ஜம்முனு வாழ காம்கேரின் OTP-236: ஒரு தீமை விலகுதல் இரண்டு நன்மை நடப்பதற்கு சமம்!

பதிவு எண்: 967 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 236
ஆகஸ்ட் 24, 2021 | காலை: 6 மணி

ஒரு தீமை விலகுதல் இரண்டு நன்மை நடப்பதற்கு சமம்!

சமீபத்தில் ஆன்லைனில் ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங். அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் இயங்கிவருகின்ற நிறுவனம்.

மீட்டிங்கில் அந்த நிறுவனத்தின் ஒரு பிரிவின் தலைமையில் இருக்கும் பெண்மணியும் இடம் பெற்றார். அவர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரும்கூட. அவருக்கு வயது 60+. கலந்துகொண்ட மற்ற பணியாளர்கள் ஆணும் பெண்ணுமாய் 25 பேர். பெரும்பாலும் அனைவருமே 35+ வயதைக் கடந்தவர்கள்.

அந்த மீட்டிங்கின் சாரம்சத்தைவிட அந்தக் குறிப்பிட்டப் பிரிவின் தலைமைப் பெண்மணி நடந்துகொண்ட விதம் உறுத்தலோ உறுத்தல்.

அவர் பெண்களை அழைக்கும்போது ‘வா, போ, சொல்லு, செய்’ என ஒருமையில் அழைக்கிறார். ஆண்களை ‘சார்… வாங்க, போங்க, சொல்லுங்க’ என மரியாதையை கொஞ்சம் தூக்கலாக கலந்து பேசுகிறார். ஆண் பெண் என இருசாராருமே பெரும்பாலும் ஒத்த வயதினர் என்பதுதான் ஹைலைட்.

இதை ஆரம்பத்திலேயே நான் கண்டுகொண்டுவிட்டேன். நடுநடுவே என்னை குறிப்பிடும்போதும் ‘வா, போ’ என பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கை ஆனேன்.

ஆன்லைனில் இருந்து வெளியே வந்தேன். மீட்டிங் பாதியில் நின்றது. காரணம் எங்கள் காம்கேரில் இருந்து அவர்கள் நிறுவன ஊழியர்களுடன் நடந்த ப்ராஜெக்ட் மீட்டிங் அது. எனவே நான் தான் பிரதானம் அங்கே.

அந்த குறிப்பிட்டப் பிரிவு நிறுவனத் தலைமைக்கு போன் செய்தேன்.

‘நான் தங்களை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் பொதுவெளியில் அழைக்கும்போது மரியாதையுடன் அழைத்தால் மட்டுமே உங்கள் நிறுவனப் பணியாளர்களும் மரியாதை கொடுப்பார்கள்…’ என்பதை தெளிவுபடுத்திய பிறகே ஆன்லைனில் இணைந்தேன்.

இப்படித்தான் செல்லும் இடங்களில் எல்லாம் மாற்றங்களுக்கான விதையை தூவியபடி செல்ல வேண்டி உள்ளது.

எல்லா இடங்களிலும் நாம் தூவும் விதை செழிப்பாக வளரும் என்று சொல்வதற்கில்லை. விதை மக்கிப் போவதும் உண்டு. ஆம். புரிந்துகொள்பவர்கள் நம்முடன் தொடர்ந்து பயணிப்பார்கள். மற்றவர்கள் விலகுகிறார்கள். எது நடந்தாலும் அது நம் நல்லதுக்கே. ஒரு தீமை விலகுவது இரண்டு நன்மை நடப்பதற்கு சமம்.

பொதுவாக எல்லோரும் சொல்வதைப்போல், பிசினஸ் முக்கியம்தான். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை அனுசரித்து நடந்தால் நல்லதுதான்.

ஆனால், ஆரம்பத்திலேயே நமக்கான சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் பின்னாளில் தனிப்பட்ட முறையில் மனரீதியான பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். இல்லை என்றால் அது பெரிய அளவில் பர்சனல் பிரச்சனைகளுக்கு வித்திடலாம். கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 565 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon