ஜம்முனு வாழ காம்கேரின் OTP-240: காலங்கள் மாறினாலும் பாசங்கள் மாறுவதில்லையே!

பதிவு எண்: 971 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 240
ஆகஸ்ட் 28, 2021 | காலை: 6 மணி

காலங்கள் மாறினாலும் பாசங்கள் மாறுவதில்லையே!

இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும்.

என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது.

பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக ஓடினாள் என் காருக்கு முன் நின்றுகொண்டிருந்த நிறுவன பஸ்ஸை நோக்கி… ‘வரேம்பா…’ என்ற வார்த்தையை காற்றில் பறக்க விட்டபடி.

பைக்கை ஓட்டி வந்தவரை அப்போதுதான் கவனித்தேன். வயதான தோற்றம். மெலிந்த தேகம். வெள்ளை முடி. முழுக்கை சட்டை, வேட்டி அணிந்திருந்தார்.

மகள் பஸ்ஸுக்குள் ஏறிவிட்டாளா என்ற கவலையில் பைக்கை மெல்ல மெல்ல பின்னோக்கி நகர்த்தியபடி, தலையை எட்டி எட்டி முன்னோக்கிப் பார்த்தபடி…. எனக்கோ என் கார் மீது இடித்து விடுவாரோ என்ற பயம்… ஆனாலும் அந்தக் காட்சியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

சிக்னல் கிடைக்க அந்த நிறுவன பஸ் கிளம்பியது… அப்பா பஸ் வேகம் எடுக்கும் வரை தன் பைக்கை மெதுவாக ஓட்டினார். மீண்டும் திரும்பி மகள் ஏற முடியாமல் கீழேயே நின்று கொண்டிருக்கிறாளா என சாலையை வேறு பார்த்து உறுதி செய்துகொண்டார்.

நான் நேராக காரை ஓட்ட, அவர் யு-ட்ரன் செய்து விட்டார்.

குறிப்பிட்ட நேரத்துக்கு வரும் நிறுவன பஸ்ஸை அந்த ஸ்டாப்பில் தவற விட்டதால் அப்பா அவசர கதியில் மகளை பஸ்ஸைத் துரத்தி வந்து ஏற்றிவிட்டுச் சென்ற அந்தக் காட்சி ‘கவிதை’!

இது இன்றைய பொழுதை இனிமையாக்கியது.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் ஒருவர் எந்தப் பணியில் இருந்தாலும் அவர் அதில் ஜெயிக்க அவர் மட்டுமே காரணமில்லை. இதுபோல எத்தனை ஆண் தேவைதைகளும், பெண் காவல் தெய்வங்களும் வீட்டில் முட்டுக்கொடுக்க வேண்டி உள்ளது.

பட்டம், பதவி, பணி, பணம் இவற்றுக்கு நேரம் ஒதுக்கும் அதே சமயம் குடும்பத்தையும் நேசிப்போம். நேரம் ஒதுக்குவோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,094 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon