பதிவு எண்: 966 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 235
ஆகஸ்ட் 23, 2021 | காலை: 6 மணி
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்!
சமீபத்தில் என் நிறுவன கிளையிண்ட் ஒருவர் ‘மேடம் உங்களால் யாரையும் மிக விரைவாக எடை போட முடிகிறது… உங்களுக்கு கிடைத்துள்ள வரம் அது…’ என்று பாராட்டினார்.
அவர் சொன்ன பிறகுதான் நானும் யோசித்துப் பார்த்தேன். எனக்கும் அவர் சொன்னது சரி என்றே தோன்றியது.
நாம் சந்திக்கும் நபர் அல்லது பழகும் நபர் நல்லவரா கெட்டவரா என விரைவில் கணிக்க விரும்பினால், முதலில் நாம் நம்மை கணிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு நம்மை தெரியாதா? இதென்ன பெரிய விஷயம் என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.
நம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொண்டால், நாம் செய்கின்ற செயல்கள் நல்லவையா கெட்டவையா என உணர்ந்து செயல்பட்டால் நம்மை நாம் கணிக்க முடியும்.
ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால், தாம் செய்கின்ற செயல்கள் நல்லவையா கெட்டவையா என்பதே பலருக்கும் இங்கு தெரிவதில்லை. அதனால் அதற்கேற்றவாறு அவர்கள் மனசாட்சியும் நிறம் மாறுகிறது.
தங்களுக்கு என்ன செளகர்யமோ அதுவே சரி எனப்படுவதால் அதனால் பிறருக்கு பாதகம் ஏற்பட்டாலும் அதை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பதில்லை.
நம்மை நாம் சரியாக உணரத் தெரிந்தால் மற்றவர்களையும் சரியாக கணிக்கும் ஆற்றல் கிடைக்கும். இல்லை என்றால் நம் எண்ண ஓட்டத்துக்கும், பொதுவான அபிர்ப்பிராயங்களுக்கும், பொதுவிதிகளுக்கும் ஏற்பவே மற்றவர்களை கணிக்க முடியும்.
நம்மை உள்நோக்கி பார்க்கக் கற்றுக்கொள்வோம். நம் செளகர்யங்களைவிட, நியாயமான கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம். நமக்கு வசதியாக இருப்பதை தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில் அதனால் மற்றவர்களுக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா என கொஞ்சம் கவனம் எடுத்து சிந்தித்தால் நம்மை உள்நோக்கிப் பார்க்கும் பக்குவம் கிடைக்கும்.
நீங்களும் பிறரை கணிக்க விரும்பினால் உங்களை உள்நோக்கிப் பாருங்கள். உங்களை சரியாக கணிக்கக் கற்றுகொள்ளுங்கள். எதுவும் சாத்தியமாகும்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP