இங்கிதம் பழகுவோம்[2] மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் (https://dhinasari.com)

பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையை சொதப்பி விடுவார்கள்.

நான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் அனுபவம் அப்படித்தான்… சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் அறிமுகப்படுத்துவார்கள்.

என்னுடன் என் அப்பா வந்திருப்பார்… அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு ‘திருமதி புவனேஸ்வரி அவர் கணவருடன் வந்திருக்கிறார்’ என்பார்கள்… உடன் வந்திருப்பவர் குறித்து பேச வேண்டிய தேவையே இல்லாதபோதும்…

கருப்பு கோட் அணிந்து சென்றிருந்தால், மேடம் கருப்பு நிற கோட்டில் வந்ததால் வக்கீலுக்கும் படித்திருக்கிறாரோ என நினைத்தோம் என்பார்கள்… உடை குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லாதபோதும்…

‘மேடம் தமிழ் மீடியத்தில் படித்ததால் தமிழில் தொழில்நுட்பத்தை புத்தகமாக எழுதுகிறார். இல்லை என்றால் இத்தனை அழகாக தமிழில் எழுத முடியாது…’ என்னவோ நான் தமிழில் நிறைய எழுதுவதால் ஆங்கிலமே தெரியாது என்பதைப் போலவும், நான் படித்தது முழுக்க முழுக்க தமிழ்மீடியம் என்பதைப் போலவும் அறிமுகப்படுத்துவார்கள்… எந்த கல்வித் திட்டத்தில் தொழில்நுட்பத்தை தமிழில் அறிமுகப்படுத்தினார்கள் 25 வருடங்களுக்கு முன்னர் என்ற சிந்தனையே இல்லாமல்…

அமெரிக்காவுக்கு என்னுடைய நிறுவனம் சார்ந்து பிராஜெக்ட்டுக்காக சென்று வருவேன். அதுவும் பெரும்பாலும் நம் நாட்டு பிராஜெக்ட்டின் தொடர்ச்சியாக அங்குள்ளவர்களோடு இணைந்து சில செயல்பாடுகளை செய்வதற்காக. உதாரணத்துக்கு ‘உயர்கல்வியில் இந்திய கல்விமுறைக்கும் அமெரிக்க கல்விமுறைக்குமான ஒப்பீடு’என்ற ஆவணப்படத்தை இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், அமெரிக்காவில் மிசெளரி பல்கலைகழகம் உட்பட சில கல்வி நிறுவனங்களிலும் ஷூட் செய்தோம். மேலும், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் என் பங்களிப்பை கொடுத்து வருகிறேன்.

ஆனால் அறிமுகப்படுத்துவதோ ‘மேடமின் சகோதரரும் சகோதரியும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்களைப் பார்க்க அடிக்கடி அமெரிக்கா சென்று வருவார்…’

இதனாலேயே நிகழ்ச்சிகளுக்கு பேச ஒப்புக்கொள்ளும்போதே விரிவாக எழுத்து வடிவில் என்னைப் பற்றிய தகவல்களைக் கொடுத்தாலும், போனிலும் தெளிவாக மற்றொரு முறை சொல்லிவிடுவேன்.

என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தவர் ஒருவராக இருப்பார்… மேடையில் என்னை அறிமுகப்படுத்துபவர் மற்றொருவராக இருப்பார்… எனவே பெரும்பாலான அறிமுக உரை சொதப்பல்தான். முன்பெல்லாம் கொஞ்சம் அப்செட் ஆவேன். பின்னர் நானே என்னை அறிமுகம் செய்துகொண்டு பேச தொடங்கிவிடுகிறேன். மற்றவர்களை மாற்ற முடியாதல்லா? நாம்தான் சூழலை சரிசெய்துகொண்டு வாழ வேண்டும்.

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க ஒருமுறை என் பெயரை  ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று எழுதி அனுப்பியிருந்தேன். மேடையில் அறிமுகம் செய்து வைத்தவர் எப்படி என் பெயரை குறிப்பிட்டார் தெரியுமா?

இப்போது  ‘திருமதி. செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’  தன் உரையை வழங்குவார்…

என் பெயரே ‘செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி’ என்று வைத்துக்கொண்டு அறிமுகம் செய்து வைத்தவரை எந்த உணர்வுமின்றி நிச்சலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மைக்கை வாங்கிக்கொண்டேன்.

ஆங்கிலத்தில் Miss என்றால் திருமணம் ஆகாத பெண்களையும், Mrs என்றால் திருமணம் ஆன பெண்களையும், Ms என்றால் திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் ‘செல்வி’ என்பது திருமணம் ஆகாத பெண்களையும், ‘திருமதி’ என்பது திருமணம் ஆன பெண்களையும் குறிக்கிறது.

ஆங்கிலத்தில் உள்ளதைப் போல தமிழில் திருமணம் ஆன மற்றும் ஆகாத இருபிரிவினருக்கும் ஒரே அடைமொழியில் குறிப்பிட வார்த்தைகள் இல்லை.

அது சரி… ஆண்களுக்கு Mr என்ற ஒரே ஒரு வார்த்தைதான் ஆங்கிலத்தில். தமிழில் திரு. அவர் திருமணம் ஆகி இருந்தாலும் ஆகாவிட்டாலும்.

அது என்ன பெண்களுக்கு மட்டும்  Miss, Mrs, Ms என வரிசையாக பட்டப்பெயர்கள் போல…

பொதுவான மேடையில் பெண்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறதா இல்லையா என்ற தகவலை அநாவசியமாக ஏன் பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் வாதம்.

திருமணம் ஆன மற்றும் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் ‘திருமிகு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் இந்தக் குழப்பம் வராதல்லவா?

இதையும் நான் பல இடங்களில் பதிவு செய்துள்ளேன். பல வருடங்களாகவே, என் நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் ஆண் பெண் பேதமின்றி திரு, திருமதி, செல்வி போன்றவற்றைத் தவிர்த்து அனைவருக்கும் ‘திருமிகு’ தான். மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்கட்டுமே!

இலக்கிய நிகழ்வுகளில் / நிகழ்ச்சிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே ‘திருமிகு’ கையாளப்பட்டிருக்கலாம். ஆனால், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி நிறுவனங்களில் இன்னும் திரு, திருமதி தான்… ஆங்கிலத்தில் கூட Miss, Mrs தான்…. பெண்களுக்கு Ms என்ற பொதுவான வார்த்தையைக்கூட பயன்படுத்த முயற்சிப்பதில்லை.

நான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆண் பெண் இருவரையும் பொதுவாக  ‘திருமிகு’ என குறிப்பிடுவதை பரவலாக்கவே விருப்பம்.

ஒருமுறை ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்துணர்வு முகாமில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். முதலில் என்னை என் இருப்பிடத்தில் இருந்தும், அடுத்ததாக ‘மேடைப் பேச்சில் சிகரம்’ என பெயரெடுத்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை அவர் இருப்பிடம் சென்று அழைத்துக்கொண்டு கார் கல்லூரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

1-1/2 மணிநேர பிரயாணம். என்னைப் பற்றிய பின்னணி எதுவும் தெரிந்துகொள்ள இம்மியும் முயற்சிக்காமல் அந்தப் பேச்சாளர் எளிமையான என் தோற்றத்தை வைத்து எனக்கு ‘மேடையில் இப்படி பேச வேண்டும், அப்படி பேச வேண்டும் அப்போதுதான் பார்வையாளர்களை கவர முடியும்… கையில் ஒரு நோட்டு வைத்துக்கொள்ள வேண்டும்… அதில் குறிப்புகள் எழுதிக்கொள்ள வேண்டும்….’ என்றெல்லாம் ஒரே அட்வைஸ்தான்.

நானும் அவர் வயதுக்கு மரியாதைக் கொடுத்து கேட்டபடி வந்தேன். கல்லூரியில் மேடைக்குச் சென்ற பிறகும் அவர் ஒரு ஆசிரியராகவே என்னை கையாண்டார்.

அவரைத்தான் முதலில் பேச அழைத்தார்கள். அவர் அமெரிக்கா சென்றதோ அவர் மகன் மகளுடன் 6 மாதம் தங்கி வருவதற்காக. ஆனால் அவர் மைக்கில் முழங்கியதோ, ‘அமெரிக்காவில் என்னை எல்லா தமிழ் சங்கங்களிலும் அழைத்தார்கள்… என்னால் சிலவற்றுக்கு மட்டும்தான் நேரம் ஒதுக்க முடிந்தது…’ அப்படி இப்படி என தான் அமெரிக்கா சென்றதே அங்கிருந்து இவரை சிறப்புப் பேச்சாளராக அழைத்து அதன்பொருட்டே அங்கு சென்றதைப்போலவும் தமிழ் தொண்டாற்றச் சென்றதைப் போலவும் ஒரே மிகைப்படுத்தல்.

இதுபோல இன்னும் சொல்லலாம் அவரது மிகைப்படுத்தப்பட்ட உரைக்கு. பார்வையாளர்கள் அமைதியாக இருந்தார்கள். பேராசிரியர்கள் ஆயிற்றே. பேசி முடித்ததும் கைதட்டினார்கள்.

அடுத்ததாக என்னை பேச அழைத்தார்கள்.

என் மேடை பேச்சு என்பது, நான் நேரில் எப்படி பேசுகிறேனோ அப்படித்தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், அதைவிட இன்னும் சாஃப்டாக இருக்கும். பொருத்தமான ஒருசில குட்டிக் கதைகளை சேர்த்து என் உரைக்கு முட்டுக்கொடுப்பேன் அவ்வளவுதான்.

நான் பேசப் பேச பேராசிரியர்கள் உற்சாகமானார்கள். தலையாட்டி மகிழ்ந்ததில் இருந்தும், அவ்வப்பொழுது கைதட்டி என்னை ஊக்கப்படுத்தியதில் இருந்தும் அதை தெரிந்துகொள்ள முடிந்தது.

பேசி முடித்ததும் பல பேராசிரியர்கள் என்னிடம் வந்து என் உரையை பாராட்டவும் செய்தார்கள்.

நான் கொஞ்சம் மேடையை திரும்பிப் பார்த்தேன். எனக்கு தொடர் அறிவுரை சொன்ன அந்த மேடைப் பேச்சாளர் வியப்பில் வாயடைத்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் ஆச்சர்யம் பாதி, குறைவாக எடை போட்டு விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மீதி என எல்லா உணர்வுகளும் கலந்திருந்தன.

கல்லூரியில் இருந்து இருப்பிடம் திரும்பிச் செல்லும்போது அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? ‘உங்களுக்கென ஒரு பாணியை வைத்துள்ளீர்கள். அதையே பின்பற்றுங்கள்…. ரொம்ப அருமையா இருந்தது உரை’ என்று சொல்லி வாழ்த்தினார். மேலும் ‘நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என்று காலையில் கல்லூரிக்கு வரும்போது கேட்டிருக்க வேண்டிய கேள்வியை திரும்பிச் செல்லும்போது கேட்டார்.

நான் பங்கேற்ற பல மேடை நிகழ்ச்சிகள் எனக்கு சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொடுத்துள்ளது.

தினசரி டாட் காமில்  லிங்க்…

லிங்க்-1: https://wp.me/p5PAiq-faj

லிங்க்-2: https://dhinasari.com/self-motivation/58299-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8.html

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் அக்டோபர் 16, 2018  

(Visited 21 times, 1 visits today)
error: Content is protected !!