ஜம்முனு வாழ காம்கேரின் OTP-254: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம்!

காம்கேர் புவனேஸ்வரியின் உரை
https://youtu.be/K_oSTrgKG8k

பதிவு எண்: 985 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 254
செப்டம்பர் 11, 2021 | காலை: 6 மணி

செப்டம்பர் 11, 2021: மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம்!

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ பாரதியாரின் இந்தக் கவிதை வரிகளை மனதால் நினைக்கும் போதெல்லாம் மனதுக்குள் நம்மையும் அறியாமல் சொல்லனா தைரியம் வந்தமர்வதை யாராலும் மறுக்க முடியுமா?

மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தை ஒட்டி அவர் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

பாரதி என்பது வெறும் பெயரல்ல, குணம்!

பொதுவாக ‘பாரதி’ என்றதும் நம் எல்லோருக்கும் என்ன நினைவுக்கு வரும்? கவிதைகள், உரைநடைகள், எழுத்து, பத்திரிகை, பெண் விடுதலை, இந்திய விடுதலை, தமிழ் மற்றும் தமிழர் நலன் இவைதான் பெரும்பாலும் நம் நினைவுக்கு வரும்.

ஆனால் என்னைப் பொருத்தவரை பாரதி என்பது மனிதரே அல்ல. அவர் ஒரு நல்ல குணநலன். ஆம். அன்பு, பாசம், நேசம், பரிவு, கருணை, கரிசனம் இவை எல்லாம் எப்படியோ அப்படியே பாரதி என்பதும் ஒரு நற்குணம்.

பாரதி மட்டுமல்ல நமக்காவும், நம் மொழிக்காவும், நம் தேசத்துக்காகவும் பாடுபட்டு மறைந்த அனைவரும் மனிதர்களே அல்ல. அவர்கள் உயர்வான குணநலன்களாக மாற்றமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் நம் ஒவ்வொருக்குள்ளும் வாழும் நல்ல குணநலன்களே பாரதி, காந்தி,  விவேகானந்தர் என ஒப்பீட்டு உருவம் கொள்கிறது.

புதுமையான சிந்தனைகள் பாரதியையும், வீரமும் விவேகமும் விவேகானந்தரையும், அஹிம்சை காந்தியையும் நினைவு கூர்கிறது. அவ்வளவுதான்.

சரஸ்வதி பூஜை அன்றும் நினைவில் வருபவர் பாரதி!

பொதுவாக வேண்டுதல்கள் எதைச் சார்ந்து இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுமே மிக சிறப்பாக அமையப்பெற வேண்டும் என்பதுதானே நம் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும். அவற்றைச் சார்ந்துத்தானே நம் பிராத்தனைகளும் அமையப்பெறும்.

‘குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமே கடவுளே…’ என்று இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் மூலையில் ஒரு ஜீவன் கசியும் கண்களுடன் பிராத்தித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் ‘இந்த ஜீவனின் உடலை கஷ்டப்படுத்தாம எடுத்துக்கொண்டுப் போய்விடு கடவுளே…’ என மற்றொரு ஜீவன் கண்ணீருடன் உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயம் இதுதான். இதுவே இயற்கையின் அற்புதம்.

சரஸ்வதி தேவியை வழிபட்டால் நமக்கு வரப்போகும் துன்பத்துக்கான எச்சரிக்கையை நமக்கு உணர்த்துவதன் மூலம் துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுவாள்.

இந்தக் கருத்தை பாரதியார் ‘தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்’ என்கிறார்.

எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவதைப் போல சரஸ்வதியையும் வணங்கி வழிபட்டுத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும். இதற்கும் பாரதியார் ஒரு பாட்டை பாடியுள்ளார்.

‘செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்…’

மனதிலே தவறான எண்ணங்கள் வராமல் நேர் வழியில் சிந்தித்து வாழ்ந்தால் மட்டுமே நமக்கு நன்மைகள் நடைபெறும். தீய எண்ணங்களை மனதில் இருந்து நீக்குபவள் சரஸ்வதி.

எனவே கல்வி பயிலும் மாணவ மாணவிகள், தொழில் செய்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமில்லாமல்  எந்த வேலைக்கும் செல்லாமல் சும்மா இருப்பவர்களும்  வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி.

ஏனெனில் சும்மா இருக்கும்போதுதான் தீய எண்ணங்கள் மனதில் வந்து மண்டிக்கொள்ளும். சும்மா இருக்கும்போது(ம்) பிரச்சனைகள் வராமல் நம்மைக் காத்துக்கொள்ளவும் நம் எண்ணங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் தீய எண்ணங்களை தூர விரட்டி மேன்மையான எண்ணங்களை மனதில் தங்க வைத்துக்கொள்ளவும் உதவும் தெய்வம்  சரஸ்வதி.

இதனால்தான் சரஸ்வதி தேவி தூய்மையான வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதையே பாரதியார்  ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்…’  என்று பாடியுள்ளார்.

இனி சும்மா இருப்பவர்களும் சரஸ்வதி தேவியை வழிபட்டு வந்தால் ‘சும்மா இருக்கும்’ சுகத்தில் இருந்து விடுபட்டு நல்லதோர் வாழ்க்கைக் கிடைக்கப் பெறுவதற்கான அறிவுப்பூர்வமான வழியை கிடைக்கப்பெறுவர்.

சகோதரி நிவேதிதை என்றதும் நினைவுக்கு வருபவர் பாரதி!

பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவர் ஒரு பெண் என்பது தெரியுமா? ஆம். அந்தப் பெண்மணி சகோதரி நிவேதிதை.

மகாகவி பாரதியார்  இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார். ஒரு பெண்ணை தன் குருவாக சொல்கிறார் என்றால் அவர் அப்படி என்ன செய்திருப்பார்?

ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது,  அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், எங்கள் சமுதாய வழக்கப்படி  மனைவியை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார்.  மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்தத்துடன் பாரதியாரிடம்,  ‘உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்’, என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.

பின்னாளில் தான் எழுதிய ‘ஸ்வதேச கீதங்கள்’  முதல் பகுதியை பாரதியார், நிவேதிதையை குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு  சமர்ப்பணம் செய்தார்.

தமிழ் மொழி என்றதும் நினைவுக்கு வருபவர் பாரதி!

நீங்கள் எத்தனை மொழிகள் கற்றுத் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அத்தனை மனிதர்களுக்கு சமம். உங்கள் தாய் மொழி தமிழ் என்றால் தமிழுடன் சேர்த்து ஆங்கிலம், இந்தி, மலையாளம் என மூன்று மொழிகளைக் கற்று வைத்திருந்தால் நீங்கள் ஒருவர் அல்ல, நால்வர். ஆம். நான்கு மனித சக்திகளுக்கு சமமானவர். ஒரு மொழியில் ஆழமான புலமை இருந்தால் மற்ற மொழிகளைக் கற்றுகொள்வது அத்தனை கடினம் அல்ல. எனவே தாய்மொழியிலாவது தவறில்லாமல் இலக்கண இலக்கிய சுத்தத்துடன் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்துகொள்ளுங்கள். மற்றவற்றை கற்கும் ஆர்வம் தானாகவே வரும்.

பாரதி பலமொழி அறிந்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், பெங்காலி, ஹச், பிரெஞ்சு, தெலுங்கு போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார். அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான்  ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடினார் பாரதி.

எனக்குப் பிடித்த பாரதியார் கவிதை வரிகள்!

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

(Visited 1,905 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon