பேரன்பின் தொடர்ச்சி…

முகநூலில் பேரன்பு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்துக்குப் பிறகு நிறையபேர் என்னிடம் ‘நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதவில்லை…’ என்றார்கள்.

நித்தம் இந்தத் திரைப்படத்தில் வருவதைப்போல மூளை முடக்குவாதம் உட்பட பல்வேறு காரணங்களினால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பலரை நேரிலேயே பார்த்தும், பழகியும் வருவதாலும் நிதர்சனத்தை நித்தம் நேரில் சந்திப்பதாலும் இந்தத் திரைப்படம் பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை.

ஆனால் இது மிக அவசியமான திரைப்படம். நமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்துகின்ற அருமையான திரைப்படமும்கூட.

தங்கள் தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மகன்/மகள்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கைக்காகவே தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்த அப்பாக்களையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்…

அம்மாக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கலாம்.

அதுபோன்ற ஒரு அப்பாவை பேரன்பு படத்தில் மம்முட்டி உருவத்தில் பார்த்தேன்….

2000-ல் எங்கள் நிறுவன அனிமேஷன் சிடிக்கள் மிகப் பிரபலம் (இப்போது அவற்றை APP தொழில்நுட்பத்துக்கு மாற்றிவிட்டேன்) என்பதாலும், என் நிறுவனத்தின் தலைமை ஒரு பெண்ணாக இருப்பதாலும் (நான்), சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் ஒருவித பாதுகாப்பு உணர்வுடன் என்னை அணுகுவார்கள்.

எங்கள் நிறுவனம் சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும்  அனிமேஷன் பிரிவின் மூலம் கதை பாட்டு என கார்ட்டூன் அனிமேஷன் சிடிக்கள் தயாரித்து வந்ததால், இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளை அழைத்து வந்து சில மணி நேரங்கள் அவற்றை பார்க்க விருப்பப்படுவார்கள்.

சிடியை வாங்கிச் சென்று அவர்கள் வீட்டில் பார்க்கலாம் என்றாலும் அவர்கள் மறுப்பார்கள். ஏனெனில் வீட்டில் ஓரிடத்தில் அமர்ந்து தனியே பார்ப்பதைவிட வெளியுலகில் மாறுபட்ட சூழலில் இருக்கவே விரும்புகிறார்கள். மேலும் படம் வரைபவர்களையும், அனிமேஷன் செய்பவர்களையும் கவனிக்கவும் ஒரு வாய்ப்பாக இருந்ததும் அவர்களின் விருப்பத்துக்கு மற்றொரு காரணம்.

நான் மீட்டிங், பிராஜெக்ட் டிஸ்கஷன்  என அலுவலக விஷயமாக வெளியில் சென்றிருக்கும் நேரம் தவிர்த்து நான் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் மட்டும் அவர்களை என் நிறுவனத்தில் அனுமதிப்பேன்.

அந்த சிடிக்களைப் பார்க்கும் குழந்தைகள் அவர்களும் அதுபோல வரைய விரும்புவார்கள். ஆசையை கண்களில் அல்லது கை அசைவுகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் முடிந்த அளவுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி வந்தேன்.

ஓரிடத்தில் அவர்களை அமர வைத்து கான்சன்டிரேட் செய்து ஒரு காட்சியை பார்க்க வைப்பதும்  ஒரு  ‘பயிற்சியே’. இது எந்த அளவுக்கு அவர்களை மேம்படுத்தும் என்பது எனக்கு தெரியாவிட்டாலும், மனதளவில் அவர்களுக்கு  ‘வென்டிலேஷன்’ கிடைக்க உதவியாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

அம்மா மட்டுமல்ல அப்பாக்களும் கேர் டேக்கர்களாக… 

அவர்களின் கேர் டேக்கராக அம்மாக்கள் மட்டுமல்ல அப்பாக்களும் இருக்கிறார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு இருவரும் சேர்ந்தே கேர் டேக்கர்களாக இருக்கிறார்கள்.

கூடவே வருவார்கள். எத்தனை மணிநேரம் ஆனாலும் பொறுமையாகக் காத்திருப்பார்கள். மற்ற குழந்தைகளின் பெற்றோர்களைப் போலவே தங்கள் குழந்தைகள் குறித்தும் பெருமையாகப் பேசுவார்கள்.

எனக்குத் தெரிந்து ஒரு சிறப்புக் குழந்தையின் அப்பா வீட்டில் இருந்தே வேலை (Work From Home) செய்துகொண்டு அந்தக் குழந்தையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டதையும் நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். மனைவி இருந்த வரை இருவரும் பார்த்துக்கொள்ள, இறந்தபிறகு அப்பா மட்டுமே கேர் டேக்கர்.

18 வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் தன் இரு கைகளையும், ஒரு காலையும் இழந்த ஒரு சிறுவனின் அப்பா அவனை என்னிடம் அழைத்துவந்தார். அந்தச் சிறுவன் பெயர் ஜனா.

அவனுக்காக எல்லா விதங்களிலும் போராடி அவனை வளர்த்து வந்தார். தன் தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன் மகனின்  வாழ்க்கைக்காகவே தன் வாழ்க்கையை பணயம் வைத்தார்.

பள்ளி முடிந்ததும் கிராஃபிக்ஸ், பெயிண்டிங், ஸ்போர்ட்ஸ், மியீசிக், டான்ஸ் என ஒரு வகுப்பு விடாமல் எல்லா வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வார். ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பு. இப்படியே வருடம் முழுவதும்.

எல்லா வகுப்பிலும் அவனால் சேர முடியாவிட்டாலும் வெளியில் இருந்தே பார்க்க அனுமதி பெற்று அவனுடன் கூடவே அமர்ந்து அவனுடைய உணர்வுகளுக்கு வடிகாலாய் அவனுடன் பேசிக்கொண்டு அவனுக்கு எது வரும் வராது என ஆராய்ந்து, மிக நுணுக்கமாக உணர்வுப்பூர்வமாக மட்டுமில்லாமல் அறிவுப்பூர்வமாகவும் சிந்தித்து வளர்த்தார்.

ஒரு கட்டத்தில் அவனுக்கு கிரியேட்டிவிடியில் ஆர்வம் இருப்பது தெரிய வர அவன் வாயில் கலர் பென்சில்களை வைத்து வரைய உதவினார்.

அவன் வாய் மூலமே கலர் பென்சில் மற்றும் பிரஷ் பிடித்து படங்கள் வரையும் திறன் பெற்றான். திறன் பெற்றதோடு தன் தனித்துவத்தையும் வெளிப்படுத்தினான்.

அவன் வரைபவற்றை சேகரித்துக்கொண்டே வந்தார்.

அந்த காலகட்டத்தில் அவனுக்கு கிராஃபிக்ஸில் சில பயிற்சிகள் கொடுத்தோம். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் முடிந்த அளவுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு உதவினேன்.

அவன் வாழ்க்கையை அனிமேஷனில் டாக்குமெண்டரி ஃப்லிம் ஒன்றும் தயாரித்துக்கொடுத்தோம்.

மேலும், என் தலைமையில் எடிட்டராக இருந்து நான் நடத்தி வந்த ஒரு தொழில்நுட்ப பத்திரிகையில் அவனது நேர்காணலை வெளியிட்டிருந்தோம்.

மீடியா நண்பர்கள் மூலம் எல்லா  மீடியாக்களிலும் அவன் திறமை சார்ந்த நேர்காணல்களை வரச் செய்து சதா அவன் நினைவாகவே இருந்து அவனை வளர்த்தார்.

அவனுடன் அவன் அப்பா மட்டுமே வருவார். அதற்காக அவன் அம்மாவுக்கு பாசம் இல்லை என்ற பொருள் இல்லை.

வீட்டில் இருந்து அவனுக்குத் தேவையான அத்தனை அடிப்படை வேலைகளையும் செய்வது அவன் அம்மாதான்.

பல்தேய்ப்பது, குளிப்பது, ஆடை அணிவது என சகலத்துக்கும் அப்பா அம்மா துணை தேவை.

சில சினிமாத்துறை நண்பர்களின் மூலம், உதவும் நல்லுள்ளங்கள் கொண்ட சில நடிகர்களிடம் நிதி உதவி பெற்று கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கிகொடுத்து அவனுடைய திறமையை ஊக்கப்படுத்திக்கொண்டே வந்தார்.

அந்தச் சிறுவன் இளைஞனாகி இன்று ஒரு மீடியா நிறுவனத்தில் கிராஃபிக்ஸ் பிரிவில் பணியில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அந்த நிறுவனத்தின் கிராஃபிக்ஸ் துறையின் ஒரு  பிரிவை தலைமை தாங்கிச் செல்வதாகவும் அறிந்தேன்.

ஸ்ரீபத்மகிருஷ் மூலம்…

எங்கள் நிறுவன வேலைகளுடன் இதுபோன்ற சேவை சார்ந்த பணிகளை இணைக்கும்போது பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது என்பது கேள்விக்குறியானதால் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகவே பிரத்யேகமாக 2007-ம் ஆண்டு எங்கள் அப்பா அம்மா பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினேன்.

அதன் பின்னர், என் காம்கேர் நிறுவனம் வாழ்வாதாரத்துக்காக…. எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் ஆத்மதிருப்திக்காக… என்றானது.

அந்த வகையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ‘விசியோ எக்ஸாம்’ என்ற ஸ்க்ரைப் சாஃப்ட்வேர் தயாரித்துள்ளோம். பீட்டா வெர்ஷனில் உள்ளது. ஸ்க்ரைப்களின் உதவியின்றி அவர்களே கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் தேர்வெழுத உதவும் சாஃப்ட்வேர் அது.

வருடா வருடம் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து, ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்தும் கெளரவப்படுத்துகிறோம்.

மீண்டும் பேரன்பு திரைப்படத்துக்கே வருவோம்…

பேரன்பு – ‘நாம் ஒவ்வொருவரும் எத்தனைக் கொடுத்து வைத்தவர்கள்’ என்பதை உணர வைக்கிற திரைப்படம்.

வாழ்க்கையும் இயற்கையும்… வெறுப்பானது, அதிசயத்தக்கது, கொடூரமானது, அற்புதமானது, புதிரானது, ஆபத்தானது, சுதந்திரமானது, இரக்கமற்றது, தாகமானது, விதிகளற்றது, முடிவற்றது,பேரன்பானது… என்பதை உணர்த்தும் திரைப்படம்.

நாம்தான் வாழப் பழக வேண்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

பிப்ரவரி 12, 2019

குறிப்பு:

நான் எழுதிய பேரன்பு திரைப்பட விமர்சனம் படிக்காதவர்களுக்காக இந்த லிங்க்:

http://compcarebhuvaneswari.com/?p=3523

(Visited 46 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari