ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1013: புகழப்படும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1013
அக்டோபர் 9, 2021 | சனி | காலை: 6 மணி

புகழப்படும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

உங்களை நோக்கி வரும் பாராட்டுக்கு நீங்கள் காட்டும் உடல்மொழியும், முகபாவமும், வினையாற்றலும் உங்கள் இயல்பை அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிடும்.

பல நேரங்களில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது எதிராளிக்கு தெரியாமல் இருப்பது உத்தமம். சில இடங்களில் நீங்கள் ‘இப்படிப்பட்டவர்தான் என்று தெரியப்படுத்துவது அதி முக்கியம்.

தேவைக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் முறையை கையாள வேண்டும். குறிப்பாக உங்களை நோக்கி வரும் பாராட்டுகளை, புகழ்ச்சிகளை, முகஸ்துதிகளை சரியாக கையாளவில்லை என்றால் அது உங்களை ஆட்டிப் பார்த்துவிடும். பலவீனமாக்கிவிடும். கவனம்.

பொதுவாக புகழ்ச்சியின்போது மனிதர்கள் மூன்றுவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

ஒன்று.

‘அப்படியா, நிஜமாகவா சொல்கிறீர்கள்…’ என வியப்பைக் காட்டினால் நீங்கள் கொஞ்சம் பலவீன மனதுக்காரர் என்பதை எதிராளி எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடும். அதையே உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு.

இரண்டாவது.

‘எல்லோருமே என்னை அப்படித்தான் சொல்கிறார்கள்…’ என்று சொன்னீர்கள் என்றால் ‘நீ மட்டும் என்னைப் பாராட்டவில்லை, ஊர் உலகமே என்னை அப்படித்தான் கொண்டாடுகிறது’ என பாராட்டுபவரை இறக்கிப் பேசுவதாக பொருள் ஆகிவிடும். உண்மையிலேயே உங்களை ஊர் உலகமே கொண்டாடட்டுமே, உங்களை பாராட்டும் ஒரு ஜீவன் உங்களை பாராட்டும்போது, ‘தான் மட்டுமே’ உங்களை அடையாளம் கண்டு பாராட்டுவதைப் போன்ற மகிழ்ச்சியில் இருக்கும். எதிராளியின் அந்த மகிழ்ச்சியை குழி தோண்டி புதைப்பதற்கு சமம், நீங்கள் சொல்லும் ‘எல்லோருமே என்னை அப்படித்தான் சொல்கிறார்கள்’ என்ற சொல்லாடல்.

மூன்றாவது.

‘நீங்கள் மட்டும்தான் இப்படி பெருமையா பெரிய மனதுடன் பாராட்டுகிறீர்கள்’ என்றாலோ போச்சு, உங்கள் தாழ்வு மனப்பான்மையை அப்பட்டமாக நீங்களே டமாரம் அடிக்காதக் குறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு, எதிராளி அதையே ஆயுதமாக்கிக்கொள்ளலாம், உங்களை வீழ்த்த அல்லது ‘சே, என்னவோன்னு நினைச்சேன்… இவ்வளவு பலவீனமானவனா நீ’ என உங்கள் மீதான மரியாதையை சட்டென உதறித் தள்ளிவிட்டு உங்களுக்கு அறிவுரை என்ற பெயரில் ‘விட்டுத்தள்ளுங்க… நீங்க பாட்டுக்கு உங்க வழியில போங்க, கண்டுக்கிறவங்க கண்டுக்கட்டும், இல்லாதவங்க ஓரமா போகட்டும்’ அப்படி இப்படி என பிரசங்கம் செய்யாதக் குறையாக வகுப்பெடுப்பார்கள்.

ஆகவே, உங்களை யாரேனும் புகழ்கிறார்கள் என்றால் அதை அப்படியே கேட்டு நன்றி சொல்லிவிட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்துங்கள். புகழ்ச்சிக்கானக் காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்தப் புகழ்ச்சியை காது வழியாகக் கேட்டு மண்டைக்குள் ஏற்றிக்கொண்டுவிட்டால் அவ்வளவுதான். உங்கள் செயல்பாடுகளில் சின்ன தடுமாற்றம் உண்டாவதை நீங்களே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாது.

ஆனால் உண்மையிலேயே அந்தப் புகழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி உங்களை ஒருபடி மேலே கொண்டு செல்லும் என்றால், தனியாக இருக்கும்போது அதை மனதுக்குள் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாடி உங்கள் உணர்வுகளுக்கு மரியாதைக் கொடுக்கத் தவறாதீர்கள்.

உங்களை ஊக்கப்படுத்திக்கொள்ளவும் சுய அலசல் செய்துகொள்ளவும் மட்டுமே புகழ்ச்சியையும் பாராட்டுகளையும் பயன்படுத்துங்கள்.

எத்தனைக்கு எத்தனை புகழ்ச்சியும் பாராட்டும் உங்களை நோக்கி வருகிறதோ அத்தனைக்கு அத்தனை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அமைதியாக இருக்கப் பழக வேண்டும். சுய அலசல் செய்துகொள்ள வேண்டும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon