அன்புக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை

நேற்று மாலை கரூரில் இயங்கி வரும் வள்ளுவர் கல்லூரியின் (Valluvar College of Science and Management, Karur) சேர்மேன் திரு. செங்குட்டுவன் அவர்கள் காம்கேர் வந்திருந்தார்.

நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான  இப்படிக்கு அன்புடன் மனசு என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒரு மாதத்துக்கு முன்பு அவரும், அவரது மனைவியும் தங்கள் கல்லூரியில் ஏற்படுத்திய ஒரு மாற்றத்தை போனில் எனக்குத் தெரிவித்து மகிழ்ந்து வாழ்த்தினார்கள். (http://compcarebhuvaneswari.com/?p=1781). அதைத் தொடர்ந்து நேற்று நேரில் சந்திக்க வந்திருந்தார்.

பெற்றோர், சமுதாயம், கல்வி, மாணவ மாணவிகள், எழுத்து, புத்தகம், இளைஞர்கள், இந்தியா, வள்ளுவர், வள்ளுவம், விவேகானந்தர், இயற்கை என அனைத்தையும் ஆத்மார்த்தமாக பேச நேரம் சென்றதே தெரியவில்லை.

‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை…’ என என் பெற்றோர் மனதை குளிர வைக்கும் வகையில் என் நிர்வாகத் திறமையைப் பாராட்டிப் பேசினார்.

இவை எல்லாவற்றையும்விட அணுகுமுறை குறித்து அவர் சொன்ன ஒரு கருத்து இதயத்தைத் தொட்டது.

“ஒரு மாணவன் விடுப்பு எடுத்திருந்தால் அவனைப் பார்த்து ‘ஏண்டா நேற்று வரலை? என அதிகார தோரணையில் கேட்காமல் ‘என்னப்பா நேற்று உடம்பு ஏதேனும் சரியில்லையா…’ என அன்புடன் கேட்டால் எத்தனை அடமென்ட்டான மாணவனாக இருந்தாலும் நெகிழ்ந்து போவான். அன்புக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை…”

ஒரு கல்வியாளராக அவர் சொன்ன கருத்து மாணவனுக்கும், ஆசிரியருக்குமானது மட்டுமல்ல மனித உறவுகள் எல்லாவற்றுக்குமே பொருந்தும்.

நம் எல்லோருக்குமே அன்புக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை…’ என்பது தெரிந்திருந்தாலும் யாருக்கும் அதை முறையாக வெளிப்படுத்தவோ, அதுகுறித்து யோசிக்கவோ நேரம் இருப்பதில்லை… என்பதுதான் உண்மை.

அன்புடன்

காம்கேர் கே.புவனேஸ்வரி
மார்ச் 21, 2018

(Visited 22 times, 1 visits today)