கனவு மெய்ப்பட[8] – வேண்டாமே ‘ஈ அடிச்சான் காப்பி!’ (minnambalam.com)

ஜேகே என பரவலாக அறியப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி  ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது.

அவர் என்றுமே  நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என  சொன்னதேயில்லை.  மாறாக ‘நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க இருக்கிறோம்’  என்றுதான்  தன்  சொற்பொழிவுகளைத்  தொடங்குவார்.

இவரைப்போலவே, மேடை நிகழ்ச்சிகளில் எனக்கெனவும் சில கொள்கைகள் உள்ளன.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி வளரும் குழந்தைகள் முதல் வயதில் முதிர்ந்தோர்கள் வரை அனைவருக்காகவும் மேடையில் மோட்டிவேஷனல் உரை நிகழ்த்தி இருக்கிறேன்.

நான் பேச ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுவேன்.

‘நான் உங்களுக்கு அறிவுரை சொல்ல பேச வரவில்லை. எனக்குத் தெரிந்ததை… என் அனுபவங்களை… உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன். சுருங்கச் சொன்னால்  நண்பர்களுடன் எப்படி விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோமோ அப்படி. பேசலாமா?’

இப்படி பேச்சைத் தொடங்குவது எனக்குள் இருக்கும் இறுக்கத்தைக் கொஞ்சம் குறைக்கிறது என்பதால் ஏற்பட்ட ஒரு வழக்கம்.

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு குணம் உள்ளது. ஏதேனும் ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களோ அல்லது தன்னை விட பணத்தினாலோ, பதவியினாலோ புகழினாலோ உயரிய நிலையில் இருப்பவர்களோ சொல்வது அத்தனையும் ‘அனைவருக்கும் பொதுவான நிஜம்’ என்று நம்புவது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம்.

காரணம் நாம் ஒவ்வொருவரும் கடந்துவரும் பாதை வெவ்வேறானவை. அந்தப் பாதைக் கொடுக்கும் சூழலும் வெவ்வேறானவை. அப்படி இருக்கும்போது அவை கற்றுக்கொடுக்கும் பாடங்கள் எப்படி நமக்குப் பொருந்தும்.

எல்லோருடைய கதைகளையும் கேட்கலாம். நுணுக்கமாகப் பார்க்கலாம். அவற்றை மனதுக்குள் அப்படியே ஏற்றிக்கொள்ளாமல், அதை ஆராய்ந்து அறிந்து நமக்கு ஏற்ற வகையில் பொருத்திக்கொள்ளலாம்.

நமக்கான பாதையை நாம்தான் உருவாக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பாதையில் நாம் சென்றால் நமக்கான தனித்துவத்தை நாம் தொலைத்துவிடுவோம்.

‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’. அதுபோல கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் ஆராய்ந்து அறிந்து, அவற்றை நம் சூழலுக்கு ஏற்ப நமக்கான பாதைக்கு அவசரத்துக்கு உதவும் ஒரு கையடக்க டார்ச்லைட் போல பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு அதன்பின் கண்மூடித்தனமாகச் சென்றால் ஒரு வெறுமையே உண்டாகும்.

இதைத்தானே திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொய்யை மெய் எனலாமோ என கொதித்த பாரதி!

நம் பாரதியும், ‘முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்பதற்காக அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. அவை அத்தனையும் உண்மையும் கிடையாது’ என்பதை மிக அழகாக தன் பாஞ்சாலி சபதத்தில் பாடிச் சொன்றுள்ளார்.

முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே,பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு,
மூடரே,ஓர் வரையறை உண்டோ,
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே
முன்பிருந் தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம்முனி வோரோ?

துரியோதனின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் ஒவ்வொன்றாக இழந்துவந்த தருமன் ஒருகட்டத்தில் திரெளபதியையும் பணயம் வைக்கிறான். அப்போது அவள் சபையில் நியாயம் கேட்கிறாள். அதற்கு பீஷ்மர், ‘மனைவியை பணயம் வைப்பது தவறில்லை. தேவைப்பட்டால் விற்கவும் செய்யலாம். அப்படித்தான் காலங்காலமாய் சொல்லப்பட்டிருக்கிறது’ என சொல்கிறார்.

இந்தக் காட்சியை எழுதும்போது பாரதி கொதித்தெழுந்து பாடும் பாடல்தான் இது.

எப்போதோ நடந்தது என்பதற்காக மூடர்களே! பொய்யை மெய் எனச் சாதிக்கலாமா?

முன்பு என்று சொல்லும்போது அதற்கு ஏதேனும் கால வரையறை உண்டா? நேற்றும் முன்புதான், முன்று கோடி வருடமும் முன்புதான்.

முன்னர் வாழ்ந்தவர்களெல்லாம் முனிவர்களா?  நீங்கள் பிறக்கும் முன்பாக பாரில் மூடர்களே வாழ்ந்ததில்லையா?

இந்த பூமி தோன்றிய காலந்தொட்டு இன்று வரையிலும் பற்பல கோடி வாழ்ந்த மக்களுக்குள்ளேயும் நீங்கள் பிறப்பதற்கு முன்பும் மடமையும், நீசத்தன்மையும் இருக்கத்தானே செய்தன?

இப்படி பாரதியும் மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டாம் என்ற கருத்தைத்தான் பதிவு செய்துள்ளார்.

நமக்கானப் பாதையை நாமேதான் உருவாக்க வேண்டும்!

ஜேகே-யின் சொற்பொழிவுகளில் எந்த வேத நூலில் இருந்தும் மேற்கோள் இருக்காது. எந்த மகானையும் அவர் குறிப்பிடமாட்டார். யாரையும் எதையும் புகழ்ந்தோ  பாராட்டியோ அவர் பேசியதில்லை.

அதற்கு முக்கியக் காரணமிருக்கிறது.  நம் வாழ்க்கைக்கான கொள்கைகளை நம்பிக்கைகளை நம் அனுபவத்தின் மூலம் நாம்தான் உருவாக்க வேண்டும்.  நமக்கான உண்மையை இன்னொருவர் மூலம் நாம் பெறமுடியாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்.  அவரது   Freedom from the Known  என்ற நூலின்  கான்செப்ட்டும் அதுதான்.

நம்மில் பெரும்பாலானோர்  நம் வாழ்க்கையை அவரவர்  ஏற்றுக்கொண்டுள்ள  நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே புரிந்து வைத்திருக்கிறோம்.

அந்த நம்பிக்கைகள் யார்யாரோ  வாழ்ந்து அனுபவித்து விட்டுச் சென்றுள்ள பாதை.  அவை நாம் உருவாக்கிய, நமக்கான பாதையல்ல. அதில் பயணம் செய்பவர்களை ‘இரண்டாம்தர மனிதர்கள்’ (secondhand people)  என்கிறார்  ஜேகே.

ஆட்டோகிராஃப் சொல்லும் வாழ்க்கை ரகசியம்! 

ஒருசிலர் தங்களுக்குப் பிடித்தப் படைப்பாளிகளை கொண்டாடுவார்கள். அவர்கள் குறித்து பக்கம் பக்கமாக எழுதி புகழ்ந்துத் தள்ளுவார்கள். மற்றவர்களிடமும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி சொல்லி மகிழ்வார்கள். நேரடியாகப் பார்த்துவிட்டாலோ கடவுளையே தரிசித்துவிட்டதைப் போல கண்கள் பனிக்க ஆட்டோகிராஃப் வாங்குவார்கள்.

என்னிடமும் இதுபோல பலர் ஆட்டோகிராஃப் வாங்க வருவார்கள். அவர்களிடம் நான், ‘இன்ஜினியர், டெக்னீஷியன், கார்ப்பென்டர், டிரைவர் போன்றவர்களின் சேவைகள் எப்படி மக்களுக்குப் பயன்படுகிறதோ, அப்படித்தான் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சினிமாத்துறை சார்ந்தவர்கள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளும்.

ஒருசில பணிகள் முழுக்க முழுக்க அறிவு சார்ந்தவை. ஒருசில உழைப்பு சார்ந்தவை. ஒருசில அறிவும், உழைப்பும் சார்ந்தவை. இவை எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒன்றுள்ளது. அதுதான் ஈடுபாடு. அது இருந்துவிட்டால் அவரவர் பணியில் அவரவர் ராஜாதான்.’  என்று சொல்லி அனுப்புவேன். காலம் காலமாக நான் பின்பற்றும் பாணி இது.

சிறுவயதில், நான் பெரிய படைப்பாளி ஆவதைப் போலவும், நிறைய பேர் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதைப் போலவும் கனவு கண்டிருக்கிறேன் என்பது வேறு விஷயம். ஆனால் நான் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுக்கும் காலம் வந்த பிறகு வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்தபிறகு நான் பின்பற்றும் கொள்கை இதுதான்.

ஒருமுறை ஒரு சிறிய நகைக்கடை ஒன்றில் ஸ்படிகம் மாலை செய்யக் கொடுத்திருந்தோம். அந்த கடை முதலாளி நடுத்தர வயது. நல்ல சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களை அணுகும் முறையிலும் வித்தியாசம்.  ரசீதில் என் கையெழுத்தை வாங்குவதற்காக ரசீது புத்தகத்தை என்னிடம் நீட்டி ‘மேடம் உங்க ஆட்டோகிராஃப் ப்ளீஸ்’ என்றாரே பார்க்கலாம்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னை உங்களுக்கு முன்பே தெரியுமா… என் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா…‘ என ஆர்வக்கோளாறில் கேட்டேன். அதற்கு அவர்  ‘மேடம் உங்க கையெழுத்துதானே உங்க ஆட்டோகிராஃப்… உங்க கையெழுத்தை ரசீதில் வாடிக்கையாளர் கையொப்பம் என்ற இடத்தில் போட்டுத்தாருங்கள்…’ என்றார்.

என் ஸ்படிக மாலையைப் பார்க்கும் போதெல்லாம் ஆட்டோகிராஃப் குறித்தும் நினைவுக்கு வரும்.

ஒரு சமயம்  காஞ்சி மகாப்பெரியவரிடம் ஏழு வயசு சிறுவன் ஒருவன் தன் கையில இருந்த ஆட்டோ கிராஃப் புத்தகத்தைக் காட்டி,  ‘இதோ பார்த்தேளா. இதில பெரிய பெரிய முக்கியஸ்தர்கள் கிட்டே எல்லாம் கையெழுத்து வாங்கி சேர்த்து வைச்சிருக்கேன். உங்க கையெழுத்தையும் போட்டுத் தந்தேள்னா பொக்கிஷமா வைச்சுப்பேன்… இவ்வளவுபேர் உங்களைப் பார்க்க வந்திருக்காளே… அப்போ நீங்க நிச்சயம் வி.ஐ.பிதான்… உங்களோட ஆட்டோகிராஃப்  எனக்குப் போட்டுத் தரேளா’என்று கேட்டான்.

உடனே மகாப்பெரியவர் மடத்துக் காரியதரிசியை அழைத்து, ‘இந்த நோட்டுல மடத்தோட சீல் போட்டு, ஸ்ரீமந் நாராயண ஸ்துதின்னு எழுதி உன் கையெழுத்தைப் போட்டு இவன்கிட்டே கொடு!’  என்று சொன்னார். அப்படியே செய்தார் மடத்துக் காரியதரிசி.

உடனே மகாபெரியவர், ‘எனக்கும் உன்னோட கையெழுத்து வேணுமே போட்டுத் தரியா?’ என்று சிறுவனிடம் கேட்டு மடத்தின் ரெஜிஸ்டர் நோட்டை எடுத்துக்கொண்டு வரச்சொல்லி அதில் அவனைக் கையெழுத்துப் போடச் சொன்னார்.

சந்தோஷமா கையெழுத்து போட்ட அவனை ஆசிர்வாதம் செய்தார் மகாபெரியவர்.

‘அந்தப் பையனுக்கு தானும் ஒரு முக்கியஸ்தன் தான் அப்படிங்கற எண்ணம் வரணும். அப்படி வந்தாத்தான் அவன் வாழ்க்கையில் முன்னேறுவான், அதற்காகத்தான் அவனையும் கையெழுத்துப் போடச் சொன்னேன்’ என்பதை சொல்லாமல் சொன்ன காஞ்சி மகாபெரியவரை அனைவரும் வணங்கினர்.

ஆட்டோகிராஃப் குறித்து நான் கடைபிடித்துவரும் தத்துவமும், நகைக்கடை முதலாளி ரசீது புத்தகத்தில் கையெழுத்து வாங்கும்போது உங்க ஆட்டோகிராப் போடுங்க என்று சொல்லி கையெழுத்துவாங்கும் வியாபார நுணுக்கமும், காஞ்சி மகாப்பெரியவர் சிறுவனுக்கு அவனும் ஒரு முக்கியஸ்தன் என்பதை உணர்த்த ரெஸிட்டரில் கையெழுத்து வாங்கும் தெய்வீகமும் ஒரே நேர்கோட்டில் வருகிறதல்லவா?

அவரவர் வாழ்க்கையில் அவரவர் செய்கின்ற பணியில் அவரவர் பின்பற்றும் தர்மத்தில் அவரவர்கள் முக்கியமானவர்களே… சிறப்பானவர்களே. தங்களை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் கதைகளை கேட்கலாம், படிக்கலாம், பார்க்கலாம்… ஆனால் அவற்றில் நமக்கு ஒத்துவருவதை, தேவையானதைத் தேர்ந்தெடுத்து பொருத்திக்கொள்ளலாமே தவிர அப்படியே ‘ஈ அடிச்சான் காப்பி போல’ பின்பற்றக் கூடாது.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலம் டாட் காமில் படிக்க… https://minnambalam.com/k/2018/12/28/14

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 8

(Visited 183 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari