பதிவு எண்: 995 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 264
செப்டம்பர் 21, 2021 | காலை: 6 மணி
அம்மா ஏன் அழுதார்?
ஒரு முறை ஓர் அரசு பள்ளிக்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன்… அந்த மாணவர்களிடம் இடையிடையே கேள்வி கேட்டு பதில் வாங்கினேன்.
ஒரு மாணவனிடம் ‘உங்க அம்மாவை எவ்வளவு பிடிக்கும்’ என கேட்டேன். அவன் சொன்ன பதிலில் நான் கண்ணீரில் கரைந்தேன்.
‘எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. நான் பிறந்த சில ஆண்டுகளில் என் அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் தாத்தா பாட்டியும்தான் என்னை வளர்த்து வருகிறார்கள். என் அம்மா என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
எனக்கு கபடி விளையாட்டுப் பிடிக்கும். ஒருமுறை நான் விளையாடும்போது அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. எனக்கு அவ்வளவாக வலி இல்லை. வலியே இல்லாத என் காயத்துக்கு நான் அழாமல் என் அம்மா அழுதுகொண்டே இருந்தார். அதுதான் ஏன் என்றே புரியவில்லை. அன்றில் இருந்து நான் கபடி விளையாடுவதையே விட்டு விட்டேன்.
இந்த அளவுக்கு என் அம்மாவைப் பிடிக்கும்’
வலியே இல்லாத என் காயத்துக்கு நான் அழாமல் என் அம்மா அழுதுகொண்டே இருந்தார் என்பது எத்தனை நுணுக்கமான விஷயம்.
அம்மாவை அழ வைக்கக் கூடாது என்ற அந்த மாணவனின் எண்ணத்துக்கு ஒரு சல்யூட்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP