ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1011
அக்டோபர் 7, 2021 | வியாழன் | காலை: 6 மணி
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!
இரண்டு குடும்பங்கள்.
அதில் ஒன்று, நல்ல வசதியானவர்கள். ஓர் இளம் பெற்றோர், ஐந்தாறு வயதில் இரண்டு பிள்ளைகள். உடன் வயதில் மூத்த ஒரு தந்தை. அந்தத் தந்தைக்கு சகல வசதிகளுடன் கூடிய ஓர் அறை. வேளா வேளைக்கு சாப்பாடு. நேரத்துக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொடுக்க வேலையாட்கள். ஆனாலும் அவர் சந்தோஷமாக இல்லை. காரணம், எல்லாம் கிடைக்கிறது. ஆனால் சாப்பாடு பிடித்திருந்ததா, தூங்கினாயா, மருந்து சாப்பிட்டாயா என்று பிள்ளையோ மருமகளோ கேட்பதில்லை. இயந்திரத்தனமாக கேட்பது எல்லாம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. சலிப்பான வாழ்க்கை.
மற்றொரு குடும்பம், வசதி குறைவுதான். அவர்கள் மத்திம வயது தம்பதியினர். பதினைந்து பதினாறு வயதில் இரண்டு பிள்ளைகள். உடன் வயதில் மூத்த தாய். அவரை சமைக்கவோ வேறு எந்த வேலையோ செய்ய விடுவதில்லை. ஆனால் குடும்பமாக அமர்ந்து சாப்பிடும்போது அவரையும் அழைத்துக் கொள்வார்கள். ஏதேனும் கோயில், சுற்றுலா என சென்றால் அவரையும் அழைத்துச் செல்வார்கள். ‘மருந்து சாப்பிட்டாயா?’ என உரிமையுடன் கேட்கும் பேத்தி, ‘என்கூட தாயம் விளையாட வா’ என அழைக்கும் பேரன் என வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன செயல்பாடுகளிலும் அவரையும் இணைத்துக்கொள்வார்கள். இத்தனை நிம்மதியாக வாழ முடியுமா என எண்ணும் அளவுக்கு வாழ்க்கை உயிரோட்டமாக சென்றுகொண்டிருந்தது.
இங்கு நான் சொல்லி இருப்பது ஒரு ‘டெம்ப்ளேட்’தான். முன்னதில் வசதி உள்ளது, கேட்டதெல்லாம் கிடைக்கிறது, ஆனால் உணர்வு ரீதியாக கவனிப்பதில்லை. பின்னதில் வசதி குறைவு, கேட்டது கிடைக்கிறதோ இல்லையோ தேவையானது கிடைத்துவிடுகிறது, உணர்வு ரீதியான கவனிப்பு உள்ளது. முன்னவர் உயிருடன் வாழ்கிறார், பின்னவர் உயிர்ப்புடன் வாழ்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டில் யாருடைய வாழ்க்கை நிம்மதியானது? நீங்களே சொல்லுங்கள்.
இங்கு பெரும்பாலானோரின் பிரச்சனையே சரியாக கவனிப்பதில்லை என்பதுதான். கவனிப்பு என்பது தேவையானது எல்லாம் கிடைக்கச் செய்வது மட்டுமல்ல. அதை அவர்களுக்குக் கொடுக்கும் அதே நேரம், அவர்கள் உணர்வுகளுடனான சின்ன உரையாடலை தவிர்க்கவே கூடாது. மனிதர்களாகிய நம்மை உயிர்ப்புடன் இருக்கச் செய்வதே இதுபோன்ற சின்ன சின்ன கவனிப்புகள்தான்.
பெரியோர்களுக்கு மட்டும் அல்ல, பிள்ளைகளுக்கும் இதே பிரச்சனை பல குடும்பங்களில்.
‘எங்கே செல்கிறாய்?’, ‘ஏன் வீடு திரும்ப இத்தனை லேட், ‘என்ன செய்கிறாய்?’, ‘யார் அந்த நண்பன்?’ என கேள்வி கேட்கத் தயங்காதீர்கள். அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ உங்கள் கடமை அவர்களை வழிநடத்துவது. அவர்கள் கேட்பதும் உதாசினப்படுத்துவதும் உங்கள் வளர்ப்பில். உங்கள் கண்காணிப்பில் இருக்கும் வரை உங்கள் கடமையில் இருந்து தவறாதீர்கள்.
இதுபோன்ற கேள்விகள்தான் அவர்கள் எங்கேயேனும் சற்று தடுமாறினாலும் ‘ஐயோ அப்பா கேட்பாரே, அம்மா திட்டுவாரே’ என்ற சின்ன பதட்டம் உண்டாகும். அந்தப் பதட்டமே அவர்களை தவறுகள் செய்யாமல் தடுக்கும்.
என் பிள்ளை எங்கே போகிறான், வருகிறான் என்று எங்களுக்கே தெரியாது, பாவம் வாரம் முழுவதும் ஆஃபீஸில் பிழிந்து எடுக்கிறார்கள் சனி ஞாயிறு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டுமேன்னு கேள்வி கேட்டு இம்சைப் பண்ணுவதில்லை, எங்க பொண்ணு சொக்கத் தங்கம் தப்பே பண்ண மாட்டாள், எங்க பையன் பெண்களை தலை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டான் அத்தனை கூச்சம் அப்படி இப்படி என பில்டப் செய்கின்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பின்னாளில் எப்படி இருக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள். உண்மை புரியும்.
யாரும் இங்கே தவறுகளே செய்யாமல் இருக்க வரம் வாங்கி வரவில்லை. சூழலும் சந்தர்ப்பமும் யாரையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படுகுழியில் தள்ளிவிட காத்திருக்கும். எச்சரிகை மணி அடிக்க பெற்றோரை விட்டால் வேறு யாருக்கு அக்கறை வந்துவிடப் போகிறது சொல்லுங்கள்.
சின்ன சின்ன கவனிப்புகள், சின்ன சின்ன கேள்விகள் என மிகச் சிறிய விஷயங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும். பாதுகாப்பளிக்கும், பத்திரப்படுத்தும். இதுவெல்லாம் கிடைக்கவில்லை என்றால் அது என்ன வீடு, அது என்ன வாழ்க்கை?
ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பிள்ளைகளை கவனியுங்கள். கட்டணம் செலுத்தி படிக்கும் ஹாஸ்டலை விடுங்கள், இலவசமாக தங்கும் காப்பகங்களில் வளரும் பிள்ளைகளை கவனியுங்கள். எத்தனை ஒழுங்குடன் வளர்கிறார்கள்.
அதிகாலை எழுவது, உடனடியாக குளித்து துவைத்து அனைவரும் கூடி இறைவணக்கம் செய்வது, அடுத்து சிறு உடற்பயிற்சி, மிதமான கலை டிபன், பின்னர் பள்ளிக்குக் கிளம்புதல், மதியம் இறைவணக்கத்துடன் சாப்பாடு, மாலையில் மீண்டும் இறைவணக்கம், இரவு உணவு, நேரத்துக்கு தூக்கம் என அவர்களால் மட்டும் எப்படி இத்தனை ஒழுக்கத்துடன் வளர முடிகிறது. காரணம் நிர்வாகம்.
அதுவே அந்த நிர்வாகம் கேள்வி கேட்காமல், சட்ட திட்டங்கள் போடாமல் அப்படியே சுதந்திரமாக விட்டால் என்ன ஆகும். நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு பிள்ளையும் தான்தோன்றித்தனமாக விட்டேத்தியாகத்தானே அலைவார்கள். அப்படி உருவாகும் பிள்ளைகளின் தவறுகளுக்கு யாரை குறை சொல்லும் இந்த சமூகம். நிர்வாகத்தைத்தானே?
ஒழுங்கும், நேர்த்தியும், கவனிப்பும், அக்கறையும் பெற்றோராய் இருந்து பிள்ளைகளை கவனிக்கும் போதும், பிள்ளைகளாய் இருந்து பெற்றோரை கவனிப்பதும் இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் என்ற உறவுமுறை இனிமையாக இருக்கும்.
நாம் வாழப்போவது ஒரு முறை. நம் வாழ்க்கையும் நம் குடும்பமும் எப்படி இருக்க வேண்டும் என நாம்தான் முடிவெடுக்க வேண்டும். இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP