பதிவு எண்: 968 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 237
ஆகஸ்ட் 25, 2021 | காலை: 6 மணி
அனுபவங்களை பகிரும்போது கவனம்!
அனுபவங்களைப் பகிரும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய அனுபவங்கள் பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் அளவுக்கு அதை பகிர வேண்டும். அதைவிட்டு பயந்து நடுங்கும் அளவுக்கு இருக்கக் கூடாது.
உதாரணத்துக்கு சென்னைக்கு புதிதாக குடியேறியவர்களிடம் ‘நம்ம ஊர்பக்கம்போல் இயல்பாக இருக்க முடியாது. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று சொல்லலாம். அப்படியில்லாமல் ‘சென்னையில் திருட்டு பயம் அதிகம். எல்லோரும் சுயநலம். யாரும் உதவிக்கு வரமாட்டாங்க…’ அப்படி இப்படி என பொத்தாம் பொதுவான அபிர்ப்பிராயங்கள் எதிராளிக்கு பயம் காட்ட மட்டுமே பயன்படும். அது அவர்களுக்கான வழிகாட்டியாக ஒருபோதும் இருக்காது.
சென்னைக்குத் தட்டுத்தடுமாறி தனியாக பயணம் செய்து பஸ் நிலையத்தில் இறங்கிய ஒரு வயதான மூதாட்டி என்ன செய்வது என தவித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு இளைஞன் அந்த பாட்டியைப் பார்க்கிறான். அவனுக்கு தன்னுடைய பாட்டி நினைவுக்கு வருகிறது. காரணம் அவர் ஜாடையில் அந்த பாட்டி இருந்தார்.
உடனே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு பாட்டியை நெருங்கி பேச்சு கொடுக்கிறான்.
ஒரே மகன். விபத்தில் இறந்துவிட்டதால் மருமகளும் பேரப் பிள்ளைகளும் அவரது தாய் வீட்டோடு சென்றுவிட்டதால் தனிமரமாகிப் போனதாகவும், அதே ஊரில் இருந்தால் மகன் நினைவு அதிகம் வருவதால் அங்கு இருக்க பிடிக்காமல் சென்னைக்கு வந்துவிட்டதாகவும் சொல்கிறார்.
சென்னையின் பரபரப்பு பயமாய் அவர் கண்களில். கூடவே தனிமையின் தவிப்பும்.
‘கையில் பணம் இருக்கிறதா?’ என்று கேட்கிறான் அந்த இளைஞன்.
கொஞ்சம் என சொல்லி இடுப்பில் முடிந்திருந்த சுருக்குப் பையை விரித்துக் காண்பித்து வெள்ளந்தியாக ஒரு பார்வை பார்க்கிறார்.
‘சரி சாப்பிட்டீங்களா?’ என கேட்டு அருகில் இருந்த ஓட்டலில் டிபன் காபி வாங்கிக் கொடுக்கிறான். பாட்டி மெதுவாக சாப்பிட்டு தண்ணீர் குடித்து ஆசுவாசமானதும் ‘இப்ப என்ன செய்யறதா உத்தேசம்’ என கேட்கிறான்.
‘இந்த பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி இரண்டு நாளாகிறது. இப்போதான் சாப்பிடறேன் தம்பி. ரொம்ப நன்றி… என்ன செய்யறதுன்னு தெரியலே’ என கரகரக்கும் குரலில் அழுதுவிடுவாரோ என்று எண்ண வைக்கும் தொனியில் பேசினார்.
சென்னையின் இயந்திரத்தன்மை வாழ்க்கை பற்றிய அவநம்பிக்கையை அள்ளிக்கொடுத்திருந்தது அவரது பேச்சில் தெரிந்தது.
‘இந்த இரண்டு நாளில் யார் யார் கிட்டேயோ இங்க எதுனா முதியோர் இல்லம், அனாதை ஆசிரமம் இருக்கான்னு கேட்டேன். யாரும் எனக்கு பதில் கூட சொல்லலை. ஏன் என்னைவிட்டு இரண்டு அடி நகர்ந்து வேகமாக போய்விட்டார்கள்…’ என்று புலம்பினார்.
‘என்ன சென்னை பட்டணமோ… நம்ம ஊர் மக்கள் கிட்ட ஒரு உதவி கேட்டா ஓடி வந்து உதவுவாங்க… இங்கெ ஏன் மக்கள் இப்படி இருக்காங்க…’ என்று ஆதங்கப்பட்டார்.
அந்த இளைஞன் கொஞ்சம் யோசித்த பிறகு ‘சரி பாட்டி எனக்குத் தெரிந்த ஒரு முதியோர் இல்லம் இருக்கு… அங்க சேர்த்து விடட்டுமா?’ என்றான்.
‘உனக்குப் புண்ணியமா போகும் தம்பி….’ என்று கையெடுத்து கும்பிட்டார் பாட்டி, கண்களில் அனிச்சையாக கண்ணீர்.
ஒரு ஆட்டோவில் பாட்டியை ஏற்றி அவன் தன் பைக்கில் வழிகாட்டியபடி சென்றான்.
சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு முதியோர் இல்லம். யாருமே இல்லாத நிராதரவானவர்களுக்கு மட்டுமே அங்கு அனுமதி. அதன் உரிமையாளரிடம் சென்று விவரம் சொல்லி, தன் முகவரி தொலைபேசி அலைபேசி எண்களை விண்ணப்படிவத்தில் எழுதி கொடுத்து முறையாக பாட்டியை அங்கு சேர்த்துவிட்டான். பாட்டியிடம் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு கிளம்ப முற்பட்டபோது அந்த பாட்டி ‘தம்பி’ என அழைத்தார்.
‘என்ன பாட்டி?’ என்ற இளைஞனிடம் ‘உன் சொந்த ஊர் எது தம்பி?’ என்றார்.
அதற்கு அந்த இளைஞன் ஒரு நிமிடம் யோசித்தான்.
பின்னர் ‘எனக்கு பூர்வீகமே சென்னைதான்’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றான்.
உண்மையில் அந்த இளைஞனில் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்துக்கு அருகில் ஒரு சிறு கிராமம். அவன் சென்னைக்கு வேலைக்காக வந்தே இரண்டு வருடங்கள்தான் ஆகி இருந்தன. சென்னை வந்த புதிதில் பாட்டியின் மனநிலையில்தான் அவனும் இருந்தான். ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்று சொல்வார்களே அதுபோல. ஆனால், மெல்ல மெல்ல பணியிடம் அவனுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது. மனிதர்கள் பழக்கமானார்கள். சென்னையும் பிடிபட்டது.
ஆனால், பாட்டியிடம் தனக்கு சென்னைதான் சொந்த ஊர் என சொன்னதற்குக் காரணம் பாட்டி வாழப் போகும் மீதி நாட்களில் நம்பிக்கையோடு சென்னை மனிதர்களுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே.
சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் சுயநலக்காரர்கள் என்ற பிம்பத்துடன் அவர் வாழ ஆரம்பித்தால் அவர் நாட்களைக் கடத்துவது சிரமம் என்பதாலும், சென்னையிலும் நல்ல மனிதர்கள், மனிதாபிமானம் கொண்டவர்கள் வசிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவருக்குள் கடத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினாலும் அவன் பொய் சொன்னான்.
இந்தக் கதை எதற்காக என்றால் நாம் பகிரும் நம் அனுபவங்கள் மற்றவர்களுக்கு தைரியத்தையும், நேர்மறை எண்ணங்களையும் மட்டுமே கொடுக்க வேண்டும். எதிர்மறையான அனுபவங்களையும் எச்சரிகையாக இருப்பதற்கான அறிவுறுத்தலாக எடுத்துச் சொல்லலாமே தவிர ‘ஐயய்யோ, அவ்வளவுதான்’ என்ற தொனியில் இருக்கக் கூடாது. அப்படித்தான் பேச வரும் என்றால் வாய் திறக்காமல் இருப்பதே உத்தமம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP