ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1012: சிறுமியும், நாய்க்குட்டியும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1012
அக்டோபர் 8, 2021 | வெள்ளி | காலை: 6 மணி

சிறுமியும், நாய்க்குட்டியும்!

ஒரு பதின்ம வயது சிறுமி. அவள் அப்பா அம்மா அவளுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு அடக்குமுறை என பெயரிட்டாள். அரவணைப்பிற்கு அவள் சுதந்திரத்தை பறிக்கிறார்கள் எனவும் அடிமைப்படுத்துகிறார்கள் எனவும் பெயரிட்டாள். சதா கூச்சல், சண்டை. சதா வீடே ரணகளம்தானாம். வயதுக் கோளாறு. வேறொன்றும் இல்லை.

அவள் பெற்றோர் ஒரு முறை ஆலோசனைக்காக என்னிடம் பேசினார்கள். அவளுடைய பொழுதுபோக்கு, திறமைகள், வளர்க்கும் நாய்க்குட்டி என பொதுவான விஷயங்களை பேசிய பிறகு அவளுடைய பிரச்சனையை நேரடியாகவே அணுகினேன்.

‘என்னை மிகவும் அவமானப்படுத்துகிறார்கள் என் அப்பா அம்மா…’ இதுதான் அவளுடைய குற்றச்சாட்டு.

‘அவமானப்படுத்துகிறார்கள்’ எவ்வளவு பெரிய வார்த்தை. இந்த வயதில் எப்படி இப்படியெல்லாம் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த முடிகிறது? ஆச்சர்யப்பட்டேன்.

இதன் பின்னர் நடந்த உரையாடலை கவனியுங்களேன்.

‘அவமானமா, அப்படின்னா எதைச் சொல்கிறாய்?’

‘நான் எதைச் செய்தாலும் எனக்கு முதலில் சப்போர்ட் செய்வதைப் போல செய்துவிட்டு பின்னர் இரண்டு பேரும் அவரவர் பாணியில் என்னிடம் அறிவுரை சொல்லி நான் செய்வதை தவறு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்…’

‘அப்படி என்ன தவறு செய்தாய்… ஒரே ஒரு உதாரணம் சொல்லேன்…’

‘என் ஸ்கூல் ஃப்ரெண்டுடன் சினிமாவுக்குச் செல்ல ஆசைப்படறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம். எங்களுடன் வா…’ என்கிறார்கள்.

‘ஓ…’

‘என் தோழியின் அம்மா வாரா வாரம் அவளை ஏதேனும் ஒரு மாலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்… என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்றால், போன வாரம் தானே போனோம். சும்மா விண்டோ ஷாப்பிங் செய்ய எதற்காக அடிக்கடி போகணும். அடுத்த வாரம் போகலாம்…’

‘ஓ…’

சொல்லி விட்டு கொஞ்ச நேரம் அமைதியானாள். இன்னும் என்ன சொல்லலாம் என்ற பாவனை.

‘சரி கண்ணா, நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ ஒரு நாய் வளர்க்கிறாய் அல்லவா?’

‘ஆமாம் மேம்’

‘அந்த நாய்க் குட்டியை தினமும் வாக்கிங் அழைத்துச் சொல்கிறாய் அல்லவா?’

‘ஆமாம் மேம். தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும் எங்கள் குடியிருப்பிலேயே இரண்டு மூன்று சுற்றுகள் அழைத்துச் செல்வேன்…’

‘அந்த நாய்க்குட்டிக்கு வாய் இருந்தால் என்ன கேட்கும் தெரியுமா?’

‘அதோ அங்கே பார் பாப்பா, தெருவில் திரியும் அந்த நாய் எவ்வளவு சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது… என்னை மட்டும் ஏன் கயிறு போட்டு கட்டி கொடுமைப்படுத்துகிறாய்…’

‘அப்படியா மேம்…’

‘ஆமாம். அப்படித்தான். ஒருவேளை உன் நாய்க்குட்டி உன்னிடம் அந்த கேள்வியைக் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்… கொஞ்சம் சொல்லேன்…’

‘கயிறு போட்டு கட்டலைன்னா நீ தாறுமாறாய் ஓடுவாய். தெருநாயெல்லாம் உன்னைக் கடித்துக் குதறிவிடுமே…’ என்பேன் என்றாள் அவள்.

‘ஓ… அப்போ நீ அந்த நாய்க் குட்டியை அதன் பாதுகாப்புக்காகத்தான் கயிறு போட்டு வாக்கிங் அழைத்துச் செல்கிறாய்…’

‘ஆமாம் மேம். நிச்சயமாக… எனக்கு என் நாய்க்குட்டின்னா உயிர்’

இதுவும் கற்பனைதான். ஆனால் உன் நாய்க்கு வாயிருந்தால் சர்வ நிச்சயமாக உன்னிடம் இந்தக் கேள்வியையும் கேட்கத் தவறாது என்று சொல்லி நாய்க்குட்டி கேட்க நினைக்கும் மற்றொரு கேள்வியை அவள் முன் வைத்தேன்.

‘கொஞ்ச நேரம் தெருவில் ஜாலியாக சுதந்திரமாக இருக்கும் அந்த நாயுடன் விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன்… அனுப்புவாயா பாப்பா…’

‘இப்படியெல்லாம் என் நாய்க்குட்டி நினைக்குமா மேம்…’

‘ஆமாம்… நினைக்கும். இப்படிக் கேள்வி கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய், கொஞ்சம் சொல்லேன்…’

‘சே சே… உனக்கென்ன தலை எழுத்தா ஊர் பெயர் தெரியாத நாயுடன் எல்லாம் விளையாட? உன்னுடன் விளையாட, உன்னைக் கொஞ்ச, உனக்குத் தேவையானதை எல்லாம் செய்ய நானிருக்கிறேன்… நீ ஏன் இப்படி எல்லாம் ஆசைப்படுகிறாய்…’ என அதட்டுவேன் என்றாள்.

‘ஓ, அப்போ நீ உன் நாய்க்குட்டியை வசதியாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாய்…’

‘ஆமாம் மேம். எனக்கு என் நாய்க்குட்டி மேல் அத்தனைப் பிரியம்’

‘அப்படின்னா, நீ நாய்க்குட்டியை அடக்கி ஒடுக்கி அதன் ஆசாபாசங்களுக்கு முட்டுக்கட்டை எல்லாம் போடவில்லை… அப்படித்தானே?’

‘நான் ஏன் என் செல்ல நாய்க்குட்டியை அப்படி எல்லாம் செய்யப் போகிறேன். அதன் சேஃபிடிக்குத்தான் நான் அப்படி எல்லாம் அதை நடத்துகிறேன்…’

‘சரி எத்தனை நாட்களாய் உன் நாய்க்குட்டியை உனக்குத் தெரியும்?’

‘ம்… ஒரு வருஷமா வளர்க்கிறோம். அதனால் ஒரு வருஷமா தெரியும் மேம்…’

‘சரி, விஷயத்துக்கு வருகிறேன்… ஒரு வருஷமா வளர்க்கிற உன் நாய்க்குட்டி மேலேயே உனக்கு இத்தனை பாசமும், கனிவும், அன்பும், அரவணைப்பும் என்றால் உன்னை உன் அப்பா அம்மாவுக்கு 13 வருடங்களாக தெரியும். உன் மீதும் உன் நலன் மீதும் அவர்களுக்கு அக்கறை இருக்கக் கூடாதா?’

அவளிடம் அமைதி. கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள்.

‘நீயோ உன் குட்டி நாயை அதன் அம்மாவிடம் இருந்து பிரித்து எடுத்து வந்தோ அல்லது வாங்கி வந்தோ வளர்க்கிறாய்… அதனுடம் பழகிய இந்த ஒரு வருட காலத்திலேயே அதன் மீது இத்தனை அக்கறையாய் இருக்கிறாய்… ஆனால் உன் அப்பா அம்மா உன் மீது சொல்லணா கற்பனைகளை வைத்து பாசத்துடனும், பிரியத்துடனும், நேசத்துடனும் உன்னை பெற்றெடுத்து பொத்திப் பொத்திப் பாதுகாப்புடன் வளர்த்து வருகிறார்கள். அவர்கள் உன்னிடம் நடந்துகொள்வது மட்டும் எப்படி அடிமைப்படுத்துவதாகும், அடக்குமுறையாகும்? சொல்லு பார்ப்போம்…’

‘அப்போ என் குட்டிநாயும் நானும் ஒன்றா…’ என்றாள் பதின்ம வயது புரியாமைகளுடன்.

‘இப்படி லிட்ரலாக நேரடியாக ஒப்பிட்டுக்கொள்ளாதே… நீ ஆசை ஆசையாய் நாயையோ, பூனையையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பறவையையோ வளர்க்கிறாய் என்றால் அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பும் ஆரோக்கியமும் உன்னைச் சார்ந்தது. அது பசியாய் வாடினாலோ, தாகத்தினால் தவித்தாலோ அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாய் சுற்றும் தன் சகாக்களைப் பார்த்து ஏங்கினாலோ அதன் ஒட்டு மொத்த ரெஸ்பான்சிபிளிட்டியும் உன்னைச் சார்ந்ததே… நீ எப்படி உன் பிரியத்தை அதன் மீது பாதுகாப்பு என்ற பெயரில் வைக்கிறாயோ அப்படித்தான் உன் பெற்றோர் உன் மீது காட்டுகிறார்கள். நாயோ, பூனையோ, நாமோ யாராக இருந்தால்தான் என்ன, உணர்வுகளின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றுதான். நமக்கு வாய் இருப்பதால் பேசுகிறோம், சண்டை போடுகிறோம். மற்ற ஜீவன்களுக்கு பேசும் சக்தி இல்லாததால் நாம் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு செல்கின்றன. அவ்வளவுதான்…’

அவளுக்கு கொஞ்சம் புரிந்திருக்கும் என நினைத்தேன். ஆனாலும் சிணுங்கலாய் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். பாசம் இருக்கும் இடத்தில் கண்டிப்பும், கடிவாளமும் இருக்கத்தான் செய்யும் என்பதை அவள் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசி இருப்பதால், இப்போது இல்லை என்றாலும் இனி வரும் நாட்களில் அவளால் புரிந்துகொள்ள முடியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 796 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon