பழமை Vs புதுமை (2010)

பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here

பழமையும், புதுமையும் என்கின்ற தலைப்பை முதுமையும், இளமையும் என்ற தலைப்போடு ஒப்பிட்டுக் கொள்ள முடியும். ஏன் என்றால் நம் எல்லோருக்கும் எந்தவித பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் இன்றி இறைவன் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் இளமையும், மூப்பும் தான். ஆம். நாம் எந்த வயதினராக இருந்தாலும் நம்முடைய இளமையில் நாம் பார்ப்பது, நாம் கற்பது, நாம் உணர்வது, நமக்குக் கிடைப்பது என்று எல்லாம் புதுமையானவைகள்தான். நம்முடைய இளம் வயதில் நாம் இளமையாக உணர்ந்த புதுமைகள், நம் முதுமையில், நமக்கு அடுத்த சந்ததியினருக்குப் பழமையாகிப் போகிறது. பொதுவாக வெளிப்படையாகப் பார்ப்பதற்கு இதுபோல் தோன்றினாலும், எதுவுமே பழமையும் கிடையாது, புதுமையும் கிடையாது. இரண்டுமே ஒன்றை ஒன்று தழுவி நிற்கும் ஓர் அழகான விஷயம். பழமையின் பரிணாம வளர்ச்சியே புதுமை.

உதாரணத்துக்கு நம் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை எடுத்துக் கொள்வோம்.

குழந்தைகள்:

முன்பெல்லாம் குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். அவர்களுக்கு 5 வயதுக்குப் பிறகு தான் பள்ளிக்கூட வாசனை தெரியும். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அத்தை, சித்தி, பெரியம்மா என்று அன்புச் சூழல் இருந்தது. பாதுகாப்பான அரவணைப்பு இருந்தது.

ஆனால் அப்பா, அம்மா இருவரும் வேலைக்குப் போகும் இன்றைய அவசியக் காலகட்டத்தில், கூட்டுக் குடும்பமும் குறைந்து போயிருக்கும் இன்றையச் சூழலில், பிறந்த குழந்தைகளுக்குக் கூட ‘பிளே ஸ்கூல்’, ‘மழலையர் பள்ளி’, ‘பிரீ ஸ்கூல்’ என்று விதவிதமான பெயர்களில் பள்ளிக் கூடங்கள் தெருவுக்குத் தெரு உருவாக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

அன்று-அம்மாவின் கதகதப்பில் பால் சாப்பிட்டு, பாட்டி, தாத்தாவின் கதைகளில் மயங்கித் தூங்கி வளர்ந்தன குழந்தைகள். இன்று- ‘பட்டுப் பாட்டி பிளே ஸ்கூல்’, ‘ஜெயா பாட்டி பிளே ஸ்கூல்’ என்று அழகழகான பெயர்களைக் கொண்ட பள்ளிகளில் புட்டிப் பாட்டிலில் பால் குடித்து, ஆயாக்கள் மடியில் உறங்குகின்றன இன்றையக் குழந்தைகள்.

பாட்டி- தாத்தா நிஜ நிலா காட்டி ‘நிலா, நிலா ஓடி வா… நில்லாமல் ஓடி வா’ என்று பாட்டுப் பாடி, சாப்பாடு ஊட்டி குழந்தைகளை வளர்த்த காலம் போய், ‘தாத்தா-பாட்டிக் கதைகள்’, ‘பேரன்-பேத்திப் பாடல்கள்’ போன்ற சிடிகளில் கதைகள், பாட்டுகள் கேட்டு வளர்கின்றன இன்றைய டிஜிட்டல் குழந்தைகள்.

அன்று- பாசமும், நேசமும் இரத்தமும், சதையுமாக இருந்ததால் அதில் உயிர்ப்பு அதிகம் இருந்தது. குடும்பத்தோடு ஒட்ட அந்த உயிர்ப்பு காரணமாக இருந்தது.

இன்று- பாசமும், நேசமும் எலக்ட்ரானிக் வைப்ரேஷன்களும், மின்னணு சாதனங்களுமாகிப் போனதால், அதில் உயிர்ப்பும் சேர்ந்து காணாமல் போய் விட்டது.

விளைவு – பாசம், நேசம், பந்தம் என்ற உணர்வுக் குவியலில் வளர்ந்த அன்றைய குழந்தைகள், தங்கள் பெற்றோர்களை இறுதிக் காலத்தில் வைத்துக் காப்பாற்றுவதைக் கடமையாகக் கொண்டார்கள். அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தில் புதுமையாக வளரும் இன்றையக் குழந்தைகள், பாசம்-நேசம் இவைகளுக்குக் கொடுக்கும் இடம் இரண்டாம்பட்சமாகவே இருக்கிறது. தங்கள் பொருளாதார வளர்ச்சி, தங்கள் வேலை வாய்ப்புகள், அவற்றைச் சார்ந்த விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் கொடுப்பதில்லை என்பதே உண்மை. இதன் காரணமாய் செழிப்பாக வேகமாக பரவுகின்றன ‘முதியோர் இல்லங்கள்’. பணம் இருந்தால் போதும். எதையும் சாதிக்கலாம் என்ற உணர்வற்ற சூழல் உருவாகி உள்ளதை யாராலும் மறுக்க இயலாது.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமை. பணம் பந்தத்துக்கும் விலை பேசும் என்பது புதுமை.

பள்ளிப் படிப்பு:

இன்று ‘அபாகஸ்’ என்ற கல்விமுறை நினைவாற்றலை அதிகப்படுத்தவும், வேகமாக கணிதங்களைப் போடவும், சுறுசுறுப்பாக இருக்கவும் பயனுள்ளதாக இருப்பதால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ‘அபாகஸ்’ முறையில் சொல்லித் தரும் தனியார் நிறுவனங்களில் சேர்த்து பயிற்சி கொடுக்கிறார்கள்.

ஆனால், இதே ‘அபாகஸ்’ என்ற கல்விமுறை பல வருடங்களுக்கு முன்பே ‘மணிச்சட்டம்’ என்ற பெயரிலும், ‘மணி சிலேட்’ என்ற பெயரிலும் பயிற்றிவிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தங்கள் கற்பனையில் பாட்டுப் பாடி, சைகைகள் செய்து நடனம் ஆடி எதையுமே செய்முறையில் செய்து காண்பித்து வகுப்பெடுப்பார்கள். டி.வி, டி.வி.டி பிளேயர், இண்டர்நெட், கம்ப்யூட்டர், வெப்சைட் என்று டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றையக் காலகட்டத்தில் ஆசிரியர்களின் நேரடியான அணுகுமுறை குறைந்து போய் விட்டது.

இது போல செயல்முறை வழிபாட்டோடு சொல்லித்தருகின்ற ‘மாண்டிசோரி’ பள்ளிக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகின்றன. இந்த ‘மாண்டிசோரி’ பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் எல்லாவற்றையும் பாட்டு, நடனம், பேச்சு, ஓவியம் என்று செயல் முறை வழிபாட்டோடு சொல்லித்தருகிறார்கள்.

ஆக… பழமைகள் எல்லாமே வெவ்வேறு புதிய பெயர்களில் புதிய அணுகு முறையில் இன்று பவனி வருகின்றன.

உடற்பயிற்சி:

அன்று…குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் வாழ்க்கையின் ஓட்டத்தோடு இயல்பாக இருந்தது. அதனால் தான் பாரதியும் பாடினார்.

‘ஓடி விளையாடு பாப்பா-நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
காலை முழுதும் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!’

அன்றையக் குழந்தைகள் ஓடி விளையாடுதல், ஸ்கிப்பிங், கண்ணாமூச்சி விளையாட்டு, நொண்டிப் பிடித்து விளையாடுதல் என்று தினமும் விளையாட்டுக்கென்று ½ மணி முதல் 1 மணி வரை ஒதுக்கினார்கள். இன்றையக் குழந்தைகள் பள்ளி விட்டால் வீடு, மறுபடி டியூஷன், திரும்பவும் படிப்பு, ஹோம் ஒர்க்….இதையும் மீறி நேரம் இருக்குமானால், நல்ல மார்க் எடுக்கும் சில குழந்தைகளுக்கு மட்டும் சில ஞாயிறுகளில் டி.வி யில் கேம் ஷோக்கள், டிஜிட்டலில் வீடியோ கேம்ஸ்கள், கம்ப்யூட்டரில் கேம்ஸ்… என்று அனுமதி உண்டு. மார்க் எடுக்காத பல குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டு விடுகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால் குழந்தைகளின் உலகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. மார்க் எடுக்கும் இயந்திரமாக மட்டுமே அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.
அன்று-குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் அவர் அவர்கள் வயதுக்கேற்ப உடல் உழைப்பு இருக்கும். உதாரணத்துக்கு, வீடு பெருக்குவது, துடைப்பது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது, வயலில் வேலை செய்வது, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல நடப்பது, சைக்கிளில் செல்வது என்று சதா உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாய் நன்கு வியர்க்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளையும் ‘கன்னா-பின்னா’ என்று தாறுமாறாகத் தறிகெட்டு ஓடாமல், குறிப்பிட்ட வேலையில் கவனம் செலுத்தி, மனது ஒருமுகப்படுத்தப்படும். அதுவே தியானம் போல அமைந்து விடும்.

இயற்கை இலவசமாகக் கொடுத்த விஷயங்களை இன்று நாம் காசு கொடுத்து, நேரத்தையும் செலவழித்து புதுமையாக்கி வருகிறோம். ஆம். 30 வயதுக்கு மேல் கட்டாயமாக ‘வாக்கிங்’ செல்ல டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள். தெருவுக்குத் தெரு ‘ஹெல்த் ஸ்டுடியோக்கள்’ பெருகி வருவதைப் பார்க்கிறோம். வியர்வையைக் கட்டாயமாக வெளியேற்ற நாம் ‘டிரெட் மில்’, ‘சைக்கிளிங்’, ‘ஜாகிங்’ போன்றவைகளில் பணத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

மனதுக்குப் பயிற்சி கொடுக்க யோகா, தியானம் போன்ற வகுப்புகளுக்குக் கட்டணம் செலுத்தி மனநிம்மதியைத் தேடுகிறோம்.

இயற்கை இலவசமாகக் கொடுத்த உடலுழைப்பின் போது மூட்டுவலி, ஹார்ட் அட்டாக் போன்ற வியாதிகள் இல்லாமலே இருந்தது. இன்றைய புதுமையான வேகமான டிஜிட்டல் உலகில் 30 வயதானோருக்கும் மூட்டு வலி, ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகள் வருகின்றன. மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஹார்ட் அட்டாக் வந்தால் கூட அதனை ’பை-பாஸ் சர்ஜரி’, ‘ஆஞ்சியோ பரிசோதனை’ என்று எளிய முறையில் சரி செய்யும் நுட்பங்கள் வந்துவிட்டன.

வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டு அதைவிட அதிகமான வலிகளையும் சேர்த்துச் சுமக்கிறோம் என்பதே உண்மை.

ஆக… பழமைகள் எல்லாவற்றையும் காசு கொடுத்து புதுமையாக்கி வருகிறோம். இயற்கையைச் செயற்கையாக்கி, திரும்பவும் இயற்கையாக்க முயல்கிறோம். இதனால் இறுதியில் கிடைக்கும் பலன் குறைவு தான்.

சுற்றுச் சூழல்:

முன்பெல்லாம் நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி மரம், செடி, கொடிகள் என்று பசுமையாக இருக்கும். இன்று சாலையை அகலப்படுத்துகிறோம், நவீனமயமாக்குகிறோம் என்று நிழலையும், மழையையும் தருகின்ற சாலையோர மரங்களை வெட்டித் தள்ளி விடுகிறோம். விளைவு!  மழை இல்லாமை. தண்ணீர்ப் பஞ்சம். தண்ணீருக்கும் காசு கொடுக்க வேண்டிய அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளதற்கும் காரணம் நாம் தான்.

விவசாயம் என்பது இந்தியாவின் சொத்து. இன்று விவசாயிகள் குறைந்து வருகிறார்கள். காரணம். விவசாய நிலங்கள் சிமெண்ட் கட்டிடங்களாகி வருகின்றன. எங்குப் பார்த்தாலும் பெட்டி பெட்டியாய் ‘ஃபிளாட்டுகள்’. விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்து போய் விட்டன. மழை வற்றி விட்டது. பருவ மழை தப்புகிறது. நினைத்த நேரத்தில் மழை, எதிர்பார்க்காத நேரத்தில் வெள்ளம், சற்றே அயர்ந்திருக்கும் நேரத்தில் புயல், சுனாமி என்று இயற்கை மனிதர்களிடம் உள்ள கோபத்தில் ருத்திர தாண்டவமாடுகிறது. விளைவு விவசாயம் பாதிப்படைகிறது.

முன்பெல்லாம் வருடத்தில் 9 மாதங்கள் நெல், தானியங்கள் என்று விவசாய நிலத்தில் அறுவடை செய்வார்கள். மீதி மூன்று மாதங்கள் நிலத்தை இயற்கை உரத்திற்காகத் தயார் செய்ய எதையுமே பயிர் செய்ய மாட்டார்கள். ஊரில் இருக்கும் ஆடு, மாடுகளை நிலத்தில் மேய விடுவார்கள். இதற்காகவே மாடுகளை முன்பே கட்டணம் செலுத்தி முன்பதிவு வேறு செய்து வைப்பார்கள். மாடுகளின் சாணம், சிறுநீர் போன்றவைகளாலும், அவ்வப்போது பெய்கின்ற மழையாலும், விவசாயிகள் பம்ப் செட் மூலம் பாய்ச்சும் தண்ணீராலும் நிலம் நன்கு பதப்படுத்தப்படும். மூன்று மாதங்கள் இப்படி இயற்கையாகப் பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விளையும் நெல், தானிய வகைகள் 100 சதவிகித சத்தோடு கிடைத்து வந்தன.

ஆனால் இன்றோ பயிர் செய்யும் நிலம் குறைந்து போனதாலும், இயற்கை பாழ்பட்டுப் போனதாலும், பயிர் செய்வதற்கு எடுத்துக் கொண்ட மாதங்கள் நாட்களாகிப் போய், குறுகிய கால சாகுபடி ஆகி வருகிறது. இதன் காரணமாய் 6 மாதங்களில் விளையும் நெல்லை 45 நாட்களில் விளைவிக்க மிகுந்த சக்தி வாய்ந்த உரங்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. சக்தி வாய்ந்த உரங்களால் பூச்சிகள், வண்டுகள் கூட பயிரை முகர்ந்து  பார்க்காது. விளைவு, இரசாயன உரங்களின் தாக்கத்தோடு கிடைக்கும் நெல் மற்றும் தானியங்கள்.

மேலும் பழங்கள், காய்கறிகள் போன்றவைகளிலும் இரசாயன உரங்களின் பூச்சு அதிகமாகவே உள்ளது. மாம்பழ வாசனையினால் ஈர்க்கப்பட்ட காலம் போய், ’மெஹா சைஸ்’ மாம்பழத்தினால் ஈர்க்கப்படும் அவலம் இன்று ஏற்பட்டுள்ளது. பொன் நிற ஆப்பிள் கலரில் சொக்கிய காலம் போய் செயற்கையாக ஏற்றப்பட்ட ’பள பளக்கும்’ கலரில் மயங்கும் காலம் ஏற்பட்டுள்ளது. பூச்சி அரித்த கீரை, வண்டுள்ள பழங்கள், பூச்சி உள்ள கத்தரிக்காய் போன்றவைகள்தான் சத்தானது. ஆனால் இவைகளை இன்று பார்க்க முடிகிறதோ? வண்டும், பூச்சியும் நுகரவும் தயங்குகின்ற சத்தில்லாத அரிசி, பருப்பு, காய், கனிகள் இன்று நம் உணவாகிப் போய் விட்டது.

இதன் காரணமாய் ஏராளமான பெயர் தெரியாத வியாதிகள் வந்து மனிதனை தினம் தினம் கொன்று கொண்டிருப்பது உண்மை.

இன்று இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தானியங்கள், அரிசி போன்றவைகளை விற்பனை செய்யும் ஆர்கானிக் விற்பனை மையங்கள் அதிகரித்து வருகின்றன.

நம்மிடம் உள்ள இயற்கை என்னும் அற்புதத்தில் பெரும்பகுதியை, புதுமை என்னும் மாயப் போர்வைக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, மிஞ்சியிருப்பதை ஷோ கேஸ் பொருளாக்கி வருகிறோம். இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடுவதைப் போலல்லவா இருக்கிறது இந்தச் செயல்?

மாட்டின் சிறுநீரில் இருந்து புற்று நோய்க்கு மருந்து தயாரித்திருக்கிறார்கள் இன்று. காலம் காலமாக இந்து கலாச்சாரத்தில் ‘பஞ்சகவியம்’ என்று பொருள்படும், மாட்டின் பால், நெய், தயிர், சிறுநீர், சாணம் போன்றவைகளைப் பிரசாதமாகக் கொடுக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது.

வளர்ந்து விட்ட விஞ்ஞான, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் இயற்கையிலும் செயற்கையைக் கலந்து காட்சிப் பொருளாக்கினால் தான் நம் மக்கள் நம்புகிறார்கள்.

அயல்நாட்டுத் தாக்கம்:

நம் இந்தியா வளர்ந்து வரும் நாடாகிப் போனதற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்காவின் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்ப வளர்ச்சியே. இந்தியர்களின் கடுமையான உழைப்பும், புத்திசாலித்தனமும் அவர்களை இழுக்க, கால்செண்டர்கள், சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று அயல்நாட்டுப் பணிகளை செய்யும் கம்பெனிகள் இங்குப் பெருக ஆரம்பித்து விட்டன.

விளைவு!  நம் இளைஞர்களின் தூக்கம் பறி போனது. நம் மக்கள் தூங்கும் நேரத்தில் வேலை செய்தால் தான், அமெரிக்கர்களின் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் வேலையை நாம் செய்ய முடியும்.

இயற்கையாக 10 மணி நேர உழைப்பு, 7 மணி நேரம் மற்ற வேலைகள், 7 மணி நேரம் உறக்கம் என்ற சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, நாம் உறங்கும் இரவு நேரத்தில் வேலை செய்வதினால் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பகல் நேரத்தில் சூரியக் கதிர்களினால் கிடைக்கும் சோலார் சக்தி மற்றும் உணவு வகைகள் போன்றவைகள் இரவு நேரத்தில் கிடைக்காது. இதனால் மந்தமான மனநிலை, ஜங்க் ஃபுட் பழக்கம், தூக்கமின்மை போன்றவற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றன.

‘உணர்வுப் பூர்வமான தொடர்பை நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களோடு வைத்துக் கொள்ளத் தேவை இல்லை’ என்பது தான் இன்றைய ஐ.டி. துறையின் வேத வாக்கு. 12 முதல் 14 மணி நேரம் வரை அலுவகத்திலேயே கழிக்கும் நம் இளைஞர்களுக்கு ஐ.டி. துறையின் வேத வாக்கின் தாக்கம் வாழ்க்கையிலும் ஏற்பட்டு விடுகிறது. விளைவு, அப்பா-அம்மா, தங்கை-தம்பி, அக்கா-அண்ணா இவ்வளவு ஏன்? கணவன்-மனைவி என்று எந்த உறவிலும் ஆழ்ந்த நம்பிக்கை வைப்பதில்லை. உணர்வுப் பூர்வமான தொடர்பே இல்லாததால், இதில்லை என்றால் மற்றொன்று என்கின்ற அவல நிலை உருவாகி வருகிறது. இந்தியாவில் குறிப்பாக ஐ.டி. துறையினரிடம் தான் விவாகரத்துகள் பெருகி வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உறவுகள் கூடுகின்ற குடும்ப நிகழ்ச்சிகள் குறைந்து போய்விட்டன. உறவுகளுக்குள் பேச்சுப் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றம், உணர்வுப் பூர்வமான உரையாடல்கள் என்று எல்லாமே குறைந்து விட்டன. ஏன்? குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகரித்து வருகிறது. பாசம் இருந்தாலும் அதனைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாமலோ அல்லது நேரம் இல்லாததாலோ பாசம் இருக்கும் இடத்தைப் பணம் எடுத்துக் கொண்டு உறவுப் பிணைப்புக்கு பாதகமாக இருக்கிறது.

பழமையும்புதுமையும்:

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே.
ஆம். பழமை அழிந்து, புதுமை மிளிர்வது தான் காலத்தின் கட்டாயம். பழமையின் பரிணாம வளர்ச்சியே புதுமை.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

(Visited 464 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari