு ஏன் அந்த ‘எல்லோருக்குள்ளும்’ நீங்களும் நானும் சேர்த்திதான். ‘எல்லா நேரங்களிலும்’ என்பதும் உங்களுக்கும் எனக்கும் பொருந்தும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP