பதிவு எண்: 970 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 239
ஆகஸ்ட் 27, 2021 | காலை: 6 மணி
என் வாழ்க்கையே என் அறிவுரை – மகாத்மா காந்தியடிகள்!
இந்த கருத்துக்களின்படி இன்னும் இருவர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறை நிஜ உலகில் மட்டுமில்லாமல் வெர்ச்சுவல் உலகிலும் எனக்கு உதவுகின்றன. யார் அந்த இருவர்? கடைசி வரை படியுங்கள்!
உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திப் பாருங்களேன்.
கேட்காமல் யாருக்கும் அறிவுரை சொல்லாதே, வேண்டி விரும்பி கேட்டாலும் ஒரு எல்லைக்கு மேல் அறிவுரை வேண்டாம். அறிவுரை எல்லாம் கேட்டு வாங்கும் சமாச்சரமும் இல்லை, கொடுத்து பரவசம் அடையும் விஷயமும் இல்லை. நம் வாழ்க்கையே அறிவுரையாக இருக்கும் அளவுக்கு சிறப்பாக வாழ வேண்டும்.
காயப்படுத்தியவரைக் கூட புண்படுத்தும் வார்த்தைகளால் பேச வேண்டாம். அப்படி பேசியே ஆக வேண்டிய மன அழுத்தம் உண்டானால் அமைதியாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடவும். சத்தமாய் பேசுவதைவிட, பேரமைதியாய் நகர்வது கடுமையான வலியை எதிராளிக்கு கொடுக்கும். அதுவே ஆகச் சிறந்த தண்டனையாக இருக்கும்.
தனிநபர் வெறுப்பை பொதுவெளியில் கொட்டித் தீர்க்காதே. ஒன்று திருத்த வேண்டும் அல்லது விலக வேண்டும் அல்லது விலக்க வேண்டும். மொத்தத்தில் வாழ வேண்டும். அடித்துக்கொண்டு சாவதற்கா பிறந்திருக்கிறோம். எனவே, பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக்கொள்வதுதான் சிறந்த வழி. அதைவிட்டு பொதுவெளியில் கொட்டித்தீர்ப்பது குழாயடி சண்டைக்கு ஒப்பான செயலாகும். பலன் பூஜ்ஜியமே.
அறிந்தவர் தெரிந்தவரே என்றாலும் பொதுவெளியில் அந்த நெருக்கத்தை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம். அது சம்மந்தப்பட்டவர்களுக்கு ஊறு விளைவிக்க வாய்ப்புண்டு. ஏனெனில் இங்கு குல்லா விற்பவன் தலையில் மாட்டியிருக்கும் தொப்பியை கழற்றி வீசினால் குரங்கள் தங்கள் தலையில் மாட்டி இருக்கும் தொப்பியை வீசி எறியும் மனோபாவமுள்ளவர்களே அதிகம்.
‘செய்யுங்கள்’, ‘பழகுங்கள்’, ‘நடந்துகொள்ளுங்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு பதிலாக ‘செய்வோம்’, ‘பழகுவோம்’, ‘நடந்துகொள்வோம்’ என்ற பிரயோகங்களைப் பயன்படுத்தவும்.
உதவி கேட்டு வந்தவருக்கு முடியும் முடியாது என்ற பதிலை காலத்தில் சொல்லி அனுப்ப வேண்டும். ‘முடியாது’ என்று சொல்வது அப்படி ஒன்றும் தவறான செயல்பாடு கிடையாது. காக்க வைத்து ஏமாற்றுவதைவிட ‘முடியாது’ என்று சொல்லி அனுப்புவது எவ்வளவோ உயர்ந்த அணுகுமுறை. ‘முடியாது’ என்ற நம் பதில் அப்போதைக்கு எதிராளிக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், காக்க வைத்து ஏமாற்றுவது வாழ்நாள் வலியை கொடுக்கும்.
இதெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா? என் பெற்றோர் தங்கள் வாழ்க்கையின் மூலம் எங்களுக்குள் செலுத்திய நல்ல விஷயங்களுள் சில.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP