பதிவு எண்: 994 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 263
செப்டம்பர் 20, 2021 | காலை: 6 மணி
மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்!
‘வாழ்நாள் சாதனை’ என்ற விருதுகளெல்லாம் கொடுப்பார்கள் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற விருதுகள் மற்றவர்கள் நமது சாதனைகளுக்குக் கொடுத்து கெளரவிப்பது.
‘வாழ்நாள் பெருமை’ என்ற விருது ஒன்றுள்ளது. ‘அட இது புதுசா இருக்கே!’ என நினைக்கிறீர்களா?
புதுசெல்லாம் இல்லை. எப்போதுமே உள்ளதுதான். ஆனால் என்ன, யாரும் சரியாக கவனிப்பதில்லை. அவ்வளவுதான்.
அது சரி இந்த விருதை யார் கொடுக்கிறார்கள்?
நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் மிக உயரிய விருதுதான் ‘வாழ்நாள் பெருமை’.
இப்படி நமக்கு நாமே பெருமைப்படுவது ‘தற்பெருமை’ ஆகிவிடாதா?’ என்று யோசிக்கிறீர்களா? நிச்சயம் ஆகாது. ஏனெனில் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்துவம் இருக்கும். அதுசார்ந்த பெருமையும் இருக்கும். அது குறித்த பெருமை இருப்பதில் தவறில்லை. அதுவே நம் ஒவ்வொருவரையும் சரியான பாதையில் வழிநடத்தும்.
நம் பெருமைகளை மற்றவர்கள் காதில் ரத்தம் வரும் அளவுக்கு சொல்லிக்கொண்டே இருப்பதுதான் தற்பெருமை. நமக்குள் நாமே பெருமைப்பட்டுக்கொள்வது நம்மை உயர்த்துமே தவிர வேறெந்த பாதகத்தையும் செய்துவிடாது.
சென்ற வாரம் என் பெற்றோருடன் பணிபுரிந்தவர் போன் செய்திருந்தார். அப்பா அம்மாவுக்கு ஜூனியர்தான். அவர் தன் மகனுக்கு என் நிறுவனத்தில் வேலை கேட்டார். இது பொதுவாக நடக்கும் நிகழ்வுதான். அதன்பிறகு அவர் சொன்னதுதான் ஹைலைட்.
‘என் மகன் காம்கேரில் சில ஆண்டுகள் வேலையில் இருந்தால்தான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை புரிந்துகொள்வான். உலகின் எந்த மூளைக்கும் சென்று பணி புரிவதற்கான அனுபவத்தைக் கொடுக்க காம்கேரைவிட சிறப்பான இடம் வேறெதுவும் இல்லை. குறிப்பாக என் மகனுக்கு பாதுகாப்பான இடம் காம்கேர்’
இப்படி சொல்லிக்கொண்டே போனார். என்னிடம் ஏற்கெனவே வேலைபார்த்தவர்கள் சொன்ன தகவலின்படி என் மீதும், காம்கேர் மீதும் நம்பிக்கை வைத்து 23 வயது மகனின் வேலைக்காக என்னிடம் பேசிய தந்தையை நினைத்துப் பெருமையாக இருந்தது.
அவர் சொன்னதிலேயே எனக்கு மிகவும் பெருமையாக இருந்த விஷயம் என்ன தெரியுமா?
‘என் மகனுக்கு பாதுகாப்பான இடம் காம்கேர்!’
இதுபோல சொல்லக் கேட்பது இது முதன் முறை கிடையாது. இப்படிச் சொல்வதில் இவர் முதலாமானவரும் கிடையாது. 22 வயதில் காம்கேரை தொடங்கி சிறப்பாக நடத்த ஆரம்பித்த நாளில் இருந்து அப்பா அம்மாக்கள் தங்கள் மகன்களுக்கான பாதுகாப்பான இடமாக காம்கேரை தேர்ந்தெடுத்து வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் ஒரு செயலே! பாதுகாப்பு என்ற காரணத்தை மனம் திறந்து வெளிப்படையாக சொல்லும் பெற்றோர்களின் நேர்மையை நான் ரசித்திருக்கிறேன்.
பொதுவாக, பெண் குழந்தைகளுக்குத்தான் பாதுகாப்பான இடத்தைத் தேடுவார்கள். என்னிடம் மகனைப் பெற்றெடுத்த அப்பாக்களும் பாதுகாப்பான இடமாக காம்கேரை கருதி வேலையில் சேர்த்துவிட விரும்புவார்கள்.
இந்த விஷயம்தான் என்னைப் பொருத்தவரை ‘வாழ்நாள் பெருமை’!
இதுபோல உங்களுக்குள்ளும் உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஏதேனும் ஒரு விஷயம் இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள். நினைத்து நினைத்து சந்தோஷப்படுங்கள். வாழ்க்கை இனிக்கும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP