பதிவு எண் 998 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP-267: வாசகர்களின் கேள்வி பதில்கள்!

பதிவு எண்: 998 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 267
செப்டம்பர் 24, 2021 | காலை: 6 மணி

வாசகர்களின் கேள்வி பதில்கள்!

கேள்வி-1: கமலா முரளி அவர்களிடம் இருந்து…

உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

பதில்:

பருகுவதற்கு: வீட்டில் நாங்களே தயாரித்து குடிக்கும் டிகாஷன் காபி,
டிபனுக்கு: அதிகம் நெய் விடாமல் தயாரித்த பொங்கல் சாம்பார்,
சாப்பாட்டுக்கு: எலுமிச்சைப் பழ ரசம் வெண்டைக்காய் கறி கோம்போ,
தின்பண்டத்துக்கு: தேங்காய் போளி, உருளைக்கிழங்கு போண்டா கோம்போ!

கேள்வி-2: கமலா முரளி அவர்களிடம் இருந்து…

போலி மனிதர்களுடன் உடனுறைந்து வாழ வேண்டிய நிலை. மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது?

பதில்:

இந்தக் கேள்வியில், போலி மனிதர்கள் என்பதற்கு பதிலாக நமக்கு பிரச்சனை உண்டாக்கும் மனிதர்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனையை கொடுக்கிறேன்.

என்னவென்று தெரியவில்லை. திடீரென எங்கள் தெருவில் எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள அத்தனை வீடுகளிலும் எல்லோரும் நாய் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் நாள் முழுவதும் வெவ்வேறு விதமாக குரைத்துக்கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் அது பெருத்த தலைவலியை உண்டாக்கியது.

அதுவும் எங்கள் அடுத்த வீட்டு நாய் குரைப்பு மிகுந்த தொந்திரவைக் கொடுக்கிறது. அவர்கள் குழந்தைகள் காப்பகம் நடத்துகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் பகலில் குழந்தைகளை கொண்டு வந்து விட்டுச் செல்வார்கள். அதனால் சதா குழந்தைகளின் அழுகை சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இப்போது நாய் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனாவுக்குப் பிறகு அங்கு, குழந்தைகள் அழுகை சப்தம் அவ்வளவாக இல்லை. ஆனால் நாள் முழுவதும் விடாமல் நாய் குரைத்தபடியே உள்ளது.

எதிர் வீட்டில் உள்ள நாயும் அப்படித்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை என்றாலும் எதையோ பார்த்து குரைத்தபடியே இருக்கும்.

இப்படியாக நான்கைந்து வீடுகளில் உள்ள நாய்கள், அவை தூங்கும் நேரம் தவிர சதா குரைப்புதான். இதற்கு நடுவே தெரு நாயும் சேர்ந்துகொள்ளும். அதனால் வீட்டில் ஷூட்டிங் எடுக்கவே முடியாது. எல்லா கதவுகளையும் அடைத்தாலும் நாய் குரைக்கும் சப்தம் கேட்கும். அதனால் அலுவலகத்தில் மட்டுமே ஷீட்டிங் எடுக்கிறேன்.

‘நாயை சரியா பார்த்துக்கத் தெரியலைன்னா எதற்கு வளர்க்கணும்…’ என்று கோபத்தில் ஒரு நாள் எங்கள் அலுவலக பணிப்பெண்ணிடம் இது குறித்து சொல்லி பேசிக்கொண்டிருந்தேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் நிதர்சனம்.

‘நீங்க வேறம்மா, நீங்க என்னவோ நாயைச் சொல்லறீங்க…. மனுசங்களே இப்படித்தான் இருக்காங்க. என் மகள கல்லாணம் செய்துட்டு போன என் மருமவன்… சொந்தக்கார பய்யன் தான்… சதா சண்டை போடறான்… எதுக்கெடுத்தாலும் சந்தேகம்… குறய மட்டுமே சொல்லறது… அடி உதை, போதாக்குறக்கு அம்மா பேச்சை கேட்டு புள்ளைய அடிக்கறது என இருந்தான். ஆரம்பத்துலல்லாம் என் மவ அழுதுகிட்டே வீட்டுக்கு வந்துடும். தோ… ரெண்டு வருசமாச்சு… இன்னும் அவன் மாறவே இல்லை. ஆனா இப்பல்லாம் என் மவ கோச்சுகிட்டு வீட்டுக்கெல்லாம் வரதில்ல. அவன எப்படி நடத்தணுமோ அப்படி நடத்துது. அவன் பாட்டுக்கு அவன் நடந்துக்க, என் மவ வேலைக்கு போய் அவளுக்காக நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா… அது அவளுக்கு தயிரியத்த குடுக்குதாம்… மருமவன் இப்பல்லாம் அடிக்க வந்தா கையை திருகிடுவேன்னு சொல்லற அளவுக்கு தயிரம் வந்துடிச்சாம்…’

நான் ஆச்சர்யமாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘இவ்வளவு கதையையும் நான் ஏன் சொல்றன்னா… கட்டுன பொஞ்சாதியையே சரியா பார்த்துக்கத் தெரியாம கட்டிட்டு வந்து கொடுமப்படுத்தறாங்க… நீங்க என்னடான்னா நாயைப் பார்த்துக்கத் தெரியல்லன்னா ஏன் வளர்க்கணும்னு கேட்கறீங்க….’

‘சரி, அவரை விட்டு விலகி வந்துடலாம்தானே?’

‘வந்து… என்னத்த பன்ன, மறு கல்லாணம் செய்துக்க சொல்லறீங்களா… இந்த பிசாசு இப்படி இருக்கு வரப் போகும் பிசாசு எப்படி இருக்குமோ… தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பிசாசே மேல் தாயி…’

அவர் சொல்வது சரிதானே. நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களால் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க முடியாதுதான். ஆனால் அதை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துகொண்டால் போதும். ஓரளவுக்கு நம் அளவில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

கேள்வி-3: ராமச்சந்திரன் சேதுரத்தினம் அவர்களிடம் இருந்து…

பணப்பற்றாக்குறை, ஊழியர்கள் திறமையின்மை / பற்றாக்குறை, எதிர்பார்த்த லாபம் இல்லாதது, வாடிக்கையாளர்கள் திருப்தி படுத்த முடியாமை… இப்படி பல பிரச்சனைகள் உள்ளடிக்கிய உங்கள் துறையில். எப்போதாவது ஏன் இதில் இறங்கினோம், சாதாரணமாக எங்காவது வேலை பார்த்து இருந்தால் இவ்வளவு டென்ஷன் இல்லையே, தேவைகளும் குறைந்து நிம்மதியாக இருந்து இருக்கலாமே என்ற எண்ணம் மேலோங்கியது உண்டா?

பதில்:

ஒரு நாளும் அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியதே இல்லை. அதற்காக கஷ்ட நஷ்டங்களே வந்ததில்லை என்று அர்த்தம் இல்லை.

கொஞ்சம் விரிவாக சொன்னால்தான் புரியும் என்பதால் சொல்கிறேன். கேளுங்கள்.

எல்லோரும் 10 மாதங்கள் தான் கருவறையில் இருப்பார்கள். நானோ 22 வயதுவரை அப்பா அம்மா இருவரின் கருவறையிலும் மிக மிக பாதுகாப்பாக இருந்தேன். படித்தேன். மகிழ்ந்தேன். வளர்ந்தேன். ஏன் இப்போதும் கூட அவர்கள்தான் என் பாதுகாப்பு, ஊக்கம், உற்சாகம், ஒத்துழைப்பு எல்லாமே.

22 வயது வரை நான் கற்றது பெற்றது அத்தனையும் என்னுள் உள் வலிமையாய் அஸ்திவாரம் போட்டு அமர்ந்து, புடம்போட்ட தங்கமாய் என்னை ஜொலிக்க வைத்துக்கொண்டே இருந்தது. அதிகம் பேச மாட்டேன். நட்பு வட்டம் மிக மிக மிக சொற்பம். பேச்சு குறைவு என்பதால் நான் கற்றவையும் பெற்றவையும் ஒரு துளியும் விரயம் ஆகாமல் எனக்குள்ளேயே பொக்கிஷமாய் புதைந்து கிடந்தன.

நான் இரண்டாம் முறையாக என் 22 வயதில்தான் மீண்டும் பிறந்தேன்.

ஆம். படித்து முடித்து காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கியபோதுதான் நான் வெளி உலகையே பார்க்க ஆரம்பித்தேன். காம்கேர் நிறுவனம் தொடங்கி 28 ஆண்டுகள் ஆகின்றன. அப்படிப் பார்த்தால் என் வயதும் 28 தான்.

பிறந்த குழந்தை என்றாவது ‘நாம் ஏன் தான் பிறந்தோமோ, பிறக்காமலே இருந்திருக்கலாம், கஷ்டமே இருந்திருக்காதல்லவா, ஐயோ இந்த உலகம் இவ்வளவு மோசமானதா’ என்றெல்லாம் யோசிக்குமா? யோசிக்காதல்லவா. அதுபாட்டுக்கு வெகுளியாய் வளரும்தானே. அதுபோன்ற மனநிலையில்தான் நான் காம்கேர் நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தேன்.

என் படிப்பு, அறிவு, திறமை, உழைப்பு இவைதான் என் பலம். யார் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. அன்றும் சரி, இன்றும் சரி.

அதனால் ஒரு சிறு குழந்தை எப்படி பிறந்து தவழ்ந்து, நடந்து, ஓடி, ஆடி வளருமோ அதுப்போல காம்கேர் நிறுவனமும் நானும் வளர்ந்தோம்.

இதுதான் வாழ்க்கை என்று முடிவெடுத்த பிறகு மாற்றுப் பாதையை யோசித்ததே இல்லை.

அதனால் அந்தப் பாதையின் ஏற்ற இறக்கங்கள், மேடு பள்ளங்கள் பெரிதாகத் தெரியவில்லை.

காம்கேர் தான் என் வாழ்க்கைப் பாதை. அது மட்டுமே என் குறிக்கோள்

கேள்வி-4: சாந்தாதேவி அவர்களிடம் இருந்து…

எப்போதும் வாசிப்பவர்களுக்கு ஏதுவாக பிடித்தமான படைப்புகள் மற்றும் பதிவுகள் உங்களுக்கு கைவந்த கலை. வாழ்த்துகள் மேடம். ஜம்முனு வாழ காம்கேரின் OTP-யில் 1000 தான் உங்கள் இலக்கா? மேலும் தொடர்வீர்களா? அல்லது வேறு புதிய திட்டம் ஏதும் இருக்கிறதா?

பதில்:

இதுதான் இலக்கு என்றெல்லாம் கிடையாது. இலக்குகளை வைத்துக்கொண்டு ஒரு செயலை ஆரம்பித்தால் ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கும். செய்யும் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருப்பேன். அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி.

சமீபத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரியும் மாணவ பத்திரையாளர் ஒருவர் என்னிடம் ஒரு வீடியோ கேட்டிருந்தார், பாரதியார் 100-வது நினைவு நாளுக்காக. அதற்கு நான் எடுத்த முயற்சியும் உழைப்பும் ஆர்வமும், அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் நான் எடுத்த ஆவணப்படத்துக்காக நான் கொடுத்த உழைப்புக்கும், ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் சற்றுக் சளை இல்லாதது.

மாணவர் பத்திரிகையாளர் தானே என அலட்சியமும் இல்லை, அமெரிக்கா பல்கலைக்கழக ப்ராஜெக்ட் என்ற கர்வமும் இல்லை. இரண்டுமே என்னளவில் ஒன்றுதான்.

இதனால்தான் இலக்கு என வைத்துக்கொள்வதில்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். ஆனால் சரியான பதைதானா என்பதில் மட்டும் கவனமாக இருப்பேன். சரியான பாதையாக இருக்கும்பட்சத்தில் நாம் ஓட ஓட பாதையும் நமக்காக வழிவிடும். புதிய பாதைகள் அமைத்துத்தரும்.

புதிய திட்டம் உள்ளது. பிறகு அறிவிக்கிறேன்.

‘எப்போதும் வாசிப்பவர்களுக்கு ஏதுவாக பிடித்தமான படைப்புகள் மற்றும் பதிவுகள் உங்களுக்கு கைவந்த கலை’ என்று சொல்லி உள்ளீர்கள். முதலில் அதற்கு நன்றி.

வாசிப்பவர்களுக்குப் பிடித்த வகையில் நான் எழுதுகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. எனக்குப் பிடித்தமானதை எனக்கு ஊக்கம் அளிப்பதை எனக்கு தைரியம் கொடுப்பதை நான் எழுதுகிறேன். அதை உங்களைப் போன்றோர் வாசிப்பதால் என் எழுத்தும் சிந்தனையும் பயனுள்ளதாக ஆகிறது என்பதே உண்மை.

தரமான நிறைவான வாசகர்களை பெற்றிருப்பது என் பெரும்பேறு.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,920 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon