கனவு மெய்ப்பட[10] – அந்தப் பத்தாவது ஆப்பிள்! (minnambalam.com)

நம் சந்தோஷம் என்பது நம்முடைய செயல்பாடுகளினாலும், வெற்றியினாலும் கிடைக்கும் என்பது பொதுவிதியாக இருந்தாலும் பெரும்பாலும் நம்மை பிறர் பாராட்டினாலோ அல்லது நமக்குப் பிடித்த நபர் நம்முடன் வலிய வந்து பேசினாலோ நாம் மகிழ்ச்சியாகி விடுகிறோம்.

நம்முடைய மகிழ்ச்சி மற்றவர்களின் நடவடிக்கையால் தீர்மானிக்கப்படும்போது நாம் மற்றவர்களைச் சார்ந்து இயங்க ஆரம்பித்து விடுகிறோம். இந்த கண்ணோட்டம் இன்னும் ஆழமாகும்போது நாம் மகிழ்ச்சியாக இல்லாமல் போவதுடன் ஒருவிதமான விரக்தியான மனோபாவத்துக்கு சென்றுவிடுவோம்.

மற்றவர்களின் செயல்பாடுகளால்தான் நம் சந்தோஷம் தீர்மானிக்கப்படும் என்றால் நாம் என்றுமே சந்தோஷமான வாழ்க்கையை வாழவே முடியாது.

நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல காரணங்கள் இருக்கும்போது, நம்மை வருத்தப்பட வைக்கும் சில காரணங்களைப் பார்த்து நாம் ஏன் துவள வேண்டும்.

நல்லவை நடக்கும்போது சந்தோஷமாக இருப்பதைப்போல, கெட்டவை நடந்தால் வருத்தமாகத்தான் இருக்கும். அதுதான் மனித இயல்பு. சந்தோஷம் வருத்தம் சோகம் துக்கம் அழுகை கோபம் ஆத்திரம் போன்ற எல்லா விதமான உணர்வுகளுக்கும் நாம் இடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியாக செயல்படுகிறோம் என்று அர்த்தம்.

முன்பெல்லாம் நம்மைச் சுற்றி மனிதர்கள் இருப்பார்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு நல்லது கெட்டதுகளுக்குச் சென்று வருவோம். நம் மனதுக்கு இதமான ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும். இப்போது சோஷியல் நெட்வொர்க்குகளில் ஆயிரக்கணக்கில் நட்புகள். ஆனால் நேரில் தோள் தட்டி ஆறுதல் சொல்ல நான்கு நண்பர்கள்கூட இருப்பதில்லை. நம்மைச் சுற்றி மனிதர்கள் இருக்கும்போது கிடைக்கின்ற ஆறுதலை நாம் காயப்பட்டிருக்கும்போது மட்டுமே உணர முடியும்.

அதனால்தான் சொல்கிறேன், காரணமே இல்லாவிட்டால்கூட காரணங்களைத் தேடி பிறரை வாழ்த்தியும், பாராட்டியும் பாருங்கள். உங்களுக்குள் அன்லிமிடெடாக பாஸிட்டிவ் எனர்ஜி நுழைவதை உணர்வீர்கள்.  ஓட்டலுக்குச் சென்று சாப்பிடும் நாட்களில் தெருவில் எதிர்படும் ஒரு ஏழைக்கு இரண்டு இட்லி வாங்கிக்கொடுத்தால் உங்களுக்குள் எல்லையற்ற அன்பு ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.

நம்மை பிறர் பாராட்டும்போதும் பிறர் நமக்கு நல்லது செய்யும்போதும்தான் நமக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்பதில்லை. நாம் பிறரைப் பாராட்டும்போதும், பிறருக்கு நாம் நல்லது செய்யும்போதும் அதே மகிழ்ச்சி நமக்குள் ஊற்றெடுக்கும்.

பிறராலும், நம்மைச் சார்ந்துள்ள புற விஷயங்களினால் ஈர்க்கப்பட்டு நாம் மாயையான மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்வதைப்போல் அதே புற காரணங்களினால் சோர்வையும் உள்ளுக்குள் ஏற்றிக்கொள்கிறோம்.

உண்மையில் மகிழ்ச்சியும் மனவருத்தமும் நம்முடைய செயல்பாடுகளினால் மட்டுமே. அதை உணர்ந்துவிட்டால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ளமுடியும்.

எதிர் வீட்டுக்காரர் புதிதாக கார் வாங்கி இருப்பதைப் பார்த்தாலோ, உடன் பணிபுரியும் நண்பர் புதிதாகக் கட்டிய வீட்டு  கிரஹப்பிரவேசத்துக்கு சென்று திரும்பிய பிறகோ, பக்கத்து வீட்டு நண்பர் குடும்பத்துடன் சிங்கப்பூர் டூர் சென்றுவந்த செய்தியை கேட்ட பிறகோ, உங்கள் நண்பரின் மகள் பள்ளியில் நல்ல பெயர் எடுப்பதை கேட்கும்போதோ உங்கள் காதுகளில் இருந்து புகை வருகிறதா…. வயிற்றில் எரிச்சல் அதிகரிக்கிறதா…  இதற்கும் உடனடித் தீர்வு உண்டு…

அவர்களைப் போல நாம் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து உழைக்கலாம் அல்லது அவரவர்கள் வாழ்க்கை அவரவர்களுக்கு என பக்குவப்படப் பழகலாம்.

10-வது ஆப்பிள் விளைவு!

நியூட்டன் மூன்றாவது விதி எல்லோருக்கும் தெரியும். 10-வது ஆப்பிள் விளைவு பற்றி தெரியுமா?

வேடன் ஒருவன் காட்டில் மானை வேட்டை ஆடும்போது அதைத் துரத்திக்கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டான். மான் அவன் கண்ணைவிட்டு மறைந்து எங்கோ சென்றுவிட்டது. இருட்டிவிட்டதால் வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து தவித்துக்கொண்டிருந்தான். மானும் கிடைக்கவில்லை, காட்டை விட்டு வெளியேறும் வழியும் தெரியவில்லை, பசிக்கும் வயிற்றுக்கு சாப்பாடும் கிடைக்கவில்லை.

இப்படியே அலைந்து திரிந்து வாழ்க்கை மீதான நம்பிக்கை முற்றிலும் இழந்து மயங்கிச் சரியும் ஒரு கணத்தில், ஆப்பிள் மரம் ஒன்று அவன் கண்களில்பட்டது.

உடலைவிட்டுப் பிரியும் உயிர், மீண்டும் உடலுக்கும் புகுவதைப்போன்ற புத்துணர்வு பெற்றான். ‘யாரோ அப்பிள் மரத்தை அந்த இடத்தில் இருந்து பெயர்த்தெடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்களோ’ என்பதைபோன்ற பதட்டத்தில்  ஒரு டசன் அப்பிள்களை பறித்து சேகரித்துக்கொண்டான்.

முதல் ஆப்பிளை அவசரம் அவசரமாக சாப்பிட்டான். அத்தனை சுவையான ஆப்பிளை இதுநாள் வரை சாப்பிட்டதே இல்லை என மகிழ்ந்தான். வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி சொன்னான். கண்களில் கண்ணீருடன் நன்றி சொன்னபடி முதல் ஆப்பிளை சாப்பிட்டு முடிக்கையில் ஆக்ரோஷப் பசி அடங்கவில்லை என்றாலும் சொல்லணா மகிழ்ச்சியாக இருந்தான்.

இரண்டாவது ஆப்பிளை சாப்பிட ஆரம்பித்தான்… முதல் ஆப்பிளை சாப்பிடும்போது கிடைத்த சுவையும் அந்த மகிழ்ச்சியும் எல்லையில்லா ஆனந்தமும் நன்றியுணர்வும் கொஞ்சம் குறைந்தது. மூன்றாவது ஆப்பிளை சாப்பிட்ட போது இரண்டாவதைவிட இன்னும் கொஞ்சம் குறைந்தது.

இப்படியே ஒவ்வொரு ஆப்பிளுக்கும் அவனிடம் இருந்த கொண்டாட்ட மனநிலை குறைந்துகொண்டே இருந்தது. இப்படியாக 10-வது ஆப்பிளை சாப்பிடும்போது அவனுடைய நன்றியும் மகிழ்ச்சியும் குறைந்து பசியின் உச்சத்தில்தான் இருந்தான்.

காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் ஒன்று புரியும். அகோர பசியில் இருந்தபோது காட்டின் நடுவில் ஆப்பிள் மரத்தைக் கண்டவுடனேயே அதை கடவுள் கொடுத்த பரிசாக உணர்ந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

அதனால்தான் முதல் ஆப்பிளின் சுவையுடனேயே இருக்கின்ற, 10-வது ஆப்பிளை சாப்பிடும்போது அது அவனுக்கு முதல் ஆப்பிளின் சுவையையோ அதை சாப்பிட்டபோது கொடுத்த மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவனுக்குக் கொடுக்கவில்லை. பசியும் அடங்காமல் அதிகரிக்கவே செய்தது. குறை ஆப்பிளில் இல்லை. அவனது மனநிலையில்தான்.

இதுவே பத்தாவது ஆப்பிள் விளைவு (‘10-th Apple Effect’) என்றழைக்கப்படுகிறது. இதை பொருளாதாரத்தில் ‘diminishing marginal utility’ என்றும் சொல்வார்கள். Diminishing Gratitude என்றும் புரிந்துகொள்ளலாம்.

இப்படித்தான் தொடர்ச்சியாக நம் வாழ்க்கையில் நமக்கு நாம் விரும்பும் அத்தனையும் கிடைத்துக்கொண்டே இருக்கும்போது, நம் மகிழ்ச்சி மெல்ல மெல்ல குறைந்து ஆசை பேராசையாகி அதிகரித்துக்கொண்டே வரும்.

வாழ்க்கையில் நாம் இறுதி கட்டத்தில் இருக்கும்போது நாம் 15 வயதில் இருந்தபோது, 25 வயதில் இருந்தபோது, 50 வயதில் இருந்தபோது எப்படி மகிழ்ச்சியாக இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டுமென்றால் வாழ்க்கை மீதான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் இழக்கவே கூடாது. ‘10-வது ஆப்பிள் விளைவு’ தத்துவம் உணர்த்தியுள்ளதைப்போல், எந்த வயதிலும் நம் வாழ்க்கையின் உற்சாகத்தை குறைக்க நாம் இடமளிக்கக் கூடாது.

ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குக்கொடுத்த பரிசு. நாம் எந்த வயதினராக இருந்தாலும், நித்தம் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.

அழுவதற்குக் காரணங்களைத் தேடாதே!

எங்கள் நிறுவன ஆண்டுவிழா சார்பில் வருடத்துக்கு ஒருமுறை ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் ஏதேனும் ஒன்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உடன் என்னுடன் பணியாற்றுபவர்களையும் அழைத்துச் செல்வேன்.

முதியோர் இல்லங்களில் குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டவர்கள், கணவனால் / மனைவியால் ஏமாற்றப்பட்டவர்கள், விவாகரத்தானவர்கள் என பல்வேறு சுமைகளைத் தாங்கிக்கொண்டு வயதான பாட்டிகளும், தாத்தாக்களும் வளைய வருவதைக் காணும்போது வெளியில் இருந்து செல்லும் நமக்குத்தான் வருத்தமாக இருக்கும். அவர்கள் அதற்கு நேர்மாறாக சந்தோஷமாகவே வளைய வருவார்கள்.

ஒவ்வொரு முறையும் அந்த பாட்டி தாத்தாக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வோம். அவற்றை மொபைலில் பார்த்து சிறுபிள்ளைகளைப் போல ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு ஜாலியாக இருப்பார்கள்.

எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவி வருகிறோம். குறிப்பாக இருகண்களிலும் பார்வைத்திறன் இழந்தவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் சுயமாக படிக்கவும் தேர்வெழுதவும் உதவக்கூடிய  ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ தயாரித்துள்ளோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அவர்களுக்காக  தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.

இரு கண்களிலும் பார்வைத்திறன் இழந்த அவர்கள் காதில் ஹெட்போன் போட்டுக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப் செய்ய செய்ய அதில் இன்ஸ்டால் செய்துள்ள ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் அவற்றைப் படித்துக் காண்பிக்கும். இதனால் மற்றவர்கள் துணையின்றி அவர்களே டைப் செய்ய முடியும். மேலும் வெப்சைட் முதற்கொண்டு அனைத்து சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறார்கள். மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் என அத்தனை சாஃப்ட்வேர்களையும் கையாள்கிறார்கள்.

ஆனால் நாம் கண்களை மூடிக்கொண்டு ஒரு ½ மணிநேரம் கம்ப்யூட்டரையும், மொபைலையும் ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் துணையோடு பயன்படுத்தினால் தலை வலியும், காது வலியும் மட்டுமே வரும். காரணம் நாம் செளகர்யங்களுக்கு பழகிவிட்டோம். அவர்கள் தங்கள் உடலால் ஏற்பட்ட அசெளகர்யங்களுக்குப் பழகிவிட்டார்கள்.

இதுபோல உடல் உறுப்புகள் இழந்த எத்தனையோ மாற்றுத்திறனாளிகளை நித்தம் நாம் சந்தித்து வருகிறோம். கை கால் இழந்தவர்கள், காது கேட்காதவர்கள், இரு கிட்னியையும் இழந்து மாற்று  கிட்னிக்காக காத்திருப்பவர்கள்… இவ்வளவு ஏன்… வாழ்க்கையே உத்திரவாதமில்லாத எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் பாதித்த எத்தனையோ பேர் நம்பிக்கையுடன் நாட்களை கடத்துவதையும் கேள்விப்படுகிறோம்.

இவர்கள் ஒவ்வொருவரும், ‘உனக்கு என்ன குறை… வருத்தப்படுவதற்குக் காரணங்களைத் தேடி அழுதுகொண்டிருக்காதே… நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய அத்தனை சக்தியும் உன்னிடம் உள்ளதே…’ என நாம் தற்போது வளைய வந்துகொண்டிருக்கும் சுதந்திரச் சூழலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறார்கள்.

இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அற்புத வாழ்க்கையை ரசனையோடு அனுபவித்து வாழ்ந்து நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதே மனிதப் பிறவி எடுத்ததன் பயன்.

யோசிப்போம்!

மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/01/12/11

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 10

(Visited 64 times, 1 visits today)
error: Content is protected !!