பதிவு எண்: 999 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 268
செப்டம்பர் 25, 2021 | காலை: 6 மணி
கேள்வி பதில்கள் – நேற்றைய தொடர்ச்சி!
கேள்வி-1: சங்கர நாராயணன் பாலசுப்ரமணியன் (சித்திரை சிங்கர்) அவர்களிடம் இருந்து…
‘1000 வது பதிவு நாளை’ முக்கியமானவர்களை அழைத்து சற்று சிறப்பாக கொண்டாடலாமே?
பதில்:
அதைத்தான் கடந்த 50 நாட்களாகக் கொண்டாடி வருகிறேனே. அதுவும் அதிமுக்கியமான என் வாசகர்களை, நலன் விரும்பிகளை, நண்பர்களை அழைத்து என் ஃபேஸ்புக் பேஜில் வெர்ச்சுவல் மேடை அமைத்துக்கொடுத்து கவிதை எழுதவும், கருத்துச் சொல்லவும், ஓவியம் வரையவும் சூழலை ஏற்பாடு செய்துகொடுத்திருந்தேனே!
என் எழுத்தை வாசிப்பவர்கள் தான் என்னைப் பொருத்தவரை சிறப்பு விருந்தினர்கள். என் ஃபேஸ்புக் பேஜ் தான் நிகழ்ச்சி மேடை. இந்த நிகழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் சிறப்பு விருந்தினராக வரலாம் என பொது அறிவிப்பை கொடுத்திருந்தேன். விருப்பமானவர்கள் முன் வந்தார்கள். நிகழ்ச்சியை பிரமாண்டப்படுத்தினார்கள். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தார்கள். அனைவருக்கும் நன்றி.
கேள்வி-2: வசுதா சிவசுப்ரமணியன் அவர்களிடம் இருந்து…
இப்படி தொடர்ச்சியாக உங்களை எழுதத் தூண்டிய நேரம் , நபர், செயல் பற்றி தெரிந்து கொள்ளலாமா? ஏனென்றால் நமக்கான நேரமாக அதுவே அடுத்தவர்களுக்கும் உதவும்படி என்னை மேலும் என்னை செம்மைப்படுத்திக்கொள்ள உதவும் என்ற நோக்கில் கேட்கிறேன்.
பதில்:
நீங்கள் என் எழுத்துக்களை தற்போது சமீபமாகத்தான் வாசிக்கிறீர்கள் என்பதால் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள்.
நீங்கள் வியக்கும் என் எல்லா செயல்களுக்கும் காரணம் என் அப்பா அம்மா. வாழ்ந்து காட்டி வழிநடத்திச் செல்பவர்களும் அவர்களே. இப்படி நான் இயங்கும் சிறப்பாக செயல்படுபது நான் மட்டுமல்ல, என் தங்கை, தம்பியும்கூட.
ஆங்கிலத்தில் Self Made Person என்று சொல்வார்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அப்படித்தான் நாங்கள் உருவானோம். அழகான பாதுகாப்பான கூடு எங்கள் வீடு. எங்கள் அப்பா அம்மா இருவரும் எங்கள் பாதுகாவலர்கள், வழிகாட்டிகள், ஆசான்கள், நண்பர்கள். இப்படி ஒருவரது வாழ்க்கை மேம்பட எந்தெந்த சக்திகள் எல்லாம் தேவையோ அவை அத்தனையும் அவர்கள் மூலமே எங்கள் வீட்டிலேயே கிடைத்ததால் வெளியில் அவற்றைத் தேட வாய்ப்பில்லாமல் போனது. அதுவே எங்கள் வரம்.
நான் ஃபேஸ்புக்கில் எழுதுவது மட்டுமே உங்களுக்கு தெரியும்.
என் திறமை கற்பனைத்திறனும் அதுசார்ந்த கிரியேட்டிவிட்டியும். எழுத்து என்பது என் செயல்பாட்டில் ஒரு அங்கம். அந்த எழுத்து என் அனிமேஷன் படைப்புகளில், ஆவணப்படங்களில், கதைக-கட்டுரை-கவிதைகளில், புத்தகங்களில் அதற்கேற்றவாறு வடிவம் எடுக்கின்றன. அவ்வளவுதான்.
நான் என் 10 வயதில் இருந்து ‘தினமும்’ (Note this Point) எழுதி வருகிறேன். தினமும் காலையில் 3 மணிக்கு எழுந்து எழுதுவதும், அதன் பின்னர் பள்ளி / கல்லூரிக்குப் பாடங்களைப் படிப்பதும் பள்ளி / கல்லூரிக்குக் கிளம்புவதும் என் வழக்கம். வளர வளர பிரம்மமுகூர்த்த நேரத்து விழிப்பு என்பது என் நிரந்தர வழக்கமானது.
என் 21 வயதுக்குள் 100-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரைகள் கலைமகள், சாவி, பாக்யா, ராஜம், விகடன், குமுதம், விஜயபாரதம், கல்கி, மங்கையர் மலர் என பல்வேறு முன்னணி இதழ்களில் வெளியாகி அவை விருதுகளையும், பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
காம்கேர் நிறுவனம் தொடங்கியதும் என் தொழில்நுட்ப அனுபவங்கள் அத்தனையையும் அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகமாக்கத் தொடங்கினேன். இன்று வரை 150 புத்தகங்கள் வெளியாகி உள்ளன.
தொழில்நுட்பத்தில் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனும் அளவுக்கு அத்தனைக்கும் புத்தகங்கள் எழுதி உள்ளேன். அவற்றில் பல நூல்கள் உலகளாவிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக உள்ளன. பல்வேறு எம்.என்.சி நிறுவனங்களில் பயிற்சி புரோகிராமர்களுக்கு பயிற்சிக்காக பயன்படுத்துகிறார்கள்.
நான் எழுதிய ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர்’, ‘இவ்வளவுதான் இன்டர்நெட், ‘கம்ப்யூட்டரில் தமிழ்’ என்ற மூன்று புத்தகங்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது என் வயது 25.
இதையெல்லாம் சுயபுராணத்துக்காக சொல்லவில்லை. நீங்கள் கேள்வி கேட்டதால் விரிவாக சொல்லி உள்ளேன்.
கேள்வி-3: பழனீஸ்வரி தினகரன் அவர்களிடம் இருந்து…
ஒரு செயல், பூரணம் அடையாமல், தடுமாறி நிற்பது மேற்கொண்டு நகர வழிதெரியாமல் இருக்கும்போது அந்த சூழலை எப்படி சமாளிப்பீர்கள்?
பதில்:
அதை அப்படியே வைத்துவிட்டு வேறு வேலையை கவனிப்பேன். சில மணி நேரங்களுக்குப் பிறகோ அல்லது ஓரிரு நாட்கள் கழித்தோ செய்ய ஆரம்பிப்பேன். மிகச் சரியாக நான் செய்ய நினைத்ததைவிட மிக அழகாக பூரணத்துவத்துடன் முடிந்துவிடும். இது ஓர் உளவியல்.
கேள்வி-4: பு.வா. புஷ்பவல்லி அவர்களிடம் இருந்து…
மரணம் மற்றும் வயோதிகம் இவற்றால் மனம் கலங்காதிருக்க என்ன வழி மேடம்?
பதில்:
அது குறித்து யோசிக்காமல் இருப்பது ஒன்றுதான் வழி. தனிமைதான் அவை குறித்து நிறைய யோசிக்க வைக்கிறது. சிறு வயதில் இருந்தே நமக்கே நமக்கான பிடித்த வேலையை / திறமையை வளர்த்தெடுத்து வந்தால் எந்த வயதிலும் அது நம்மை தனிமைச் சிறைக்குள் தள்ளாமல் நம்மை பாதுகாக்கும். கிராமங்களில் ஜோதிடம் சொல்பவர்கள், ஸ்லோகம் சொல்லிக் கொடுப்பவர்கள், ஆசிரியர்கள் இவர்களை கவனித்திருக்கிறீர்களா?
வயோதிகத்தினால் அவர்களின் உடல்தான் தளர்ந்திருக்கும். செயல்பாடுகள் இளைஞர்களைப் போல சுறுசுறுப்பாக இருக்கும். ஆம். அவர்களின் திறமையால் அவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு சிறு கூட்டம் இருக்கும். காரணம் அவர்களின் திறமைக்கும் அனுபவத்துக்குமான சன்மானம் அது. அவர்களுக்கு மரணம் மற்றியும் வயோதிகம் குறித்தும் சிந்திக்கக் கூட நேரம் இருக்காது.
கேள்வி-5: ரவிக்குமார் அவர்களிடம் இருந்து…
ஜம்முனு வாழ காம்கேர் தொடரை ஆயிரம் நாட்கள் வரை பதிவிட தூண்டுதலாக அமைந்தது எது?
பதில்:
1000-க்கு மேல் எழுத மாட்டேன் என யார் சொன்னது. தொடரும். எதுவும் என்னைத் தூண்டவில்லை. அணையாத என் கிரியேட்டிவிட்டிதான் என்னை இயக்கி வைக்கிறது. வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகிறது. விரிவான அலசல் என் மற்ற கேள்வி பதில்களில் உள்ளது.
கேள்வி எண்-6: முருகேஷ் பாலகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து…
கம்ப்யூட்டர் சம்பந்தமான அனைத்து துறைகள் தவிர, எழுத்தாளர், பேச்சாளர், உளவியலாளர், ஓவியர், வீட்டு மருத்துவம், ஹோமியோபதி, ஜாதகம் கணிப்பு (சமீபத்தில் தான் தெரிய வந்தது) இன்னும் பல கலைகளிலும், பிறருக்கு உதவும் குணத்திலும் சிகரமாக விளங்கும் தாங்கள் இன்னும் சாதிக்க நினைக்கும் வேறு ஒரு துறை எது என தெரிவிக்கலாமா?
பதில்:
என் திறமை கிரியேட்டிவிட்டி. அது ஒன்றுதான் என் எல்லா திறமைகளுக்கும், குணங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் அடிப்படை. இவ்வளவு ஏன் நான் சொந்தமாக நிறுவனம் தொடங்கியதுகூட கிரியேட்டிவிட்டியினால்தான்.
அது எந்தெந்த பாதைகளை எல்லாம் வடிவமைத்துக்கொடுக்கிறதோ அந்தப் பாதைகளில் எல்லாம் பயணம் செய்கிறேன். அவ்வளவுதான்.
இதை சாதிக்க வேண்டும் என்று குறிப்பாக நான் எதையுமே என்றுமே நினைத்ததில்லை. செய்வதை திருந்தச் செய்ய வேண்டும், முன்பு செய்ததைவிட மிக சிறப்பாக செய்ய வேண்டும், என் முந்தைய செயல்பாடுகளின் வெற்றியை நானே புது முயற்சிகள் மூலம் முறியடிக்க வேண்டும். அவ்வளவுதான். அந்த எண்ணம்தான் என்னை முன்னெடுத்துச் செல்கின்றது.
கேள்வி-7: பவளமணி ஆனந்த முருகேசன் அவர்களிடம் இருந்து…
டீன்ஏஜ் பருவத்தினருக்கு உங்களின் அனுபவ அறிவுரை என்ன? அவர்களிடமிருந்து நீங்கள் வியந்து ரசித்த விஷயங்கள் என்ன?
பதில்:
இளம் தலைமுறையினர்களுக்கு நாம் அறிவுரை எதுவும் சொல்லத் தேவையில்லை. அவரவர்கள் பெற்றோரைப் பார்த்தே நிறைய கற்றுக்கொள்ளலாம். எனவே பெற்றோர்தான் முன்மாதிரியாக வாழ வேண்டும். அவர்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
டீன் ஏஜினரிடம் நான் வியக்கும் விஷயம் எதையும் ‘ஜஸ்ட் லைக் தட்டாக’ எடுத்துக்கொள்வது. அவர்களைப் பார்த்து நான் வருந்தும் விஷயம் அதுவே.
தங்கள் உடையும், ஆபரணங்களும், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களும் பிராண்டடாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் சின்ன சின்ன செயல்பாடுகள் மூலம் தாங்கள் தனித்துவமாக உயர்தர பிராண்டாக உருவாக முடியும் என்பதை அறியாமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன்.
அவர்களைக் குறை சொல்ல முடியாது. வீடும், பெற்றோரும் சரியாக அமைந்து வழிகாட்டினால் அவர்களிடமும் மாற்றம் வரும்.
கேள்வி-8: கண்ணன் சரண்யா அவர்களிடம் இருந்து…
குழந்தைகளுக்கு எதை சொல்லித் தரலாம், எதைச் சொல்லித் தரக்கூடாது?
பதில்:
வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் வார்த்தைகளில், செயல்பாடுகளில், நடை உடை பாவனைகளில் கவனமாக இருங்கள். உங்கள் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கவனிப்பது பெற்றோர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாது. ஆனால் கவனிப்பார்கள். அதுதான் சொல்லிக்கொடுப்பதன் முதற்படி. உட்கார வைத்து அறிவுரை சொல்வதெல்லாம் அடுத்த கட்டம்.
நண்பர்களாக இருப்பதாக நினைத்துக்கொண்டு உங்கள் இளம் வயது காதல் கதைகளை விளையாட்டுக்குக் கூட சொல்ல வேண்டாம். காதலிப்பதும் கல்யாணம் செய்துகொள்வதும் சாதனைகள் அல்ல. எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் வெகு சாதாரண விஷயம்.
என்னிடம் ஆலோசனைக்கு வந்திருந்த ஒரு டீன் ஏஜ் பெண்ணின் அம்மா அவரது காதல் கதைகளை எல்லாம் ஜாலியாக ஏதோ சாதனைபோல பெண்ணிடம் அடிக்கடி பகிர்ந்து வந்திருக்கிறார். அந்தப் பெண் அதையே முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பத்தாம் வகுப்புப் படிக்கும்போதே காதல் என்ற பெயரில் தவறான நபரிடம் மாட்டிக்கொண்டு திண்டாடி வெளிவர முடியாமல் ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என டாக்டர்கள், உளவியளாளர்கள், ஆசிரியர்கள் என அலைந்து திரிந்து என்னிடமும் அழைத்து வந்திருந்தார்கள். அந்த பெண் திரும்பத் திரும்ப என்னிடம் சொன்ன விஷயம் இன்னும் என் மனதைவிட்டு நீங்கவே இல்லை. ‘என் அம்மா மட்டும் +2 படிக்கும்போதே காதலிக்கவில்லையா… இப்போது நன்றாகத்தானே இருக்கிறார்…’
எனவே சொல்லும் சொல்லில் கவனம்!
கேள்வி-9: கோபி சரபோஜி அவர்களிடம் இருந்து…
1000-வது பதிவிற்கு வாழ்த்துகள். 1000 என்ற இலக்கை முன்பே திட்டமிட்டிருந்தீர்களா, இல்லையா? என தெரியவில்லை. இப்போது அடைந்திருக்கும் இந்த பெரிய இலக்கை தொடும் நேரம் என்னைப் போன்ற வாசகர்களுக்கு உங்களின் வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அந்த இலக்கை அடையும் இந்த தருணத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
பதில்:
எதையும் திட்டமிடவில்லை. என் பணியை எனக்கு விருப்பமானதை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். என் 10 வயதில் இருந்து தினந்தோறும் எழுதி வருகிறேன். இப்போது சமூக வலைதளங்கள் இருப்பதால் அவை உங்கள் அனைவருக்கும் தெரிகிறது அவ்வளவுதான்.
எந்த ஒரு சிறு வேலையை சிறப்பாக செய்தாலும் அது கொடுக்கும் மனநிறைவை மனதுக்குள் கொண்டாடுவேன். அதுவே என் வெற்றியாக கருதுகிறேன். அதுபோலவே 1000-வது பதிவிலும். அவ்வளவுதான்.
கேள்வி-10: பத்மா சேகர் அவர்களிடம் இருந்து…
சில பேருக்கு பணத்தின் மீது அதிக ஆசை வரக் காரணம் ஏன்?
பதில்:
தேவைக்கு அதிகமாக பணத்தின் மீது ஆசை வந்தால் அது பேராசை.அது அவர்கள் சுபாவம். அவர்களாக முனைந்து மாற்றிகொண்டால்தான் உண்டு.
தேவைக்காக உழைப்பவர்களுக்கு பணத்தின் மீது ஆசை வராது. அது அவர்கள் நிர்பந்தம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP