பெண்!

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு டிடிபி சென்டர். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் இவற்றுடன் ஜெராக்ஸ், ஆதார் அட்டை சம்மந்தமான வேலைகள் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.

அவர்கள் கடையில் 18 முதல் 20 வயதில் ஐந்தாறு இளம் பெண்கள் பணி புரிகிறார்கள். அந்தக் கடை ஓனர் தனது கிராமத்தில் இருந்து அவர்களை அழைத்து வந்து வீடெடுத்துக்கொடுத்து வேலையும் கற்றுக்கொடுத்து சாப்பாடும் போட்டு நல்லபடியாக கவனித்துக்கொள்கிறார். மாதாமாதம் சம்பளத்தை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

நான் எப்போதாவது அந்தக் கடைக்கு ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதுண்டு. அப்போதெல்லாம் என் கண்களில்படும் செயல் என்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.

அந்த கடைக்கு நிறைய டீன் ஏஜ் மாணவர்கள் வருவார்கள். வேலையின் ஊடே அவர்கள் அந்தப் பெண்களிடம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதும் அந்தப் பெண்கள் அதற்கு வெட்கப்பட்டு சிரிப்பதும், பின்னர் கொஞ்சம் பழகிய பின்னர் அவர்களும் அவ்வாறே பேசத் தொடங்குவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த மாணவர்கள் தேவையே இல்லாமல் அந்த பெண்களை தெரிந்தும் தெரியாமலும் தொட்டுத்தொட்டுப் பேசுவதும் தொடர்ந்தது. அதையும் அவர்கள் மறுக்கவில்லை.

ஒருநாள் பொறுக்க முடியாமல் அந்தக் கடை ஓனரிடம் ‘ஏன் சார் இப்படி அந்த மாணவர்களை அனுமதிக்கிறீர்கள்…’ என்றேன் மெதுவாக.

அதற்கு அவர் என்னை அலுவகத்தினுள் அழைத்துச் சென்று ‘மெதுவாக பேசுங்கள் மேடம்… இந்த ஏரியாவில் ரூம் எடுத்து படிக்கும் வெளியூர் மற்றும் வெளி மாநில மாணவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களைக் கண்டித்தாலோ அல்லது அவர்களின் சின்ன சின்ன சேட்டைகளை அனுமதிக்காவிட்டாலோ அவர்கள் இந்தக் கடையை விட்டு வேறு  கடைக்குச் சென்றுவிடுவார்கள். தெருவுக்கு 4 டிடிபி செண்டர்கள் இருக்கிறதே… என் வியாபாரம் படுத்துவிடும்.

நான் கண்டித்தால் நான் இல்லாத சமயம் வருவார்கள்… அதற்கு பதிலாக நாம் கண்டும் காணாமல் செல்வதுதான் நல்லது’  என்றாரே பார்க்கலாம்.

எனக்கு அங்கு வேலை செய்யும் கிராமத்துப் பெண்கள் பலிகடா போலவே கண்களில் தெரிந்தார்கள்.

இதில் பலிகடா ஆக்கப்படுவது அந்தப் பெண்கள் மட்டுமல்ல. அந்த இளம் வயது மாணவர்களும்தான். அவர்களுக்கும் சரியான வழிகாட்டல் இல்லை.

ஒரு தவறான செயலை செய்பவர்களைவிட அதை எதிர்க்காமல் அனுமதிப்பதுதான் மாபெரும் தவறு.

இவர்கள் சமுதாயத்தின் ஒரு Sample தான்.

இதுபோல ஒவ்வொரு துறையிலும் பலர் தங்களை பலிகடாவாக்கிக்கொண்டுதான் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஏன் பலிகடா ஆக்கிக்கொள்ள வேண்டும்?

சிலருக்கு ஜீவனம்…

சிலருக்குப் பணம்…

சிலருக்கு புகழ்…

சிலருக்கு பணமும் புகழும்…

இப்படி பலிகடா ஆக்கிக்கொள்ளாமல் தங்களுக்கென கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்து ஜெயித்துக்கொண்டிருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ‘திமிர் பிடித்தவள்’, ‘அகங்காரி’, ‘கோபக்காரி’ போன்ற பட்டப் பெயர்கள் ஏராளம். அப்படிப் பட்டம் கொடுப்பது எண்ணிக்கையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்பதுதான் வருத்தத்தின் உச்சம்.

‘நான் ரொம்ப நல்லவள்’,  ‘நான் ரொம்ப நேர்மையானவள்’,  ‘நான் ரொம்ப கண்ணியமானவள்’ என்று சொல்வது வெகுவாகக் குறைந்து…

‘நான் மட்டுமே நல்லவள்’, ‘நான் மட்டுமே நேர்மையானவள்’,  ‘நான் மட்டுமே கண்ணியமானவள்’ என்று சொல்லும் மனப்பாங்கு ‘பெண்ணியம்’ பேசும் பெண்களிடம் அதிகரித்துவிட்டதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.

நம்மை நாம் மதிப்போம். அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். வாழ்க்கை சிலகாலம் மட்டுமே. சந்தோஷமாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்துவிட்டுச் செல்வோமே!

மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
மார்ச் 7, 2019

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari