பதிவு எண்: 965 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 234
ஆகஸ்ட் 22, 2021 | காலை: 6 மணி
சுயநலனும் ஒருவகையில் பொதுநலனே!
நம்முடைய சமூகப் பார்வையும் சமுதாய நலனும் சுயநல சிந்தனையில் இருந்துதான் தொடங்குகிறது. எடுத்த எடுப்பிலேயே ‘ஊருக்கு உழை, சமூக சேவை செய்’ என்று சொன்னால் யாராலும் பின்பற்ற முடியாது.
நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் நாம் முழுமையான சுயநலத்துடன் இருந்துவிட்டால் அதுவே பொதுநலனுக்கான பெரிய முன்னெடுப்புகளுக்கு வித்திடும்.
உதாரணத்துக்கு, ‘நம் எதிரியும் நன்றாக வாழ வேண்டும்!’ என்று அறிவுரை சொல்லிப் பாருங்கள். ‘அந்த அளவுக்கு பரோபகாரமும் பெரிய மனசும் நமக்குக் கிடையாதுப்பா’ என்ற பதிலே கிடைக்கும்.
‘நம் எதிரி செளகர்யமாக வாழ்ந்தால் நம்மைப் பற்றிய சிந்தனை வராது. நமக்குத் தொந்திரவு கொடுக்க வேண்டும் என்று சிந்திப்பதற்கான வாய்ப்புகள் குறையும். அவர்கள் பாதையில் அவர்கள், நம் பாதையில் நாம் பயமில்லாமல் பயணிக்கலாம். நம் எதிரியும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது பெருந்தன்மை மட்டுமல்ல, நமக்கான பாதுகாப்புக் கவசமும் கூட’ என்ற கோணத்தில் சொல்லுங்கள். ‘அட, ஆமாம் இல்ல… அதுவும் சரிதான்’ என காதுகொடுத்து கேட்க ஆரம்பிப்பார்கள்.
‘நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும், நல்லதையே பேச வேண்டும்’ என்ற சிந்தனையில் சுயநலமும் இருப்பதை கவனிக்கவும்.
எண்ணம் சொல் செயல்களால் நல்லவற்றை சிந்தித்து நல்லவற்றை மட்டுமே செய்துவந்தால் அது வாழ்க்கையில் எந்த விதத்திலாவது நமக்கு கைகொடுக்கும் என்பது வாழ்க்கை நியதி. நாம் நன்றாக இருக்கவும், நமக்கு நல்லது நடக்கவும் நாம் பிறருக்கு நல்லவற்றை செய்ய வேண்டும் என்பதில் சுயநலனும் இருக்கத்தானே செய்கிறது.
‘மற்றவர்களிடம் கோபப்படாதே, காயப்படுத்தாதே, அழிக்க நினைக்காதே’ என்று சொன்னால் ‘அவர்கள் மட்டும் என்னை காயப்படுத்தலாமா?’ என்ற எதிர்கேள்வியே எழும்பும். அதைவிட்டு ‘கோபப்பட்டால், பிறர் மீது வன்மமாக இருந்தால், பிறரை காயப்படுத்தினால் நம் உடல் நலன் சீரழியும், மனமும் நிம்மதியாக இருக்காது. நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால் யாரிடமும் கோபமாக நடந்துகொள்ள வேண்டாமே’ என்று சொல்லிப் பாருங்கள் அல்லது நீங்களேகூட புரிந்துகொள்ள முயற்சி செய்து பாருங்கள். நம்மால் அந்த அறிவுரையை காதுகொடுத்து கேட்கும் பக்குவம் கிடைக்கும். இந்த அறிவுரையின் பின்னணியில் சுயநலன் தானே இருக்கிறது.
மாறாக ‘சுயநலன் கூடாது, சுயநலம் ஒரு மோசமான குணம்’ அப்படி இப்படி என அறிவுரைகள் சொல்ல ஆரம்பிக்கும்போது சொல்லப்படும் விஷயம் நம் நலனுக்கான விஷயமாக இருந்தாலும் அது எடுபடாமல் போகிறது.
இப்படி எல்லா விஷயங்களையுமே சுயநலத்துடன் சிந்திக்கப் பழகினால் / பழக்கினால் பொதுநலன் தானாகவே உண்டாகிவிடும்.
ஏன் நேற்றுகூட என் பதிவை படித்த வாசக அன்பர் ஒருவர் ‘நீங்கள் தினமும் எழுதும் அதிகாலைப் பதிவுகள் மிகப் பெரிய சேவை’ என்று கருத்திட்டிருந்தார்.
உண்மையில் நான் தினமும் எழுதும் அதிகாலை பதிவுகளில்கூட சுயநலன் இருக்கத்தானே செய்கிறது.
‘என்ன சுயநலமா?’ என வியக்கிறீர்களா…
ஆமாம். தினமும் உங்கள் அனைவரையும் என் எழுத்தின் வாயிலாக சந்திப்பது எனக்கு ஊக்கமாக இருக்கிறது. உற்சாகத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. நான் மிக மிக சந்தோஷமாக உணர்கிறேன். என் சந்தோஷம் உங்களுக்குள்ளும் பரவுகிறது, உங்களையும் உற்சாகப்படுத்துகிறது, ஊக்கப்படுத்துகிறது… இன்னும் என்னவெல்லாமோ செய்து நேர்மறையான மாற்றத்தையும் தாக்கத்தையும் உண்டாக்குகிறது.
என் சுயநலன் பொதுநலனாக மடைமாறுகிறது. அதனால்தான் அவரின் கருத்துக்கு நான் ‘It is my pleasure’ என்று பதில் கொடுத்தேன்.
இப்போது புரிகிறதா, சுயநலமா(னா)க இருப்பது தவறொன்றுமில்லை என்பதன் சூட்சுமம்.
ஆம். சுயநலனும் ஒருவகையில் பொதுநலனே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP