ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1000
செப்டம்பர் 26, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி
காம்கேர் OTP – 1000!
இன்று இரண்டு பதிவுகள். ஒன்று இதோ. இரண்டாவது இங்கே: https://compcarebhuvaneswari.com/?p=9654
இன்று ஆயிரமாவது நாள். இதோ இப்போதுதான் ஆரம்பித்ததைப் போல் உள்ளது. அதற்குள் 1000 நாட்கள் ஓடி விட்டன. ஜனவரி 1, 2019 – ம் ஆண்டு தினமும் நான் எழுத ஆரம்பித்த அதிகாலைப் பதிவுகள் இன்றுடன் ஆயிரத்தைத் தொட்டு நிற்கிறது. இனியும் தொடரத்தான் போகிறது.
இப்படித்தான் செய்ய வேண்டும், இதைத்தான் எழுத வேண்டும், இப்படிப்பட்ட வாசகர்களை சென்றடைய வேண்டும், இப்படி விளம்பரப்படுத்த வேண்டும், இன்ன பிரிவினரை திருப்த்திப்படுத்த வேண்டும், இன்னாரை கொண்டாட வேண்டும், இன்னாரிடம் வன்மம் காண்பிக்க வேண்டும், இன்னாரை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் கரைபுரண்டு ஓடும் ஆறு எப்படி சலமினமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்குமோ அதுபோல மிக அழகாக நளினமாக ஆர்பாட்டமில்லாமல் அதன் போக்கிலேயே சென்று இன்று 1000-ம் நாளில் வந்து நிற்கிறது.
எனக்குப் பிடித்ததை
எனக்கு தைரியத்தைக் கொடுப்பதை
எனக்கு ஊக்கம் அளிப்பதை
எனக்குத் தெரிந்ததை
நான் அறிந்ததை
நான் கற்றதை
நான் பெற்றதை
நான் எப்படி வாழ்க்கையை எளிமையாக வாழ்கிறேனோ, எப்படி எளிமையாக அதன் சாராம்சத்தை உள்வாங்கிக்கொள்கிறேனோ அதுபோலவே உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதுதான் இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணம்.
இறையருளாலும், இயற்கையின் கருணையாலும் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரை எனக்குள் நான் சிறைபிடித்த அற்புதத் தகவல்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து வருகிறேன்.
என் சிந்தனைக்கு எந்த முலாமும் பூசவில்லை, எந்த அரிதாரமும் அணிவிக்கவில்லை. நான் என்ன நினைக்கிறேனோ, எப்படி பேசுகிறேனோ, செயல்படுகிறேனோ அதை அப்படியே உங்களுக்கு சுடச்சுடப் பகிர்ந்து வந்தேன்.
கேசரி செய்யும்போது செயற்கை கலர் சேர்க்காமல் செய்தால் அது வெண்மையாகத்தான் இருக்கும். கலர் சேர்த்து செய்யும்போது ஆரஞ்சு கலரில் பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் பார்த்தாலே சாப்பிடத் தூண்டும் வண்ணம் ஈர்க்கும். ஐயமில்லை. ஆனால் செயற்கைக் கலர் சேர்க்காமலே செய்கின்ற கேசரி உடலுக்கு ஊறு விளைவிக்காதல்லாவா?
அப்படித்தான். எழுதுவதில் இரண்டு வகை. ஒன்று நமக்குப் பிடித்ததை எழுதுவது. மற்றொன்று வாசகர்களுக்குப் பிடித்ததை எழுதுவது. இதில் இரண்டாவதுக்கு வகை எழுத்துக்குக் கிடைக்கும் வாசகர்கள் அதிகம் இருக்கலாம். நானும் அப்படி எழுதி இருக்கலாம்தான். ஆனால், அங்கு நான் தொலைந்து போயிருப்பேன். மீட்டெடுப்பது மிகக் கடினம்.
அதனால்தான் மற்றவர்களுடன் பேசும்போது அரசியல் குறித்து ஆழமாக விவாதிக்கும் நான் எழுதும்போது முழுமையாக தவிர்த்து வருகிறேன். அதைக் கேட்பவர்கள் ‘அட அரசியலைக் கூட இத்தனை விரிவாக பேசத் தெரியுமா?’ என அதிசயிப்பார்கள்.
நான் அரசியல் குறித்து எழுதாமல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், மனம் தெளிவானால் அறிவு விசாலமானால் வாழ்க்கைப் புரியும், அரசியல் புரியும், உலகம் புரியும்… இப்படி எல்லாமே புரியும். எல்லாவற்றிலும் தெளிவு கிடைக்கும். கிடைக்க வேண்டும்.
ஆம். மனதைத் தெளிவாக்கும் விஷயங்களையும் அறிவு சார்ந்த விஷயங்களையும் மட்டுமே நான் எழுதி வருகிறேன்.
பசி என்று கேட்பவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டால், அந்த வேளை பசி போய்விடும். ஆனால் அடுத்த வேளைக்கு வேறெங்காவதுதானே கையேந்தி நிற்க வேண்டும். அதற்கு பதிலாக எல்லா நாட்களும் அவர்களுக்கு சாப்பாடு கிடைக்கும்படி ஒரு வேலைக்கு வழிவகுத்தால் அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். அதைத்தான் நான் செய்கிறேன்.
ஈர்க்கும்படி எழுதி அந்த நேரத்துக்கு மகிழ்விக்காமல் சுருக்கெனெ மனதைத் தைக்கும்படியான விஷயங்களை எழுதி வாழ்நாளெல்லாம் பயன்படும் வகையில் எழுதுகிறேன்.
எல்லாவற்றுக்கும் அடிநாதம் மனமே. மனதை செம்மைப்படுத்தும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
தொழில்நுட்பம் நம் நாட்டில் நுழையவே அச்சப்பட்டுக்கொண்டிருந்த நாளிலேயே அந்தத் துறையில் இரட்டைப் பட்டம் பெற்று, எம்.பி.ஏவும் படித்து காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தைத் தொடங்கிய (1992) நான் அந்தந்த காலகட்டத்தில் என் நிறுவனம் மூலம் நான் பெறும் அனுபவங்களை புத்தகமாக்கி வந்தேன். எண்ணிக்கையில் 150-க்கும் மேலாகி பல புத்தகங்கள் உலகளாவிய முறையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன.
கடந்த 28 வருடங்களில் தொழில்நுட்பம் இமாலய வளர்ச்சி கண்டுள்ளது. நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி இது. அன்று கம்ப்யூட்டரைப் பார்க்கவே பயந்துகொண்டிருந்த மக்களையும் பார்த்திருக்கிறேன். இன்று இன்டர்நெட் இல்லாத இடத்துக்குச் சென்றால் தவியாய் தவிக்கும் மக்களையும் பார்த்து வருகிறேன். இந்த இரண்டு இடைவெளிக்கு நடுவே நம் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அயராது உழைத்ததில் பட்டி தொட்டியெல்லாம் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்க உழைத்ததில் காம்கேரின் பங்கும், என் பங்கும் அதிகம். இது தற்பெருமை அல்ல. உண்மையைச் சொல்கிறேன்.
தொழில்நுட்பம் பற்றி அதிகம் அறிந்திருக்காத நம் மக்களுக்கு அந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்ப விழிப்புணர்வு தேவையாக இருந்ததால் அது குறித்து எழுதிக் குவித்தேன். எழுத்து வடிவில் மட்டுமில்லாமல் சாஃட்வேர், ஆடியோ, வீடியோ, அனிமேஷன், ஆவணப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை உண்டாக்கினேன்.
இன்று அவர்கள் ‘போதும் போதும்’ எனும் அளவுக்கு தொழில்நுட்ப அறிவை பெற்றுவிட்டத்தால், தொழில்நுட்ப வளர்ச்சியில் இயந்திரத்துடன் இயந்திரமாக கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மாறி வருவதை கண்கூடாகப் பார்த்து வருவதால் மனிதநேயம் குறித்து வாழ்வியல் குறித்து அதிகம் பேசுகிறேன். எழுதுகிறேன். விவாதிக்கிறேன்.
அந்தந்த காலகட்டத்துக்கு எது தேவையோ அதை கொடுக்கிறேன்.
என்னுடைய இந்தப் பணியில் தினந்தோறும் நான் எழுதிவரும் அதிகாலைப் பதிவுகளுக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் அனந்தகோடி நன்றிகள்.
இறைவனுக்கும், இயற்கைக்கும், குடும்பத்துக்கும், உங்கள் அனைவருக்கும் நன்றி!
அன்பை வெளிப்படுத்த வேறென்ன சொல்ல முடியும்?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP