ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1014: பொம்மை வைத்தியம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1014
அக்டோபர் 10, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி

பொம்மை வைத்தியம்!

பாட்டி வைத்தியம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன பொம்மை வைத்தியம்?

குழந்தைக்கு சாதம் ஊட்டும் தாய். அருகே ஒரு குழந்தை பொம்மை. முதலில் தன் குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறாள் தாய். குழந்தை சாப்பிட அடம் செய்கிறது. உடனே அந்தத் தாய் சாதத்தை அந்த பொம்மைக்கு ஊட்டுகிறாள். பொம்மை எப்படி சாப்பிடும். உடனே அந்தத் தாய் பொம்மைக்கு இரண்டு அடி கொடுக்கிறாள். குழந்தை மிரட்சியுடன் தாயைப் பார்க்கிறது. பின்னர் அடம் செய்யாமல் இரண்டு வாய் சாப்பிடுகிறது. மீண்டும் சாப்பிடத் தகராறு. தாய் மீண்டும் அந்த பொம்மைக்கு ஊட்டுவதுபோல் ஊட்டி, அது சாப்பிட மறுப்பதைப் போல் கருதி அடி கொடுக்க, குழந்தை பயந்துகொண்டு சாப்பிடுகிறது. இப்படியே பொம்மை வைத்தியம் செய்து குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து முடிப்பதைப் போன்ற வீடியோ காட்சியை பார்த்திருப்பீர்கள்.

இது ஓர் உளவியல்.

மற்றவர்களுக்கு நடக்கும் ஒரு விஷயத்தை நாம் காணும்போதோ அல்லது கேட்கும்போதோ நாமும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நமக்குள் நமக்கே தெரியாமல் இயல்பாக நடக்கும் ஓர் உளவியல் சார்ந்த விஷயம்.

நீங்கள் ஒருவருக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறீர்கள். அந்த ஒருவர் உங்கள் நண்பராக இருக்கலாம் அல்லது உறவினராக இருக்கலாம் அல்லது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவராக இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயத்தைச் சொன்னால் அந்த நபரின் மனம் புண்படலாம் என்ற அச்சம் உங்களுக்கு. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். என்ன செய்யலாம். மேலே சொன்ன பொம்மை வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

நீங்கள் அந்த நபரிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயத்தை இப்படி சொல்லிப் பாருங்கள்.

உங்கள் பணியிடத்தில் ஒரு நபர் உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்து வந்ததாகவும், அவருக்கு அதை எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தீர்கள் என்றும், ஆனால் அவர் புரிந்துகொள்ளாததுடன் கோபப்பட்டு உங்கள் நட்பை துண்டித்துவிட்டார் என்றோ அல்லது புரிந்துகொண்டு நல்ல நண்பராக மாறிவிட்டார் என்றோ சொல்லுங்கள். முதலில் உங்களுக்கு அப்படி முகத்தில் அறைந்தாற்போல் அவரது தவறை எடுத்துச் சொல்வதற்கு தயக்கமாக இருந்ததாகவும், பின்னர் நமக்கு நம் மன நிம்மதிதான் முக்கியம், எத்தனை நாட்கள்தான் பொறுத்துப் போவது என முடிவெடுத்து தயக்கத்தை உதறித்தள்ளி மென்மையாக எடுத்துச் சொல்லிவிட்டேன் என்ற கோணத்தில் உங்கள் கற்பனையில் ஒரு காட்சியை விவரியுங்கள்.

நல்ல சூட்சுமம் உள்ள நபராக இருந்தால் நீங்கள் விவரிக்கும் காட்சியில் நீங்கள் யாரிடம் கற்பனைக் காட்சியை விவரித்தீர்களோ அவர் தன்னைப் பொருத்திப் பார்ப்பார். ‘அடடா, நாமும் இதே தவறை அல்லவா செய்து வருகிறோம்…’ என உணர்வார். தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் அந்த நபர் வேண்டும் என்றே உங்களுக்குத் தொந்திரவு கொடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்றால் அவர் தன்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. உங்கள் கதையை ஒரு காதால்  கேட்டு மறு காதால் வெளியே விட்டு வழக்கம்போலவே உங்களிடம் நடந்துகொள்வார்.

அதில் இருந்தே நீங்கள் அந்த நபரின் சுபாவத்தை கணிக்கலாம். நட்பைத் தொடரலாமா அல்லது துண்டிக்கலாமா என்பதை நீங்கள் முடிவெடுக்க இது ஓர் உத்தமமான வழி.

இங்கு நான் சொல்லி இருப்பது ஆண் பெண்ணிடம் நடந்துகொள்வதையோ, பெண் ஆணிடம் நடந்துகொள்வதையோ மட்டும் அல்ல. ஆண் ஆணிடமும், பெண் பெண்ணிடமும் நடந்துகொள்வதையும் சேர்த்துத்தான். பொதுவாக எதிராளியிடம் ஒரு விஷயத்தை முகத்தில் அடித்தாற்போல் சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் ‘பொம்மை வைத்தியத்தை’ பின்பற்றலாம்.

இதற்கு அசையவில்லை என்றால் வேறெப்படித்தான் சொல்வது?

நேரடியாக ‘இப்படி நீங்கள் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை…’ என சொல்லிவிடலாம்.

இப்படி மென்மையாகச் சொல்வதையே முகத்தில் அறைந்தாற்போல் சொல்வதாகக் கருதி ஒதுங்குபவர்கள் பெருகிவிட்டார்கள் இன்று.

என்ன செய்வது? நம் நிம்மதி முக்கியமா அல்லது அடுத்தவர் நம் நிம்மதியை குலைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமா?

நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 295 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon