பதிவு எண்: 992 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 261
செப்டம்பர் 18, 2021 | காலை: 6 மணி
சர்வமும் நேர்மையே!
ஒரு சமயம் நடந்த கற்றறிந்த கல்வியாளர்கள் சந்திப்பில் எங்கள் உரையாடலுக்குப் பிறகு எனக்கு Uncompromised Honesty என்ற அங்கீகாரம் கிடைத்தது.
இது பட்டமோ, விருதோ அல்ல. என்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் மனதார வாழ்த்திய மாபெரும் அங்கீகாரம்.
இதன் தாக்கத்தில், படித்து முடித்துவிட்டு திறமைகளுடன் கனவுகளையும் சுமந்துகொண்டு கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வருகின்ற இளைஞர்களுக்கு சில விஷயங்களை பகிர நினைத்தேன்.
இன்ஜினியரிங்கோ அல்லது டிகிரியோ படித்துவிட்டோம், நம் படிப்புக்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு இருக்கும் என்ற கனவுடன் சென்னை மண்ணுக்குக் காலடி எடுத்து வைப்பீர்கள். இங்கு உங்களுக்கு முன்பே ஒன்றுக்கு மூன்று டிகிரி படித்து முடித்த பலர் தங்கள் படிப்புக்கும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாத பணியில் இருப்பதைக் காணக் கூடும். எனவே தினமும் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கற்றுக்கொண்டே இருங்கள்.
திறமை இருக்கிறது. திறமையை வெளிப்படுத்தினால் நம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என கற்பனை செய்ய வேண்டாம். ஏனெனில் இங்கு முன்னேறுவதற்கு திறமை மட்டும் போதாது. உங்கள் சுயமரியாதையை தனித்தன்மையை அடகு வைத்தால்தான் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட அங்கீகாரத்தை உதறித்தள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது உச்சத்துக்கு வருவீர்கள்.
அங்கீகாரத்துக்காக கொஞ்சம் வளைய ஆரம்பித்தீர்கள் என்றால் அங்கீகாரம் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால் நீங்கள் பெருமைப்படும் விதத்தில் இருக்கவே இருக்காது. உங்களை வளைத்துக்கொள்ளும் பழக்கம் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு உங்கள் சுயத்தை அழித்துவிடும்.
எங்கு சென்றாலும் எல்லோரிடமும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தலும்) ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அதை பூர்த்தி செய்தால் மட்டுமே உங்களுக்கான உயரத்தை பெற முடியும். உங்களுக்கான உயரத்தை அடைய பிறரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.
நீங்கள் அடைய நினைக்கும் உயரத்தை அடைந்துவிடுவீர்கள். ஆனால் அந்த உயரத்தில் இருப்பது நீங்கள் அல்ல. பலரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டதால் அவர்கள் அனைவரின் கலவையாக மாறிப்போயிருப்பீர்கள்.
பிறரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் முனைப்பு காட்டாமல் உங்களை எந்த சூழலையும் எதிர்கொண்டு நிலைநிறுத்திக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். வெற்றி கிடைக்க நாளானாலும் நிச்சயமாக நிம்மதி நிலைத்திருக்கும்.
பலர் பணியிடங்களில்கூட அத்தனை அவஸ்தைப்பட மாட்டார்கள். ஆனால் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்குவார்கள். உங்கள் திறமையில் நீங்கள் திருப்தியாக இருந்தால் எதற்கு அவசரப்பட வேண்டும். புகழ் கிடைக்கும்போது கிடைக்கட்டுமே. உங்களுக்கு கிடைக்க வேண்டியதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொறுமையாக திட்டமிட்டுப் பயணியுங்கள்.
நேர்மையாக இருப்பது பிழைக்கத் தெரியாதவர்களின் கொள்கை என்பதை சட்டம்போடாத குறையாக வலியுறுத்துவார்கள். அதை நிஜம் என நம்பி நேர்மையற்ற செயல்களில் உங்கள் மனதை செலுத்த வேண்டாம்.
நேர்மையாக இருப்பதே கம்பீரம்,
அதுவே அங்கீகாரம்,
அதுவே விருது,
அதுவே புகழ்,
அதுவே பெருமை,
அதுவே சர்வமும்!
நேர்மையாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள். கர்வப்படுங்கள். நாளடைவில் தீய சக்திகள் உங்கள் முன் மண்டியிடும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP